Latest News :

இயக்குநரை நெகிழ செய்த செளந்தர்யா! - படவிழாவில் ஆர்.வி.உதயகுமார் கூறிய ரகசியம்
Tuesday August-27 2019

’தண்டகன்’ இசை வெளியீட்டு விழாவில் பேசிய பிரபல இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், மறைந்த நடிகை செளந்தர்யா பற்றி இதுவரை வெளிவராத ரகசியம் ஒன்றை பகிர்ந்துக் கொண்டார்.

 

‘தண்டகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம், நடிகர் அஸ்வின், இயக்குநர் ஆர்.பி.பாலா, நடிகை சனம் ஷெட்டி உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டார்கள்.

 

நிகழ்ச்சியில் பேசிய ஆர்.வி.உதயகுமார், “இங்கே இயக்குநரைப் பற்றி  நடிகை தீபா பேசும் போது அப்பா என்று அழைத்தார் . அதைக் கேட்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது. உலகம்  சினிமாவைப் பற்றி தவறாகப் பேசும் போது  ஒரு நடிகை இயக்குநரை அப்பா என்று அழைப்பது எவ்வளவு பெரிய விஷயம்? எவ்வளவு பாதுகாப்பாகவும்  மகிழ்ச்சியாகவும் உணர்ந்திருந்தால் இப்படிக் கூறி இருப்பார்?

 

சினிமா ஒரு நல்ல அருமையான தொழில் .இங்கே ஒரே குடும்பம் என்ற உணர்வு இருக்கிறது  .இங்கு அன்பும் பாசமும் இருக்கிறது. அது பலருக்கும் தெரிவதில்லை. நான் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். இதுவரை சொல்லாத விஷயம் அது. நான் 'பொன்னுமணி' படத்தில் சௌந்தர்யாவை அறிமுகப்படுத்தினேன்.

 

கார்த்திக்குடன் அவரை ஒரு நாள் படப்பிடிப்பில் நடிக்க வைத்தேன். அவர்தான் கதாநாயகி என்று உறுதி செய்யப்படவில்லை. நடிப்பை பார்த்துவிட்டுச் சொல்லலாம் என்று இருந்தேன். அவருக்கு சாவித்திரி நடித்த பழைய வீடியோ கேசட்டுகளை கொடுத்து பார்க்கச் சொன்னேன். ஒரே ஒரு நாள் நடித்திருந்தார். அப்போது நாங்கள் பொள்ளாச்சியில் இருந்தோம். அப்போது அவர் நடித்த காட்சிகளை சென்னையிலிருந்து ஜெமினி லேபிலில் இருந்து  எடுத்த ரஷ்ஷை வரவழைத்து அங்கு உள்ள ஒரு தியேட்டரில் போட்டுப் பார்த்தோம். கூடவே மனோரமா ஆச்சியும் சிவகுமார் அண்ணனும் பார்த்தார்கள். அவர்கள் அவரவர் ஒரு கருத்து சொன்னார்கள். ஆச்சி அப்போது சொன்னார் இவள் சாவித்திரி மாதிரி வருவாள் என்றார் .இது எவ்வளவு பெரிய வார்த்தை.

 

சௌந்தர்யா முதலில் என்னை அண்ணா என்றார். பிறகு அழைக்கும் போதெல்லாம் அண்ணன் என்றழைத்தார். எனக்கு ஒரு மாதிரியாகிவிட்டது. இன்னொருவர் மத்தியில் பேசும் போது சார் என்று கூப்பிடு என்றேன். ஆனால் அவர் அண்ணா என்று அழைத்தது முதல்  நான் அண்ணனாகவே இருந்தேன். கடைசிவரை சௌந்தர்யாவுக்கு நான் அண்ணனாகவே இருந்தேன். என் மீது தனிப்பட்ட முறையில் மரியாதைவும் அன்பும் அதிகம் உள்ள நடிகை சௌந்தர்யா.  பொன்னுமணி படத்தில் நடித்த போதே இரண்டாவது படம் சிரஞ்சீவி படத்திற்கு நான்தான் சிபாரிசு செய்தேன்,  விரைவில் பெரிய நடிகையாக்கி விட்டார்.

