Latest News :

‘அழியாத கோலங்கள் 2’ என் திறமைக்கு கிடைத்த அங்கீகாரம் - இசையமைப்பாளர் அரவிந்த் சித்தார்த்
Friday December-27 2019

பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்திருக்கும் அரவிந்த் சித்தார்த், பல பக்தி ஆல்பங்களுக்கும், சின்னத்திரை தொடர்களுக்கும் இசையமைத்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்ற ‘அழியாத கோலங்கள் 2’ படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக எண்ட்ரியாகியிருக்கு அரவிந்த் சித்தார்த், தனது பின்னணி இசை மூலமாகவும், பாடல் மூலமாகவும் பெரும் பாராட்டுகளை பெற்றுவிட்டார்.

 

தனது இசைக்கு கிடைத்த அங்கீகாரத்தால் புது உற்சாகத்தோடு தமிழ் சினிமாவில் பயணிப்பதற்காக தயாராகியிருக்கும் அரவிந்த் சித்தார்திடம் நாம் பேசிய போது,

 

டிவி விளம்பரம், ரேடியோ விளம்பரம், போஸ்டர் விளம்பரம், கட்-அவுட் விளம்பரம், என்று ஒரு படத்திற்கு சாதாரணமாக கிடைக்க கூடிய எந்த ஒரு விளம்பரமும் இல்லாமலேயே மக்கள் மனதை கொள்ளைக் கொண்ட ‘அழியாத கோலங்கள் 2’ புரட்ச்சிகரமான படம் என்ற பாராட்டையும் பெற்றது. இது போன்ற படங்கள் இனி  வருமா, இந்த படம் மூலம்  தமிழ் சினிமா மீண்டும் புதிய தடத்தில் காலடி எடுத்து வைக்குமா என்று ஏக்கத்துடன் கேட்க வைத்துள்ளது. குடும்பத்துடன் படம் பார்த்து பல ஆண்டுகளாகி விட்டது என்று ஏங்கியவர்கள் அழியாத கோலங்கள் 2 படத்தை குடும்பத்துடன் பார்த்து ரசித்து இருக்கிறார்கள். படத்தில் கவர்ச்சி இல்லை, ஆபாசம் இல்லை, இரட்டை அர்த்தம் வசனங்கள் இல்லை, அருவருப்பான காட்சிகள் இல்லை. மொத்தத்தில் ஒட்டு மொத்த குடும்பமும் எவ்வித தயக்கமும் இல்லாமல் ஒன்றாக உட்கார்ந்து பார்க்க கூடிய தரமான படமாக ‘அழியாத கோலங்கள் 2’ அமைந்துவிட்டது.

 

இந்த படம் தயாரிக்க எடுத்து கொண்ட முயற்சிகள் அளவிட முடியாதவை. இது ஒரு சின்ன பட்ஜெட் படம்தான். ஆனால் இதில் பங்கேற்றுள்ள கலைஞர்கள் தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவரும் மத்திய மாநில விருதுகளை பல முறை அள்ளி வந்தவர்கள்.

 

ஷாஜிகருண் இந்திய அளவில் பேசப்படும் மிகப்பெரிய இயக்குநர், ஒளிப்பதிவாளர். செவாலியர் பட்டம் பெற்றவர். பலமுறை மாநில விருதுகளையும் தேசிய விருதுகளையும் வென்றவர். தற்போது வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இந்த விருதை இதற்கு முன் ஆஷா பாரக், ஜெயா பச்சன், ஷர்மிளா தாகூர், திலிப்குமார் ஆகியோர் பெற்று இருக்கிறார்கள்.

 

ஷாஜிகருண் அறிவுரையின் படி அவருடைய ஆலோசனை பெற்று அவருடைய நேரடி பார்வையில் தயாரிக்கப்பட்ட படம் ’அழியாத கோலங்கள் 2’. படத்தில் பங்கேற்ற ஒளிப்பதிவாளர், ஒலிப்பதிவாளர் அனைவரும் தேசிய விருது பெற்றவர்கள். அர்ச்சனா இரண்டு முறை தேசிய விருது பெற்றவர். ரேவதி, பிரகாஷ் ராஜ்,நாசர் போன்ற விருது பெற்ற திறமையான கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த படத்தில் நான் மட்டும் தான் புதிது.

 

Aravind Sidhartha

 

’அழியாத கோலங்கள் 2’ படத்திற்கு பெரிய இசை அமைப்பாளர் ஒருவரை போடவேண்டும் என்று ஒட்டுமொத்த யூனிட்டும் ஆலோசனை வழங்கியது. ஆனால் அர்ச்சனா என்மீது வைத்துள்ள அளப்பரிய நம்பிக்கையால் பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையே எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்தார்.

 

இந்த யூனிட்டில் நான் மட்டும் தான் எனது திறமையை நிரூபித்து காட்ட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டேன். மற்றவர்கள் அனைவரும் மக்கள் மனதை வென்றவர்கள்.

 

மொத்தம் 13 நாட்கள் நடந்த கம்போசிங்கில் கிட்டத்தட்ட 80 பாடல்கள் கம்போஸ் செய்யப்பட்டு அதில் ஒரு பாடலை தேர்வு செய்தார்கள். பாடல் கம்போஸ் செய்யும் போதே கவிப்பேரரசு வைரமுத்து, இந்த பாடல் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று நம்பிக்கை அளித்தார்.

