Latest News :

”என்னை நானே செருப்பால் அடித்தது போல் இருந்தது” - ‘பாரம்’ பற்றி மிஷ்கின் பேச்சு
Friday February-14 2020

ப்ரியா கிருஷ்ணசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பாரம்’ திரைப்படம் தேசிய விருது பெற்றதோடு, அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ரெக்லெஸ் ரோஸெஸ் (Reckless Roses) நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தை இயக்குநர் வெற்றிமாறன் தனது கிராஸ் ரூட் பிலிம்ஸ் நிறுவனம் மூலம், எஸ்.பி சினிமாஸ் சார்பில் வெளியிடுகிறார்.

 

விரைவில் வெளியாக உள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் மிஷ்கின், ராம் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டார்கள்.

 

நிகழ்ச்சியில் எஸ்.பி.சினிமா கிஷோர் பேசுகையில், “எனக்கு இந்தப்படத்தை வெளியிட அனுமதித்த தயாரிப்பாளருக்கும் இயக்குநர் வெற்றி மாறனுக்கும் நன்றி. இப்படம் அனைவரும் பார்க்க வேண்டிய நல்ல திரைப்படம். இப்படத்தில் இணைந்ததில் மகிழ்ச்சி. இப்படத்தை ஊடகங்கள் ஆதரிக்க வேண்டும். நீங்கள் தான் அனைவரிடமும் இப்படத்தை எடுத்து செல்ல வேண்டும்.” என்றார்.

 

தயாரிப்பாளர் ஆர்த்ரா ஸ்வரூப் பேசுகையில், “நான் ஒரு மும்பை பெண்.  இந்த வாழ்க்கையை பற்றி எதுவும் தெரியாது. இதைப்பற்றி அறிந்த போது அது எனக்கு முற்றிலும் புதிதாக இருந்தது. என் அம்மா ப்ரியா கிருஷ்ணசாமி இந்தக்கதையுடன் வந்தபோது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஆனால் கற்றுக்கொள்ள அதில் நிறைய இருந்தது. இந்தப்படத்தில் நடித்த நடிகர்களின் நடிப்பு என்னை பிரமிப்பில் ஆழ்த்தியது. இக்கதை தந்த பாதிப்பில் இதை உருவாக்க உதவிக்கரம் நீட்ட நான் முடிவு செய்தேன். இம்மாதிரி முதியவர்களுக்கு அன்பு கிடைக்க  வேண்டும். என் அம்மாவுடன் இப்படத்தில் பணிபுரிந்தது மிகுந்த மகிழ்ச்சி. இந்தப்படம் அனைவரையும் கவரும்.” என்றார்.

 

இயக்குநர் ப்ரியா கிருஷ்ணசாமி பேசுகையில், “நாங்கள் இப்படத்தை மிக சிறிய படமாக தான் எடுத்தோம். தேசிய விருது கிடைத்தது இப்படத்திற்கு  நிறைய கதவுகளை திறந்து வைத்தது. இங்கு வந்திருந்து  பெரிய இயக்குநர்கள் பாரட்டுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. வெற்றிமாறன் இல்லையெனில் இந்தப்படம் ரிலீஸ் ஆகியிருக்காது. இயக்குநர் ராம் மூலம் தான் இயக்குநர் வெற்றிமாறனை சந்தித்தேன். இப்போது படம் ரிலீஸாகிறது. இவர்களின் பெரிய மனதிற்கு நன்றி. சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி இருவரும் நேரம் ஒதுக்கி இப்படத்திற்கு ஆதரவு தந்ததற்கு நன்றி. இப்படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.” என்றார்.

 

இயக்குநர் ராம் பேசுகையில், “தேசிய விருது வாங்கினால் மட்டும்  நல்ல படம் என சொல்ல முடியாது. வாங்காவிட்டால் கெட்ட படமும் கிடையாது. ’பாரம்’ நல்ல படம். கோவாவில் இயக்குநரை சந்தித்தபோது இந்தப்படத்தை திரைக்கு கொண்டு வாருங்கள் என்றேன். எப்படி கொண்டு வருவது எனத் தெரியாது என்றார். தமிழ் நாட்டுக்கு வாருங்கள் என்றேன் வந்தார். திரை விழாக்காளில் எப்படி படம் பார்க்கிறார்களோ அதே போல் தான் தமிழகத்து திரையரங்குகளிலும்  படம் பார்ப்பார்கள். இங்கு படத்தை கொண்டாடுவார்கள். பாரம் படத்தை வெற்றிமாறனிடம் அறிமுகப்படுத்தினேன் அவர் ரிலீஸ் செய்கிறார் நன்றி. இப்படம் நல்ல படம் வெற்றி பெற வேண்டியது அவசியம். தேடிப்போயாவது இந்தப்படத்தை பாருங்கள்.” என்றார்.

