Latest News :

‘கன்னி மாடம்’ படத்தை பாராட்டிய திருமாவளவன்!
Thursday February-27 2020

நடிகர் போஸ் வெங்கட் இயக்கத்தில் உருவான கன்னி மாடம் படம் பிப்ரவரி 21ஆம் தேதி வெளியானது. ரூபி பிலிம்ஸ் சார்பாக ஹஷீர் இப்படத்தை உருவாக்கியுள்ளார். இனியன் ஒளிப்பதிவு செய்ய ஹரிஷ் சாய் இசையமைத்துள்ளார்

 

ஸ்ரீ ராம், சாயாதேவி, விஷ்ணு, ஆடுகளம் முருகதாஸ், கஜராஜ், வலீனா பிரின்சஸ், சூப்பர் குட் சுப்பிரமணி, ப்ரியா ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர்.

 

சாதி வெறியர்களுக்கு எதிராக ஆணவக் கொலைகளை சாடியுள்ள இந்த படத்திற்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

 

இந்த நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், நேற்று ‘கன்னி மாடம்’ படத்தை பார்த்தார். படம் முடிந்த பிறகு படம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “இன்றைய கால கட்டத்திற்கு தேவையான படமாக கன்னி மாடம் வெளி வந்துள்ளது. சாதி வெறியாட்டமும் மத வெறியாட்டமும் இன்றைக்கு இந்திய மண்ணில் தலை தூக்கியுள்ளது. இவையிரண்டும் வன்முறைக்கு காரணமாக அமைந்துள்ளது. நாம் வெட்கி தலைகுனியும் அளவுக்கு பெருகி வருகிறது.

 

ஆணவக் கொலைகள், தீ வைப்பு, என்று இன்றைய காலச் சூழல் பதற்றமாகியுள்ள நிலையில் தந்தை பெரியாரின் சிந்தனைகள், புரட்சியாளர் அம்பேத்கரின் சிந்தனைகள் பரவலாக மக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும் என்ற சிந்தனையோடு இந்த படத்தை போஸ் வெங்கட் இயக்கியுள்ளார்.

 

சாதி மனிதனை சாக்கடையாக்கும்… மதம் மனிதனை மிருகமாக்கும் என் பெரியாரின் கருத்தோடு இந்த படத்தை நிறைவு செய்திருக்கிறார்.

 

வணிக நோக்கத்தோடு இந்த படத்தை தயாரிக்காமல் இன்றைய தலைமுறைக்கு தேவையான கருத்தை கொடுத்துள்ளனர். இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் என் பாராட்டுக்கள்.

 

படத்தில் நடித்துள்ளவர்கள் மிக இயல்பாக பாத்திரத்தோடு ஒன்றி நடித்துள்ளனர். ஒவ்வொரு காட்சியும் இன்றைய இளைஞர்களை ஆழமாக சிந்திக்க வைக்க கூடிய அளவுக்கு சித்தரிக்கப்பட்டுள்ளன.

 

சாதி விட்டு சாதி காதல் மலர்வது அல்லது திருமணம் செய்து கொள்வது என்பது சமூக இயங்கியல் நிகழ்வாகும். ஆனால் இதை எதிர்க்க கூடியவர்கள் எத்தகைய மன நோயாளிகளாக இருக்கிறார்கள் என்பதை இந்த படம் சித்தரிக்கிறது.

 

தன் தந்தையாக இருந்தாலும் அவரின் சாதி வெறி ஒட்டுமொத்த சமூகத்தை சீரழிக்கும் என்பதால் தந்தையை கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்படுகிறான் நாயகன்.

 

காதல் எந்தளவு வலிமையானது, புனிதமானது என்பதை காதலனை இழந்து கருவினை சுமக்கின்ற ஒரு பெண்மணிக்கு ஒரு தந்தையாக இருந்து பாதுகாக்கும் ஒரு நாயகனாக உருவாக்கப்பட்டு இருக்கிறான். அப்படி போற்றுதலுக்குரிய பாத்திரமாக நாயகன் பாத்திரம் உள்ளது.

 

ஆண்களுக்கு நிகராக ஒரு பெண் பாத்திரமும் படைக்கப்பட்டுள்ளது. ஆட்டோ ஓட்டுகிற பெண்களுக்கு ஏற்படும் சிரமங்களும் காட்டப்பட்டுள்ளது.

ஆண்கள் தங்களை சமமாக பார்க்காவிட்டாலும் தங்களை தவறாக பார்க்கக்கூடாது என அறிவுரை சொல்கிற அந்த ஆட்டோ பெண் டிரைவர் பாத்திரத்தின் வசனமும் பாராட்டப்பட வேண்டியது.

 

மகளையும் மருமகனையும் படுகொலை செய்து, பிறகு நாயகி கீழ்ஜாதி பெண் என்றறிந்து அவரை கொலை செய்த பரோலில் வந்த தன் தந்தையை கொலை செய்து தான் ஒரு நீதிமானாக காட்சியளிக்கிறார் நாயகன். சட்டமும் அதிகார வர்க்கமும் இங்கே நீதியை வழங்கவில்லை என்பதையும் அந்த காட்சியில் சுட்டிக்காட்டியிருக்கிறார் இயக்குநர்.

 

கன்னி மாடம் என்கிற இந்த திரைப்படம் ஆணவக் கொலைக்கு எதிரானது, ஜாதி வெறிக்கு எதிரானது, மத வெறிக்கு எதிரானது, காதல் புனிதமானது உள்ளிட்ட பல விஷயங்களை ஒரே நேரத்தில் சொல்லியிருக்கிறது.

 

இளம் தலைமுறைக்கு பாடம் புகட்ட கூடிய திரைப்படமாக இது வெளிவந்துள்ளது. எனவே டைரக்டர் போஸ் வெங்கட் மற்றும் தயாரிப்பாளர் ஹசீர் ஆகியோரை பாராட்டுகிறேன்.

 

நல்ல பாடல்களை கொடுத்த இசையமைப்பாளருக்கும், ஒவ்வொரு காட்சிகளை திறமையாக படம் பிடித்த ஒளிப்பதிவாளருக்கும் என் வாழ்த்துக்கள்.

 

இதுபோன்ற படங்கள் விருதுகள் பெறுகிறதோ இல்லையோ, சமூகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும். அந்த வலிமை கன்னி மாடம் படத்திற்கு உள்ளது. நல்ல வழிகாட்டியாக இந்த படம் அமைந்துள்ளது.

 

வணிக நோக்கில் எத்தனையோ படங்கள் வருகின்றன. அவர்கள் வெற்றியை வசூலில் குவிக்கிறார்கள். ஆனால் அவை சமூகத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

 

சாதிகள் இல்லையடி பாப்பா என்ற பாரதியாரின் கருத்துக்களை சேர்க்கின்ற படமாக கன்னி மாடம் அமைந்துள்ளது. என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.” என்றார்.

Related News

6252

இணையத் தொடர் இயக்க முதலில் தயங்கினேன்! - ‘குட் வொய்ஃப்’ தொடர் பற்றி நடிகை ரேவதி
Friday July-04 2025

ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...

ரசிகர்களின் அன்பு வியக்க வைத்து விட்டது! - ‘லவ் மேரேஜ்’ வெற்றி விழாவில் நடிகர் விக்ரம் பிரபு உற்சாகம்
Friday July-04 2025

அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம்  - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

’டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ் 2’ புத்தகம் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற திரை பிரபலங்கள்
Thursday July-03 2025

தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...

Recent Gallery