எல்.சி. நீரஜா பிலிம்ஸ் வழங்க டாக்டர் தணிகாசலம் தயாரிப்பில் அருணாச்சலம் ஆனந்த் எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்கி இருக்கும் படம் 'டிம் டிப்'. இப்படத்தில் புதுமுக நாயகன் மோனிஷ் குமார், சஞ்சனா சிங், பவர்ஸ்டார்,கே .ஆர். விஜயா ,பெரேரா நடித்துள்ளனர்.
ஆதிப், ஹமரா, சி.வி, கு.கார்த்திக் ஆகியோர் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பாஸ்கோ எடிட்டிங் செய்ய, சாய் பாரதி நடனம் அமைத்திருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், கே.பாக்யராஜ், கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துக் கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் பேசிய நடிகை சஞ்சனா சிங், “இந்தப் படம் மிகவும் சிரமப்பட்டு எடுத்திருக்கிறார்கள். அனைவரும் நன்றாக ஒத்துழைப்பு கொடுத்தார்கள். இங்கே பாக்யராஜ் சார் வந்திருப்பது எனக்கு மகிழ்ச்சி. அவருடன் நடித்த போது நிறைய விஷயங்கள் சொல்லிக் கொடுத்தார்.” என்றார்.
இயக்குநர் அருணாச்சலம் ஆனந்த் பேசும் போது, “நான் இந்தப் படத்தை காப்பாற்றுங்கள். எனக்கு உதவி செய்யுங்கள் படத்தை பற்றி பெரிதாக தூக்கி நிறுத்தி எழுதுங்கள் என்று நான் கெஞ்சப்போவதில்லை. ஏனென்றால் படம் நன்றாக இருந்தால் நீங்கள் தாராளமாக நன்றாகத்தான் எழுதுகிறீர்கள்.பாராட்டி ஊக்குவிப்பீர்கள். இல்லையென்றால் எழுதமாட்டீர்கள் என்பது எனக்குத் தெரியும் .இந்த படத்தின் மேல் உள்ள நம்பிக்கையில் சொல்கிறேன் நீங்கள் நன்றாக எழுதுவீர்கள்.” என்றார்.
நிகழ்ச்சியில் இயக்குநர் கே பாக்யராஜ் பேசும்போது, “சஞ்சனாசிங் என்னைப் பற்றிப் பேசும்போது ”நிறைய சொல்லிக் கொடுத்தார்” என்று சொன்னார் .பா. விஜய் படத்தில் நடித்த போது அவரைத் தெரியும். இப்படி எப்போதாவது தீபாவளிக்குத் தீபாவளி சந்திப்பதோடு சரி. ஆனால் அவர் சொல்வதைப் பார்த்தால் ஏதோ இவர்கள் அடிக்கடி சந்தித்துக் கொள்கிறார்களோ என்று மற்றவர்கள் நினைத்துக் கொள்வார்கள். பேசும்போது முழுமையாகப் பேச வேண்டும். மொட்டையாகப் பேசக்கூடாது. அதை தெளிவாக சொல்லியிருக்க வேண்டும். இந்த படத்தில் பவர்ஸ்டார் ஜோடியாகத்தான் அவர் நடித்திருக்கிறார். பாக்யராஜ் சார் ஜோடியாக என்று என் பெயரை சேர்த்து விட்டார். இதையெல்லாம் பார்ப்பவர்களுக்கு அடிக்கடி சந்தித்துக் கொள்வது போல் நினைத்துக் கொள்வார்கள். எனவே தெளிவாகப் பேச வேண்டும்.
தயாரிப்பாளர் பேசும்போது அவரது உற்சாகத்தை பார்த்து எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. கர்நாடகாவில் இருந்து வந்துள்ள ஒருவர் நம்பிக்கையோடு உற்சாகமாகப் பேசியது எனக்கு பிடித்திருந்தது.கர்நாடகா என்றதும் கன்னடர் அனைவரும் பிரச்சினை செய்பவர்கள் என்று நாம் நினைக்கிறோம். ஆனால் இவரைப் பார்க்கும் போது அங்கும் நல்லவர்கள் இருக்கிறார்கள் என்று எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது .'ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி ' படப்பிடிப்பு மைசூரில் நடந்துகொண்டிருந்த போது எங்கள் பிள்ளைகளுக்கு ஒரு வாரம் விடுமுறை கிடைத்ததால், படப்பிடிப்பில் வந்து பார்ப்பதாக பூர்ணிமா அழைத்து வருவதாகச் சொன்னார். அதன்படி என் மனைவியும் பிள்ளைகள் இரண்டு பேரும் சென்னையிலிருந்து பெங்களூர் ஏர்போர்ட்டில் வந்து இறங்கிய உடனேயே அங்கே கலவரம் ஆரம்பித்து விட்டது .சிட்டி மட்டுமல்ல போகிற இடமெல்லாம் கலாட்டா கல்லெறிதல் என்று தொடர்ந்திருக்கிறது.