 

Baaram

 

இயக்குநர் வெற்றிமாறன் பேசுகையில், “இயக்குநர் ராம் மூலம் தான் இந்தப்படத்தை பற்றி அறிந்தேன். ராம் பார்த்துவிட்டாரல்லவா அது போதும், நான் ரிலீஸ் செய்கிறேன் என்றேன். எனது பெயர் மட்டுமே உபயோகிக்கப்பட்டது. SP Cinemas  தான் இந்தப்படத்தை வெளியிடுகிறார்கள். அவர்களுக்கு நன்றி. தமிழில் எல்லா வகையான படங்களும் ஆதரிப்பார்கள். ஆனால் இங்கு மற்ற மொழிகளில் மாதிரி சுதந்திர பாணி படங்களுக்கு பெரிய அளவில் வணிக ரீதியிலான  வெளியீடு கிடைப்பதில்லை. மீடியா ஆதரித்தால் மட்டுமே அப்படிபட்ட படங்கள் ஜெயிக்கிறது. நிறைய சமரசங்களுடன் தான் இந்தப்படத்தை செய்துள்ளார்கள். இந்த படத்தின் வணிக ரீதியான வெற்றி இதற்கு பிறகு வரும்  இது போன்ற படங்களுக்கு ஆதரவாக இருக்கும். இந்தபடத்தின் இயக்குநர்,  அம்மா, மகள் இருவருமே போராளிகள். இப்படிபட்ட ஒரு படத்தை எடுக்க தீர்மானித்து, எடுத்து தேசிய விருதுக்கு அனுப்பி, போராடி இப்போது திரைக்கு கொண்டு வருவது மிகப்பெரிய பயணம். நான் இந்தப்படத்தில் ஒன்றுமே செய்யவில்லை. இந்தப்படத்தை வெளியிட இயக்குநர் ராம் தான் அதிக சிரத்தை எடுத்து  உழைத்திருக்கிறார். அவருக்கு நன்றி. படத்தை பாருங்கள் உங்களுக்கு பிடிக்கும்.” என்றார்.

 

இயக்குநர் மிஷ்கின் பேசுகையில், “இயக்குநர் ராம் போனில் அழைத்து நாம் செய்ய ஆசைப்படும் படத்தை ஒருவர் எடுத்திருக்கிறார், வந்து பாருங்கள் என்றார். சரி பார்க்கலாம் என்று போனேன். ராம் சொன்னால் நல்லாருக்குமே என்று நினைத்து போய் பார்த்தால் இயக்குநரை பார்த்தவுடன் இந்தப்படம் நல்லாருக்காது என்று முடிவு செய்து விட்டேன். இவர் என்ன படம் எடுத்து விடுவார் என்று நினைத்தேன். ஒரு கலைஞனின் வாழ்க்கையே எதிர்பார்ப்பில் தான் இருக்கிறது. தலைவலியுடன் தான் இந்தப்படத்தை பார்க்க ஆரம்பித்தேன். படம் பார்த்த போது என்னை நானெ செருப்பால் அடித்தது போல் இருந்தது. நான் என்ன படம் எடுக்கிறேன் என கூச்சமாக இருந்தது. படம் பார்த்தவுடன் என் அம்மா அப்பா ஞாபகம் வந்து விட்டது. அவர்களை பார்க்க வேண்டும் என ஆசையாக இருந்தது. என் தந்தை தான் எனக்கு சினிமாவை அறிமுகப்படுத்தியவர். அவரை பார்த்து கொள்வதை மறந்து விட்டேன். நம் அம்மா அப்பாவை பார்த்து கொள்ள வேண்டும் என சொல்லிக்கொடுக்கும் படம் இது. நாங்கள் சொல்வதால் அல்ல உண்மையில் இந்தப்படம் ஒரு சத்தியம். வாழ்வை வாழச்சொல்லி கொடுக்கும் படம். இந்திய சினிமாவில் முதல் மூன்று இடங்களில் இந்தப்படம் இருக்கும். அன்பை சொல்லும் படம். இந்த நாடும் நகரங்களும் நம்மை அம்மா அப்பாவை விட்டு பிரிக்கிறது. நாம் நகரத்தை நோக்கி நகர்ந்து விட்டோம். நமக்கு பல பாடங்களை சொல்லி தரும் படம். இந்தப்படத்தை அனைவரும் பார்க்க வேண்டும். தமிழகத்தில் ஆறு ஏழு நகரங்களில் இந்தப்படத்தின் போஸ்டரை என் செலவில் ஒட்டப்போகிறேன். இது இந்தப்படத்திற்கு எனது நன்றிக்கடன். இந்தப்படம் என்னை மாற்றியது. இந்தப்படத்தை பாருங்கள் உங்கள் அம்மா அப்பாவை நேசிப்பீர்கள். உங்களை மாற்றும். தயவு செய்து இந்தப்படத்தை ஆதரியுங்கள்.” என்றார்.

Related News

6211

’காந்தாரா’, ’ஹனுமன்’ படங்கள் வரிசையில் ‘ரூபன்’ இடம் பிடிக்கும் - இயக்குநர் ஐயப்பன் நம்பிக்கை
Thursday April-18 2024

தமிழ் சினிமாவில் சிறுவர்களுக்கான படம் மற்றும் ஆன்மீகம் பேசும் திரைப்படங்கள் வெளியாவது அரிதாகிவிட்ட நிலையில், அப்படிப்பட்ட படங்கள் வெளியானாலும் அவை அனைத்து தரப்பினரையும் கவரக்கூடிய கமர்ஷியல் அம்சங்கள் இல்லாமல் வெளியாவதால் மக்களிடம் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை...

அம்பானி வீட்டு திருமணத்திற்கு நிகராக நடந்த இயக்குநர் ஷங்கரின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி!
Thursday April-18 2024

இந்திய சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக மட்டும் இன்றி பிரமாண்ட இயக்குநர் என்ற பெருமையோடு வலம் வரும் இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், அமெரிக்கவாழ் இந்தியரான தருண் கார்த்திகேயனுக்கும் ஏப்ரல் 15 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது...

ஓடிடி தளத்திலும் சக்கைப்போடு போடும் ‘பிரேமலு’
Thursday April-18 2024

இயக்குநர் கிரிஷ் ஏ.டி இயக்கத்தில், நஸ்லென் மற்றும் மமிதா பைஜூ முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து கடந்த பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியான ‘பிரேமலு’ திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது...