Latest News :

ஹாலிவுட் தரத்தில் ஒரு அறிவியல் படம் ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’
Friday August-23 2019

ராவுத்தர் பிலிம்ஸ் சாரில் முகமது அபுபக்கர் தயாரிப்பி, அறிமுக இயக்குநர் யு.கவிராஜ் இயக்கியிருக்கும் படம் ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’. ஆரி ஹீரோவாக நடித்திருக்கும் இப்படத்தில் ஷஷூவி பாலா ஹீரோயினாக நடித்திருக்கிறார்.

 

கார்த்திக் ஆச்சார்யா இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், இயக்குநர்கள் அமீர், ஆர்.வி.உதயகுமார், கே.பாக்யராஜ், நடிகர் உதயா உள்ளிட்ட பிரபலங்களுடன் படக்குழுவினர் கலந்துக்கொண்டார்கள்.

 

நிகழ்ச்சியில் இயக்குநர் கே.பாக்யராஜ் பேசுகையில், “‘எல்லாம் மேல இருக்கறவன் பாத்துப்பான்’ என்ற தலைப்பைப் பார்க்கும்போது, இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை மேல இருக்கறவன் பாத்துப்பான் என்று விடாமல், அறிவியல் புனைக்கதையை வைத்துத் தமிழில் படமெடுக்க வேண்டுமென்று தயாரிப்பாளரும், இயக்குநரும் மெனக்கெட்டு முயற்சி எடுத்திருக்கிறார்கள் என்று ட்ரைலர் பார்க்கும்போது தெரிகிறது. ஆரியும் சிறப்பாக நடித்திருக்கிறார். அதேபோல், மற்ற தொழில்நுட்ப கலைஞர்களின் கடின உழைப்பும் தெரிகிறது. 

இப்ராஹிம் ராவுத்தர் நல்ல பெயர் சொல்லும் படங்கள் எடுத்தார். அவர் பெயரை சொல்லும் அளவிற்கு அவர் மகன் முகமது அபுபக்கர் இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். தமிழில் இனிமையாக பேசிய கதாநாயகிக்கு வாழ்த்துக்கள்.” என்றார்.

 

இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசுகையில், “திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கு வாய்ப்புக் கொடுத்தவர்கள் இப்ராஹிம் ராவுத்தரும், விஜயகாந்த் அவர்களும் தான். இன்று அவரில்லாமல் அவருடைய மகன் முகமது அபுபக்கர் தலைமையில் இந்த விழா நடக்கிறது. அவருக்கு வாழ்த்துக்கள். கவிராஜ் இம்மாதிரி படம் இயக்குவார் என்று எதிர்பார்க்கவில்லை. பொதுவாக கதாநாயகிகள் மேடையில் அதிகம் பேசமாட்டார்கள். ஆனால், இலங்கை பெண்ணாக இருந்தாலும் தமிழில் பேசி அசத்திவிட்டார். ஆரியின் நடிப்பும், படத்தேர்வின் பாணியும் எனக்கு மிகவும் பிடிக்கும்.” என்றார். 

 

படத்தின் இயக்குநர் யு.கவிராஜ் பேசுகையில், “நான் சின்னத்திரையில் இருந்து வந்தவன். என் சேனல் சன் டிவிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ராவுத்தர் பிலிம்ஸ்-ன் அபுபக்கர் கதை கேட்டதும் என் மேல் நம்பிக்கை வைத்து வாய்ப்புக் கொடுத்தார். அவரின் தந்தை இப்ராஹிம் ராவுத்தர் 1980, 90 களில் வெற்றிகரமான தயாரிப்பாளராக இருந்தார். அதேபோல அபுபக்கரும் வெற்றிபெற வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.

 

ஆரியிடம் கதைக் கூற சென்றேன். பாதி கதையைக் கூறிக் கொண்டிருக்கும்போதே என் வீட்டில் இருந்து ஒரு போன் வந்தது. அதைப் புரிந்துக் கொண்டு மீதிக் கதையை பிறகு கேட்கிறேன் செல்லுங்கள் என்று என்னை அனுப்பி வைத்தார். மறுநாளே நடிப்பதற்கு ஒப்புக் கொண்டார். அவர் மிகவும் நல்ல மனிதர். இயக்குநர் அமீருடன் மேடையில் இருப்பதில் பெருமையடைகிறேன்.