 

அவர் வளர்ந்து நடிகையாகி ஆயிரம் பிரச்சினைகளிலும் காதல் பிரச்சினைகளிலும் சிக்கிய போதெல்லாம் நான்தான் சென்னை, ஹைதராபாத் என்று போய் பஞ்சாயத்து செய்து விட்டு வருவேன். அவர் சொந்த வீடு கட்டியபோது என்னை அழைத்திருந்தார். “நீங்கள் வந்தால்தான் வீட்டுக்குள் செல்வேன்” என்றெல்லாம் கூறியபோதும் என்னால் செல்ல முடியவில்லை. மாமன் மகனைத் திருமணம் செய்ய முடிவான போதும் அழைத்தார். போக முடியவில்லை. தமிழில் 'சந்திரமுகி'யாக  வெற்றி பெற்ற படம்  கன்னடத்தில் ’ஆப்தமித்ரா’ என்ற பெயரில் வாசு எடுத்திருந்தார். அதில் சௌந்தர்யா தான் நடித்திருந்தார். எனக்கு ஒருநாள் போன் செய்தார், “அண்ணா  என் சினிமா கதை இத்துடன் முடிந்து விட்டது. நடிப்பு வாழ்க்கை  முடிந்துவிட்டது  இனிமேல் நான் படங்களில் நடிக்க மாட்டேன். ஆப் த மித்ரா தான் என் கடைசி படம்,  நான் இப்போது இரண்டு மாத கர்ப்பமாக இருக்கிறேன்” என்று என்னிடமும் என் மனைவியிடமும்  மாலை ஏழரை மணிமுதல் எட்டரை மணி வரை ஒரு மணி நேரம் பேசிக்கொண்டிருந்தார். தன் அண்ணனின் வற்புறுத்தலால்  பிஜேபி கட்சிக்காக பிரச்சாரத்துக்கு செல்வதாகக் கூறினார்.

 

மறுநாள் காலை ஏழு முப்பதுக்கு டிவி பார்த்தபோது என்னால் ஜீரணிக்க முடியவில்லை. அதிர்ச்சியாக இருந்தது .அவர் விபத்தில்  இறந்துவிட்டார். அவர் வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு செல்ல முடியவில்லை, திருமணத்திற்கு செல்ல முடியவில்லை, இறப்புக்கு செல்லலாம் என்று அவர் வீட்டுக்குச் சென்றேன். மிக பிரம்மாண்டமான வீடு கட்டியிருந்தார். உள்ளே சென்ற போது எனது  படத்தை பெரிதாகப்போட்டு மாட்டியிருந்தார். என்னால் அழுகையை அடக்க முடியவில்லை. அப்படிப்பட்ட நடிகை சௌந்தர்யா. இதை  எதற்காகச் சொல்கிறேன் என்றால் சினிமா அருமையான ஒரே குடும்பம் போன்ற உணர்வுள்ள தொழில்.

 

இங்கே இயக்குநரை  நடிகை தீபா அப்பா என்று அழைத்தார். அதற்காக இயக்குநர் வருத்தப்படத் தேவையில்லை. அது பெருமையான விஷயம். அப்படிப்பட்ட சினிமா இன்று எப்படி இருக்கிறது? இன்று ஒரு படம் எடுப்பது எவ்வளவு சிரமமாக இருக்கிறது?  அதை வெளியிடுவது எவ்வளவு  சிரமமாக இருக்கிறது?

 

இன்று எல்லா படங்களும் வெளியிட முடிகிறதா? பல புதிய பெரிய படங்கள் வெளியாகின்றன. சிறிய படங்கள் வெளியாகின்றன வசூல் தான் வரமாட்டேன் என்கிறது. அண்ணா, கலைஞர், புரட்சித்தலைவர், அம்மா என்று பல சினிமா ஆளுமைகள் இருந்த துறை இது. சினிமா அழியக்கூடாது. ஒரு டிக்கெட் 100 ரூபாய் விற்கிறது என்றால்  தயாரிப்பாளர்களுக்கும் 30 ரூபாய் . தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு 30 ரூபாய் என்றும் 40 ரூபாய் தியேட்டர்காரர்களுக்கும் சேருமாறு முறைப்படுத்த வேண்டும்.

 

ஒரு நடிகர் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார் என்றால் 10 லட்சத்தை  முன்பணமாகக்  கொடுத்து விட்டு 90 லட்சத்தை வசூலில் இருந்து எடுத்துக் கொடுக்கும்படி வரைமுறைப்படுத்த வேண்டும்  .

 

பெரிய ஹீரோக்கள் தங்கள் படம் மட்டும் ஓடினால் போதும் என்று நினைக்கிறார்கள். சினிமா பற்றி யாரும் கவலைப்படவில்லை. 100 கோடி, 60 கோடி, 50 கோடி என்று வாங்கி விட்டு தன் படம் ஓடினால் மட்டும் போதுமென்று நினைப்பதை  மாற்ற வேண்டும்.

