முற்றிலும் புதுமுகங்களின் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் 'இமை '. முழுநீள காதல் கதையான இப்படத்தை விஜய் கே. மோகன் இயக்கியுள்ளார். கே.பி பேமிலி புரொடக்ஷன்ஸ் சார்பில் ஹார்திக் வி.டோரி தயாரித்துள்ளார்.
'இமை' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று மாலை பிரசாத் லேப் அரங்கில் நடைபெற்றது. பத்திரிகையாளர்கள், முன்னிலையில் பாடல்கள் வெளியிடப் பட்டன. நிகழ்ச்சியில் படத்தின் இயக்குநர் விஜய் கே. மோகன். நாயகன் சரிஷ், நாயகி அக்ஷயப்பிரியா, ஒளிப்பதிவாளர் வி..கே.பிரதீப், இசையமைப்பாளர்கள் மிக்கு காவில், ஆதிப், பாடலாசிரியர் சீர்காழி சிற்பி மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் இயக்குநர் விஜய் கே. மோகன் பேசும் போது, “நான் ரயிலில் பயணம் செய்த போது ஒருவர் என் எதிர் இருக்கையில் அமைதியாக அமர்ந்திருந்தார். அவரிடம் மெல்லப் பேச்சு கொடுத்தேன். ஊர் கோயமுத்தூர் என்றார். என்ன வேலை பார்க்கிறீர்கள் என்ற போது ரவுடியாக இருக்கிறேன் என்றார் . அவர் ஒரு ரவுடி என்றதும் எனக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. அவரிடம் சற்று நேரம் பேசினேன். நல்ல கதை இருக்கும் போல் தோன்றியது. அவரது போன் நம்பரைக் கேட்டேன், கொடுத்தார். ஊர் வந்ததும் இறங்கிக் கொண்டார். அவரைத் தொடர்பு கொண்டு மீண்டும் பேசிய போது நேரில் சந்தித்து பேசினேன். அவருக்கு ஒரு காதல் இருந்தது தெரிந்தது. அவரிடம் விரிவாகப் பேசினேன்.
அவரது கதையைப் படமாக எடுக்க விரும்புகிறேன் என்று அனுமதி கேட்டேன். அனுமதி கொடுத்தார். அவரது கதையைத் திரைக்கதையாக மாற்றி மறுபடியும் கூறினேன். க்ளைமாக்ஸ் மாறியுள்ளதே என்றார். சினிமாவுக்காக மாற்றங்கள் செய்திருப்பதையும் சொன்னேன். அப்படி உருவான கதைதான் இமை.
இப்படத்தில் நாயகனாக நடிக்க சரிஷ் கிடைத்தார் அவர் 15 ஆண்டுகளாக நடிக்கப் போராடி வருபவர். அவர் மூலம் தயாரிப்பாளர் கிடைத்தார். அவர் குஜராத்திக்காரர். எங்களை நம்பி தயாரிக்க முன் வந்தார். நாயகி அக்ஷயா, சில கன்னடப் படங்களில் நடித்தவர். இப்படி படக்குழு தாயராகி படம் முடித்து இன்று ஆடியோ வெளியீடு நடந்துள்ளது. வரும் அக்டோபர் மாதம் படம் வெளியாகவுள்ளது.
எவ்வளவோ படங்கள் வரலாம் உண்மைக் கதையின் அடிப்படையில் எடுக்கப்பட்டு இருப்பதால் எங்கள் படத்துக்கு கூடுதல் பலமும் நம்பிக்கையும் உள்ளன.” என்றார்.
நாயகன் சரிஷ் பேசும் போது, ”எனக்கு நடிக்க ஆசை, கனவு, லட்சியம் எல்லாமும் இருந்தன. சரியான வாய்ப்பு தேடிய போது இயக்குநர் விஜய் கே. மோகன் சொன்ன கதை பிடித்து இருந்தது. ஒரு கனவு போல படம் முடிந்து விட்டது. இதில் நடிப்பதற்கு எனக்கு நல்ல வாய்ப்புகள் இருந்தன. அனைவருக்கும் பிடிக்கும் படமாக 'இமை' இருக்கும்.” என்றார்.
நாயகி அக்ஷயப்பிரியா பேசும்போது, “தமிழில் இது எனக்கு முதல் படம். நல்ல கதையம்சம் உள்ள படம் இது. இதில் எனக்கு முரட்டு சுபாவமும், ரவுடித்தனமும் கொண்ட ரவுடியை துரத்தித் துரத்திக் காதலிக்கும் பெண் பாத்திரம். தமிழில் முதல் படவாய்ப்பு தான் இது என்றாலும், எனக்கு ஏதோ பிக்னிக் போய் வந்தது போல படப்பிடிப்பு மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. படப்பிடிப்பில் எல்லாரும் என்னை நன்றாகக் கவனித்துக் கொண்டார்கள். படக்குழுவினர் என் சௌகரியம் முக்கியம் என்பதை உணர்ந்து நன்றாகப்பார்த்துக் கொண்டார்கள். அனைவருக்கும் நன்றி.” என்றார்.
பாடலாசிரியர் சீர்காழி சிற்பி சும்போது, “நான் இதுவரை 'மகான் கணக்கு' ,'வனபத்ரகாளி' ,'ஓநாய்கள் ஜாக்கிரதை' ,'செம்பட்டை' , 'கெத்து' போன்ற 25 படங்களில் பாடல்கள் எழுதியுள்ளேன். 'கெத்து' படத்தில் நான் எழுதிய 'தில்லு முல்லு பண்ணலை' பாடல் சூப்பர் ஹிட். 'இமை 'படத்தில் நான் மூன்று பாடல்கள் எழுதியிருக்கிறேன். 'வால் முளச்ச பொண்ணு பிளேடு வச்ச கண்ணு ', 'காதல் வந்தால்', ' விழிகள் மூடும்போது ' என்று ஆரம்பிக்கும் இப்பாடல்கள் எல்லாமே நன்றாக வந்துள்ளன. படமும் எல்லாரையும் கவரும் ஜனரஞ்சகப் படமாக இருக்கும்.” என்றார்.
விழாவில் ஒளிப்பதிவாளர் வி.கே.பிரதீப், இசையமைப்பாளர்கள் மிக்கு காவில், ஆதிப், நடிகர் வெற்றிவேல் ஆகியோரும் பேசினர்.
பிரபல நிறுவனமான Behindwoods Productions தயாரிக்கும் ‘மூன்வாக்’ (Moonwalk) திரைப்படத்தின் 14 கேரக்டர் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது...
யாஷ் நடிக்கும் மிகப்பிரம்மாண்ட படைப்பான ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, மார்ச் 19, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படக்குழு அதன் இருண்ட மர்மமான உலகத்தின் இன்னொரு முக்கிய அத்தியாயத்தை ரசிகர்களுக்கு வெளிப்படுத்தியுள்ளது...
இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவரும், அவரது உறவினருமான மதிமாறன் புகழேந்தி ’செல்ஃபி’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார்...