Latest News :

பாக்யராஜை ஹீரோவாக்கியதால் என்னை பைத்தியம் என்றார்கள்! - பாரதிராஜா
Thursday December-26 2019

பாக்யராஜை ஹீரோவாக நடிக்க வைத்த போது, என்னை பைத்தியம் பிடித்துவிட்டதா? என்று கேட்டார்கள், என்று ‘பச்சை விளக்கு’ திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் பாரதிராஜா ருசிகரமாக பேசினார்.

 

டிஜி திங் மீடியா நிறுவனம் சார்பில் டாக்டர்.மாறன் ஹீரோவாக நடித்து, இயக்கியிருக்கும் படம் ‘பச்சை விளக்கு’. இதில் புதுமுகங்கள் தீசா, தாரா, ‘அம்மணி’ உள்ளிட்ட சில படங்களில் நடித்த ஸ்ரீ மகேஷ், மனோபாலா, இமான் அண்ணாச்சி, நெல்லை சிவா, நந்தகுமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

 

சாலை பாதுகாப்புக்கான விழிப்புணர்வு படமாகவும், அதே சமயம், காமெடி, காதல் உள்ளிட பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த கமர்ஷியல் படமாகவும் உருவாகியுள்ள இப்படத்திற்கு ‘வேதம் புதிது’ தேவேந்திரன் இசையமைத்திருக்கிறார்.

 

இப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி பாரதிராஜா திரைப்படக் கல்லூரியில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் மொரிஷியஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பரமசிவம் பிள்ளை வையாபுரி, இயக்குநர்கள் பாரதிராஜா, கே.பாக்யராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டார்கள்.

 

நிகழ்ச்சியில் இயக்குநர் பாரதிராஜா பேசுகையில், “இன்று மீடியா வளர்ந்துள்ளது. நாங்கள் படம் எடுத்த காலத்தில் இரண்டு மூன்று பேர் தான் கேமராக்களோடு வருவார்கள். இன்று மாறன் படத்திற்கு இத்தனை பேர் வந்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. மாறனின் இந்தப்பச்சை விளக்குப் படம் அரசாங்கம் எடுக்க வேண்டிய படம். பொதுநல கருத்துள்ள படம். மேலும் படத்தில் கமர்சியலும் இருக்கிறது. இன்று நிறையபேர் யாரும் பயணத்தில் பச்சை விளக்கை மதிப்பதில்லை. பச்சை விளக்கு போடுமுன் போனால் நாம் போய்ச் சேர்ந்திடுவோம் என்று தெரிவதில்லை. நிதானம் இங்கு மிக முக்கியம். நிதானம் தவறினால் வாழ்க்கை  ஒரு நொடியில் போய்விடும். நிதானமாக சென்றால் நீண்ட நாள் வாழலாம். நீண்ட வருடங்கள் இருக்கலாம். அப்படி ஒரு அழகான படத்தை இயக்கியிருக்கிறார் டாக்டர் மாறன்.

 

பாக்யராஜ் தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது. பாக்யராஜ் என்னிடம் உதவி இயக்குநராக இருந்தபோது, வசனம் சொல்லிக் கொடுப்பதை கவனிப்பேன். வித்தியாசமாக சொல்லிக் கொடுப்பான். அவனையே நடிக்க வைக்கலாம் என்று தோன்றியது. கண்ணாடியை மாட்டி அவனை ஹீரோவாக்கினேன். அவன் வாழ்க்கை மாறியது. அவனை ஹீரோவாக்கிய போது சிலர் எனக்கு பைத்தியம் பிடித்ததா, என்று கேட்டார்கள். என் கண்ணில் அவன் கதாநாயகனாக தெரிகிறான் என்றேன். எனது கண்களுக்கு பாக்யராஜ் வாத்தியாராகவே தெரிகிறார் என்று சொன்னேன். அதன் பிறகு அவன் வளர்ந்தது வேறு. நான் விதை போட்டேன். அவ்வளவு தான். ஆனால், விதை போடுவதற்கு ஒரு துணிச்சல் வேண்டும். அதே போல, டாக்டர் மாறன் ஹீரோவாக வேண்டும் என்று துணிந்து நடித்திருக்கிறார். சூப்பர். என்னுடைய கதைக்கு என் மூஞ்சி. அவன் கதைக்கு அவன் மூஞ்சி. அழகாக இருக்கிறார் என்று என் வேடத்திற்கு ஜெமினி கணேசனை நடிக்க வைக்க முடியாது, சண்டை போட்டேன். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை இருக்கிறது. டாக்டர் மாறனின் துணிச்சலை நான் பாராட்டுகிறேன். அவரது தன்னம்பிக்கையை பாராட்டுகிறேன். ஒவ்வொரு மனிதருக்கும் தன்னம்பிக்கை வேண்டும். அது மாறனிடம் இருக்கிறது. அதை நான் பாராட்டுகிறேன்.

 

நான் இந்த ’பச்சை விளக்கு’ படத்தை இன்னும் பார்க்கவில்லை. இருந்தாலும் முன்னோட்டத்தை பார்த்த போது ஒரு புத்திசாலித்தனமாக காதலை சொல்லி, விபத்து குறித்தும் சொல்லியிருக்கிறார். வெறுமனே மாத்திரையை மட்டும் கொடுக்க முடியாது. மாத்திரை கொடுக்க முயற்சி செய்திருக்கிறார். குழந்தைகளுக்கு சாக்லேட் கொடுக்கிற மாதிரி ஹியூமர் கலந்து கொடுத்திருக்கிறார்.

