‘காக்கா முட்டை’ மூலம் கதை தான் எப்போதும் நாயகன் என்பதை அழுத்தமாக பதிவு செய்த இயக்குநர் மணிகண்டன், ‘குற்றமே தண்டனை’, ‘ஆண்டவன் கட்டளை’ ஆகிய படங்களை தொடர்ந்து ‘கடைசி விவசாயி’ என்ற படத்தை இயக்கியியிருக்கிறார். நீண்ட நாட்களாக படப்பிடிப்பில் இருக்கும் இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றிருப்பதோடு, படம் எப்போது வெளியாகும், என்ற எதிர்ப்பார்ப்பையும் ரசிகர்களிடம் ஏற்படுத்தியிருக்கிறது.
இப்படத்தில் நல்லாண்டி என்ற பெரியவர் பிரதான வேடத்தில் நடித்திருக்கிறார். விஜய் சேதுபதி, யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இதுவரை எந்த ஒரு நடிகரும் நடிக்காத ஒரு வேடத்தில் விஜய் சேதுபதி நடித்திருப்பது இப்படத்தின் கூடுதல் சிறப்பு.
இப்படம் குறித்து இயக்குநர் மணிகண்டன் கூறுகையில், “விவசாயத்தை ஒரு தொழிலாக பார்க்காமல், ஒரு வாழ்வியலாக பார்க்க வேண்டும். அதில் எவ்வளவு பேர் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள், அது எப்படி இருக்கிறது என்பது தான் கதையின் கரு. ஒரு கிராமத்தில் நல்ல விஷயங்களே நடக்காமல் இருக்கிறது. குலதெய்வம் கும்பிடாமல் இருக்கிறது, என்று அதை கும்பிட ஊர் தயாராகும். அதை கும்பிடும் வழிமுறைக்கு அனைவரும் ஒரு மரக்கா நெல் கொடுக்க வேண்டும். அப்போது தான் அவர்களுக்கு தெரியவரும், அந்த ஊரில் யாரும் விவசாயம் செய்யவில்லை என்று. 20 வருடமாக குலதெய்வத்தை கும்பிடவில்லை என்பதால் யாருக்குமே இந்த நெல் விஷயம் ஞாபகத்தில் இருக்காது. அப்போது அந்த ஊரில் வயதான பெரியவர் ஒருவர், சின்ன நிலத்தில் தனக்கான விவசாயத்தை மட்டும் பார்த்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார். 85 வயது மதிக்கத்தக்க பெரியவர், அவருக்கு காதும் அவ்வளவாக கேட்காது. அவர் உண்டு, தோட்டமுண்டு என்று இருப்பார். அந்த ஊரே அவரிடம் போய் நெல் கேட்கும். அவர் என்ன செய்கிறார், குலதெய்வக் கோயில் கும்பிடுவது எப்படி மாறியுள்ளது, வழிபாட்டு முறையில் நமக்கு இருக்கும் நம்பிக்கை என அனைத்தும் திரைக்கதையாக இருக்கும்.
கிராமத்தில் ஒரு துக்கத்தைச் சொன்னால் கூட நையாண்டியாக சொல்வார்கள். ஆகையால் படத்தில் காமெடியை தவிர்க்கவே முடியாது. படம் முழுக்க காமெடி இருந்துக் கொண்டே இருக்கும். நாகரீகம் வளர்வதற்கு முன்னாள் இருந்த மனிதர்களும், நாகரீகத்தில் உச்சத்தில் இருக்கும் மனிதர்களும் வரும் போது எப்படி காமெடி இல்லாமல் இருக்கும். அதே போல், அந்த உரையாடல் நம்மை யோசிக்க வைக்கும் விதமாகவும் இருக்கும்.
உசிலம்பட்டியைச் சுற்றி சுமார் 16 கிராமங்களில் படமாக்கியிருக்கேன். அங்கிருக்கும் விவசாய முறை ரொம்ப பழசு. நம்ம தமிழர்களோட விவசாய முறையை இன்னும் கையில் வைத்திருப்பது கரிசல்காட்டு விவசாயிகள் தான். அவர்களை கடைசி விவசாயிகளாகத் தான் பார்க்கிறேன். இந்தப் படத்தின் தலைப்பைப் பார்த்து விவசாயம் முடிந்துவிடப் போகிறதோ என்று நினைத்துவிடாதீர்கள். கிராமத்தில் இருப்பவர்களையே நடிக்க வைத்துள்ளேன். நேரடி ஒலிப்பதிவு என்பதால் அவர்களுடைய குரலிலேயே முழுப்படமும் இருக்கும். விஜய் சேதுபதியும், யோகி பாபுவும் சின்ன கேரக்டர் பண்ணியிருக்காங்க. இருவரது கேரக்டருமே ரொம்ப அருமையாக வந்துருக்கு. ஏன் அவர்களை நடிக்க வைத்தேன் என்று படம் பார்த்தால் தெரியும்” என்றார்.
இளையராஜா இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு தோட்டாதரணி கலையை நிர்மாணித்துள்ளார். கோவில் திருவிழா, நீதிமன்றம் என்று பிரம்மாண்டமான செட் போடப்பட்டுள்ள இப்படத்தில் நேரடி ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ரசிகர்களுக்கான பொழுதுபோக்கு படமாக மட்டும் இன்றி, யோசிக்க வைக்கும் படமாகவும் உருவாகியுள்ள இப்படம் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியாக உள்ளது.
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...
ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...