 

அமெரிக்காவில் இருப்பது போல் இங்கேயும் வசூலில் பங்கு என்கிற முறை வரவேண்டும். அதனால் தான் அமெரிக்காவில் எல்லா படங்களும் ஓடுகின்றன.  ஒன்றை ஒன்று வசூலில் முறியடிக்கின்றன. இது போன்ற ஏற்பாடு செய்து இருப்பதால்தான் அங்கே எல்லாப் படங்களும் வெற்றி பெறுகின்றன.

 

இது புதிய விஷயம் அல்ல, இந்த முறைப்படுத்துதல் செய்தால் தான் சினிமா நன்றாக இருக்கும். இங்கே  ஒரு கூட்டம் மட்டும் சம்பாதித்துக் கொண்டே இருக்கிறது .ஒரு கூட்டம் மட்டும் இழந்து கொண்டே இருக்கிறது.

 

திரையைப்பார்க்க முடியாமல் இங்கே 450 படங்கள் முடங்கிக் கிடக்கின்றன.  ஒரு படத்திற்கு இரண்டு கோடி என்றால் கூட  ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இப்படி முடங்கிக் கிடக்கிறது. தயாரிப்பாளர் சங்கம் ,திரைப்பட வர்த்தக சபை, நடிகர் சங்கம் என்று பல சங்கங்கள் இருக்கின்றன ஆனால் யார் என்ன செய்கிறார்கள் என்று யாருக்குமே தெரியாது.

இப்படி இருந்தால் எப்படி சினிமா வளரும் ? இதில் மாற்றம் செய்ய வேண்டும்.

 

சினிமாவில் உள்ள ஒரு தவறான போக்கு ஒரு படம் ஓடி விட்டால் இயக்குநர்கள் தன்னால் தான் எல்லாம் நடந்தது  என்று தானாகவே முளைத்து வந்தது போல் தலைகால் புரியாமல் ஆடுகிறார்கள். ஒரு பட வெற்றிக்கு  அகந்தையுடன் இருந்தால் அடுத்தப்படம் தோல்வியடையும் போது யாரும் கூட இருப்பதில்லை.

 

இங்குள்ள  உள்ள பிரச்சினை என்னவென்றால்  நல்ல இயக்குநரை யாரும் கண்டு கொள்வதில்லை. நடிகர்கள்  யாருடனும் நட்புறவுடன் இருப்பதில்லை. திறமைசாலிகளை யாரும் கண்டு கொள்வதில்லை. இது மாற வேண்டும்.” என்று தெரிவித்தார்.

 

விழாவில் படத்தின் இயக்குநர் கே.மகேந்திரன் பேசும் போது, “நான் யாரிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றியதில்லை. சினிமாக்களை பார்த்துத்தான் சினிமாவைக் கற்றுக்கொண்டேன். 50 வயதுக்கு மேல் இயக்குநராக வந்திருக்கிறாரே என்று சிலர் நினைக்கலாம். ஆர்வத்திற்கும் ஈடுபாட்டிற்கும் வயது ஒரு பிரச்சினை இல்லை. மனசுதான் முக்கியம். என் மனம் இளமையாக இருக்கிறது. என் படம் பற்றி நான் விரிவாக புகழ்ந்து பேசிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்தப் படத்தை எடுத்திருக்கிறேன். நீங்கள்  பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்” என்றார்.

 

இப்படத்தை ராயல் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் தயாரித்துள்ளார் வி. இளங்கோவன், நாயகன் அபிஷேக் .அஞ்சு கிருஷ்ணா , ராட்சசன் வில்லன் 'நான்'சரவணன், எஸ்.பி. கஜராஜ் ,ஆதவ், ராம் , வீரா, ஒளிப்பதிவாளர் தளபதி ரத்தினம், இசையமைப்பாளர்  ஷ்யாம் மோகன், எடிட்டர் வசந்த் நாகராஜ் , சண்டைப் பயிற்சியாளர் பில்லா ஜெகன், நடன இயக்குநர்  ஸ்ரீ ஷெல்லி  ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Related News

5550

‘Thandakaaranyam’ Now Streaming on Amazon Prime Video!
Sunday November-23 2025

VR Dinesh and Kalaiyarasan’s recently released socio-political drama Thandakaaranyam is now streaming on Amazon Prime Video, and the film is witnessing a fresh wave of attention and conversations across India...

இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் தொடக்க திரைப்படமாக தேர்வான ‘அமரன்’!
Saturday November-22 2025

ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...

ரசிகர்கள் நிராகரிப்பு, காட்சிகள் ரத்து! - படுதோல்வியடைந்த கவினின் ‘மாஸ்க்’!
Saturday November-22 2025

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...

Recent Gallery