 

படத்தில் ஒரு பாடல் மட்டும் தான் என்று சொன்ன போதே அந்த பாடல் எப்படி வரவேண்டும், அது எத்தகைய வெற்றியை கொடுக்க வேண்டும் என்பதை அர்ச்சனா தெளிவாக சொல்லி விட்டார்.

 

படத்தின் கதைக்களம் ஒரு இரவில் ஒரு வீட்டுக்குள்ளேயே நடக்கும் சம்பவங்கள் என்பதால் ரசிகர்களை எந்த விதத்திலும் சலிப்படைய வைத்துவிடக் கூடாது என்பதில் கவனம் இருந்தது. படத்தின் இயக்குநர் எம்.ஆர்.பாரதி-யின் சிறப்பான வசனங்கள் மற்றும் காட்சிகள் அதில் பங்கேற்ற கலைஞர்களின் பங்களிப்பு ரசிகர்களை கட்டிப்போட்டு விட்டது.

 

கவிப்பேரரசு வைரமுத்து பாடல் எழுத வேண்டும் என முடிவு செய்தார்கள். கவிஞரிடம் என்னை அழைத்து போய் அர்ச்சனா அறிமுகப்படுத்தினார். கவிஞர் என்னை ஏற இறங்க பார்த்து விட்டு பல்லவியை பாடிக்காட்டச் சொன்னார். டியூனைக் கேட்டவுடன் பின்னணி பாடகி சித்ராவுக்கு போன் போட்டு இந்த பாடலை நீங்கள் பாடித்தர வேண்டும். இந்த பாடல் மிக பெரிய ஹிட் ஆகும். பெரிய மாற்றத்தை கொண்டு வரும் என்று நம்பிக்கையுடன் சொன்னார். அதுமட்டுமின்றி பாடலின் வரிகள் புரியும் வகையில் பாடல் மிக்ஸிங் பண்ணுங்கள் என அறிவுரை கூறினார்.

 

இந்த படத்துக்கு பின்னணி இசை எப்படி இருக்க வேண்டும் என்று ஷாஜிகருண், அர்ச்சனா இருவரும் எனக்கு வகுப்பே எடுத்தார்கள். பின்னணி இசை தேவையான இடத்துக்கு மட்டுமே வர வேண்டும். ஸைலன்ஸ் நிறைய வேண்டும். ஸைலன்ஸே ஒரு இசைதான் என்று அவர்கள் சொன்ன போது, எனது நீண்ட கால ஆசையும் அதுதான் என மனம் குதூகலித்தது.

 

அதேபோல் பத்திரிகையாளர்களுக்கு படம் முதலில் போட்டு காட்டிய போது அவர்கள் மனதில்  நான் பதிந்து விட்டேன். பத்திரிகைகள் அனைத்தும் படத்தின் அபார வெற்றியை பாராட்டிய போது என்னையும் மறக்க வில்லை. எனது நெஞ்சார்ந்த நன்றிதனை அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

 

அட்மாஸ்பியர் எஃபெர்ட்ஸ்-க்கு (Atmosphere efforts) முக்கியத்துவம் கொடுத்து வசனங்கள் மீது எந்த நெருடல் இல்லாமல் உணர்வுகளுக்கு மட்டும் இசையை ரம்யமாக தெளித்த போது நான் எப்படியும் ஜெயித்துவிடுவேன் என்ற நம்பிக்கை எனக்கு வந்துவிட்டது.

 

ஒரு படம் வெற்றி பெற்றால் தான் அதில் பங்கேற்ற கலைஞர்கள் மக்களால் போற்றப்படுவார்கள். ’அழியாத கோலங்கள் 2’ போன்ற தரமான படங்கள் இனி நிறைய வரும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. வாய்ப்பு தந்த ஷாஜிகருண், அர்ச்சனா, எம்.ஆர். பாரதி ஆகியோருக்கு நன்றி கடன் பட்டுள்ளேன்.

 

Music Director Azhiyatha Kolangal 2

 

சூப்பர் ஸ்டார் ரஜினி சார் மற்றும் தனுஷ் சார் படங்களுக்கு இசை அமைக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. அதுபோல இயக்குநர் சமுத்திரகனி மற்றும் வெற்றிமாறன் இயக்கும் படங்களுக்கு இசை அமைக்க வேண்டும் என்பது என் ஆசை.

 

உலக நாயகன் கமல் சார் படத்தில் இசை அமைக்க வாய்ப்பு கிடைத்தால் அது ஒரு பெரிய அனுபவமாக இருக்கும்.

 

என்று தனது வெற்றியோடு, எதிர்கால ஆசை மற்றும் கனவுகள் குறித்தும் நம்மிடம் பகிர்ந்துக்கொண்ட இசையமைப்பாளர் அரவிந்த் சித்தார்த், வாய்ப்பு கிடைத்தால் தனது திறமையை நிரூபிக்க தயாராக இருக்கிறார்.

Related News

6046

இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் தொடக்க திரைப்படமாக தேர்வான ‘அமரன்’!
Saturday November-22 2025

ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...

ரசிகர்கள் நிராகரிப்பு, காட்சிகள் ரத்து! - படுதோல்வியடைந்த கவினின் ‘மாஸ்க்’!
Saturday November-22 2025

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...

Recent Gallery