தமிழ்நாட்டு பதிவு எண் வாகனங்கள் எல்லாம் தாக்கப்பட்டன .எங்கள் காரையும் தாக்க முயற்சி செய்தார்கள். கற்களும் வீசப்பட்டுக்கொண்டு இருந்தன. சாலை எங்கும் டயர்களும் தடைகளும் ஆக இருந்தது.மைசூர் எப்படி வருவது என்று தெரியாமல் டிரைவர் குழம்பி எப்படியோ அங்குமிங்கும் ஓட்டி தட்டுத்தடுமாறி ஒரு ஊருக்குச் சென்றுவிட்டார். அந்த ஊர் பெங்களூரிலிருந்து இருபது கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு கிராமம். அங்கே இவர்களைப் பார்த்த ஒரு பெரியவர் இந்த நிலையில் நீங்கள் வெளியே செல்ல வேண்டாம். இரவு இங்கேயே தங்கி விட்டுப் பிறகு செல்லலாம் என்று கூறியிருக்கிறார். இவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து யோசித்த போது அவர் யோசிக்க வேண்டாம் உங்கள் காரை தமிழ்நாட்டு பதிவு எண் தெரியாத அளவுக்கு உள்ளே நிறுத்தி விடுங்கள் வெளியே தெரிந்தால் பிரச்சனை என்று ஒரு காம்பவுண்ட் கேட்டை திறந்து உள்ளே வழிவிட்டு, இங்கே பெண்களும் இருக்கிறார்கள் எங்கள் வீட்டுப் பெண்களோடு நீங்கள் தங்கிக் கொள்ளுங்கள் என்று அங்கே தங்க வைத்திருக்கிறார்.
நானும் மைசூரில் பதற்றமாக இருந்தேன். என் மனைவியிடம் பேசிய போது அந்த இடத்தில் பாதுகாப்பாக இருப்பதாகச் சொன்னார். நான் கர்நாடகாவிலுள்ள திரையுலகினரைத் தொடர்பு கொண்டேன். அம்ப்ரீஷைத் தொடர்பு கொண்டபோது பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்தார். மறுநாள் காலை போலீஸ் பாதுகாப்போடு அவர்களை அழைத்து வந்தார்கள். இதை ஏன் சொல்கிறேன் என்றால் கன்னடர்கள் என்றாலே அப்படி இப்படி என்று நினைக்கிறோம் .எல்லாக் கன்னடர்களும் அப்படியில்லை. அவர்களிலும் நல்லவர்கள் இருக்கிறார்கள், கலவரத்திலும் ஒரு நல்ல விஷயம் நடந்திருக்கிறது என்பதற்கு அந்த ராசய்யா ஒரு சாட்சியாக இருக்கிறார். அவர்கள் ஏதோ ஒரு தமிழ்க் குடும்பம் என்ற வகையில் தான் என் மனைவி குழந்தைகளைக் காப்பாற்றினார்களே தவிர பாக்யராஜ் மனைவி குழந்தைகள் என்று அல்ல. ஏனென்றால் அது பிறகுதான் தெரியும்.
எனவே இங்கு வந்துள்ள கர்நாடகாவைச் சேர்ந்த இந்த தயாரிப்பாளரும் நிறைய படங்கள் தயாரிக்க வேண்டும். இந்தப் படத்தின் பாடல் காட்சி பார்க்கும் போது புதுமுக நாயகன் என்பதால் கொஞ்சம் கூச்சப்பட்டு நடித்திருப்பார் போல் தெரிகிறது இன்னும் காதல் காட்சிகளில் நெருக்கம் காட்டியிருக்கலாம். ஏனென்றால் நான் ஊரில் இருந்த போதெல்லாம் சினிமாவில் வரும் காதல் காட்சிகளை கிண்டலடித்து கேலி பேசிக்கொண்டிருப்பேன்.என்னை முதல் படத்தில் நடிக்க வைக்கும் போது எங்கள் இயக்குநர் முதலில் எடுத்த காட்சி பாடல் காட்சிதான்.'வான்மேகங்களே' என்று பாட வேண்டும் . நான் மிகவும் கூச்சப்பட்டு நடித்தேன்.அப்போது என்னை சத்தம் போட்டு நடிக்க வைத்தார். ஆறு ஏழு டேக் வாங்கினேன். இப்படித்தான் நானும் கூச்சப்பட்டேன். போகப் போக சரியாகி விட்டது. போக போக பழகிவிடும். இந்தப் படம் வெற்றியடைய வேண்டும்.” என்றார்.
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...