 

இளையராஜாவிடம் எனக்கு பிணக்கு ஏற்படும் போது நான் இந்தியாவில் இருக்கின்ற ஆர்.டி.பரமன் உட்பட எல்லா இசையமைப்பாளர்களிடமும் வேலை செய்திருக்கிறேன். பிறகு இளையராஜாவிடம் வருவேன். இளையராஜாவுக்கும் எனக்கும் சில சமயம் ஆகாமல் இருக்கும். இருந்தாலும் இந்தியாவில் சிறந்த இசையமைப்பாளர் இளையராஜா ஒருவர் மட்டுமே.

 

ராஜாவுக்கு அடுத்து நான் ரொம்ப ரசித்தது தேவேந்திரன் இசையை. ஆனால், அவன் ஏன் பெருசா வரவில்லை என்று தெரியவில்லை. தேவேந்திரன் இசையமைத்த படத்திற்கு இளையராஜாவை அழைத்துச் சென்று காட்டினேன். அப்போது  இளையராஜாவுக்கும் எனக்கும் கூட சண்டை. பாடலாக இருக்கட்டும், பின்னணி இசையாக இருக்கட்டும் அற்புதமாக இருக்கும். உண்மையா உழைக்கிறவன். எங்கேயோ இருக்க வேண்டியவன். கொஞ்சம் சோம்பேறி. ஆனால், நல்ல கலைஞன். அப்பழுக்கு இல்லாதவன்.

 

இப்போதெல்லாம் ஹியூமர் சென்ஸோடு கதை சொன்னால் தான் ரசிகன் ஒத்துக்க கொள்கிறான். சீரியசாக கதை சொன்னால் ஒத்துக் கொள்ள மாட்டான். இந்த பச்சை விளக்கு படம் கமர்சியலாக நிற்கும்.” என்றார்.

 

Pachai Vilakku Audio Launch

 

பாக்யராஜ் பேசுகையில், “இந்தப்படமே ஒரு கலப்படமா இருக்கு. டிராபிக் பற்றிய படமா இருக்கும்னு நினைச்சேன். அப்படி ஆரம்பிச்சா இடையில டூயட்லாம் பாடி ஆடுறாங்க. இன்னைக்கு இருக்குற சினிமாவில் கருத்து சொல்ற மாதிரி படம் எடுக்குறது ரொம்ப கஷ்டம். இப்படத்தின் இயக்குநர் மற்றும் ஹீரோ மாறன் படித்த படிப்பை எல்லாம் பார்த்தேன். இப்படி ஒருவர் படமெடுக்க வந்திருப்பது பெரிய விசயம். அவருக்கு என் வாழ்த்துகள். இப்படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர் மணிமேகலை அவர்களுக்கும் வாழ்த்துகள். எம்.ஜி.ஆர் நடித்த பழைய பச்சை விளக்கு படத்தில்  "ஒளிமயமான எதிர்காலம் உள்ளத்தில் தெரிகிறது" னு  ஒரு பாட்டு வரும். அதுபோல் இப்பட டீமுக்கும் ஒளிமயமான எதிர்காலம் அமைய வாழ்த்துகிறேன்.” என்றார்.

 

விழாவில், அனைவருக்கும் நன்றி கூறி பேசிய இயக்குநர் மாறன், “நான் திரைத்துறைக்கு புதியவனாக இருந்தாலும் என்னுடன் பணிபுரிந்த அனைவரும் எனக்கு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். இப்படத்தில் டெக்னிக்கல் டீம் மொத்த பேரும் ஸ்ட்ராங்காக உழைத்தார்கள். அதற்கு அனைவருக்கும் நன்றி. இப்படத்தின் இசை அமைப்பாளர் மிக அற்புதமாக உழைத்தார். இப்படத்தின் படப்பிடிப்பில் நிறைய சிரமங்கள் இருந்தது. அதையெல்லாம் மீறி நல்லா எடுத்திருப்பதற்கான காரணம் எங்கள் டீம் தான். விதி மீறிய பயணமும், விதி மீறிய காதலும் சரியாக இருக்காது என்பதைத் தான் ’பச்சை விளக்கு’ படம் பேசுகிறது. நம் கலாச்சாரத்தை பேசும் படமாகவும் இப்படம் இருக்கும். இப்போது தியேட்டர்களுக்கு மக்கள் வருவதே அரிதாகி விட்டது. அதனால் இப்படத்தை பிரச்சாரமாக இல்லாமல் கமர்ஷியலாக கொடுத்துள்ளோம். இன்றைய விஞ்ஞானம் மனிதகுலத்திற்கான வளர்ச்சிக்காகத் தான் இருக்க வேண்டும். அது அழிவுக்காக இருந்துவிடக்கூடாது. என்பதையும் இப்படத்தில் பேசியுள்ளோம். அனைவரும் இப்படத்திற்கு ஆதரவு தர வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.” என்றார்.

 

Pachai Vilakku Audio Release

Related News

6036

’கே.டி. - தி டெவில்’ அனைவருக்கும் பிடித்த மாஸ் ஆக்‌ஷன் படமாக இருக்கும் - துருவ் சர்ஜா நம்பிக்கை
Saturday July-12 2025

கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான  KVN Productions வெங்கட் கே...

நடிகைகளை உருட்டும் இயக்குநர் நான் அல்ல! - ’உருட்டு உருட்டு’ பட விழாவில் விக்ரமன் பேச்சு
Saturday July-12 2025

ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ்  என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு  ஜெய்சங்கர் தயாரிப்பில்,   பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில்,  சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...

”’பீனிக்ஸ்’ நாயகன் சூர்யாவுக்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது” - இயக்குநர் அனல் அரசு புகழாரம்
Saturday July-12 2025

இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...

Recent Gallery