 

மேலும், இப்படத்தின் தலைப்பு எதைக் குறிக்கிறது என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது. பொதுவாக 'எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்' என்ற வார்த்தைக்கு அர்த்தம் கடவுள் என்று தான் கூறுவார்கள். ஆனால், இந்த படம் அறிவியல் சார்ந்த படம். கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்பது இன்னமும் சர்ச்சைக்குரிய விஷயமாகத் தான் இருந்து வருகிறது. அதேபோல், வேற்று கிரக வாசிகள் இருக்கிறார்களா? என்று கேள்விக்கான பதிலாக இந்த படம் இருக்கும். இது போன்று அறிவியல் சார்ந்த விஷயங்களைத் தமிழில் ஹாலிவுட் தரத்திற்கு கொடுக்க முயற்சி மேற்கொண்டுள்ளோம். இதுபோன்ற படங்களுக்கு ஆதரவு கொடுத்தால் தான் தமிழில் நல்ல திரைப்படங்கள் உருவாகும்.” என்றார்.

 

நடிகர் ஆரி பேசுகையில், ”ராவுத்தர் பிலிம்ஸ் அறிமுகமில்லாத பல இயக்குநர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். முகவரியில்லாத பலருக்கும் முகவரி கொடுத்திருக்கிறார்கள். அதே நேரத்தில் இப்படத்தில் ஒப்பந்தமாகும் நேரத்தில் நான் நடித்த ‘நாகேஷ் திரையரங்கம்’ வெளியாகவிருந்தது. அப்படம் வெற்றியடைந்தாலும், தோல்வியடைந்தாலும் சம்பளத்தில் ஏற்ற இறக்கம் இருக்காது என்று கூறினார்கள் ராவுத்தர் பிலிம்ஸ் நிறுவனத்தார்கள். இந்த தலைமுறையில் ஏலியன் வைத்து எடுக்கும் படத்தில் நான் நடித்திருப்பதில் பெருமையடைகிறேன். இயக்குநர் கவிராஜ் கிராஃபிக்ஸ் பற்றிய அறிவு இருக்கிறது. அவர் பாதி கதைக்கூறும்போதே நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன்.

 

அறிவியல் புனைகதைகள் மற்றும் ஏலியன் சார்ந்த விஷயத்தைப் படமாக்க ஹாலிவுட்டில் ரூ.1000/- கோடி செலவு செய்வார்கள். ஆனால், நாங்கள் அந்த தரத்திற்கு இணையாக EFX என்று சொல்ல கூடிய கிராபிக்ஸ் காட்சிகளுக்கு மட்டும் ஒரு வருடம் உழைத்திருக்கிறோம். அபுபக்கரின் கதாபாத்திரம் அவர் இயல்பு போலவே அமைந்திருக்கிறது. அவர் மூலம் இன்னும் பல இயக்குநர்கள் உருவாவார்கள் என்பதில் ஐயமில்லை.” என்றார்.

 

தயாரிப்பாளர் முகமது அபுபக்கர் பேசுகையில், ”தந்தையின் ஆசியுடன் முதல் படம் நடித்து தயாரித்திருக்கிறேன். படக்குழுவிற்கு நன்றி. என் தந்தையின் புகழ் குறையாத வண்ணம் மேலும், இது போன்று தரமான படங்களைத் தயாரிப்பதன் மூலம் பல தொழில் நுட்ப கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுப்பேன்.” என்றார்.

 

லக்‌ஷ்மன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு கெளதம் ரவிச்சந்திரன் படத்தொகுப்பு செய்திருக்கிறார். கலையை பி.சேகர் நிர்மாணிக்க, கார்த்திக் ஆச்சார்யா இசையமைத்திருக்கிறார். டேஞ்ஜர் மணி சண்டைக்காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்.

Related News

5524

”மக்களும், சினிமாவும் மாற வேண்டும்” - ‘வாங்கண்ணா வணக்கங்கண்ணா’ பட விழாவில் திருநாவுக்கரசு பேச்சு
Tuesday April-23 2024

தமிழ் திரையுலகில் புதுமுக கலைஞர்கள் ஒன்றிணைந்து உருவாக்கும் படைப்புகளுக்கு ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பு கிடைப்பதுண்டு...

நினைவுச் சின்னங்கள் மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்ட ’கல்கி 2898 AD’ படத்தின் அஸ்வத்தாமா கதாபாத்திரம்!
Monday April-22 2024

இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில், பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே உள்ளிட்ட இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகும் பிரமாண்டமான திரைப்படம் ’கல்கி 2898 AD’...

நான்கு கதைகளைக்கொண்டு உருவாகும் ‘நிறம் மாறும் உலகில்’!
Monday April-22 2024

அறிமுக இயக்குநர் பிரிட்டோ.ஜெபி இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ‘நிறம் மாறும் உலகில்’...