Latest News :

பாரதிராஜாவுக்கு தாதா சாகிப் பால்கே விருது! - கோரிக்கை வைத்த திரை பிரபலங்கள்
Friday July-17 2020

இயக்குநர் பாரதிராஜா இன்று தனது 78 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலர் வாழ்த்துக் கூறி வருகிறார்கள். மேலும், இயக்குநர் பாரதிராஜாவுக்கு, திரைத்துறைக்கு மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் உயரிய விருதான தாதா சாகிப் பால்கே விருதினை வழங்க வேண்டும் என்று திரைத்துறையினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

தமிழ் சினிமாவைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் கையெழுத்திட்டுள்ள இந்த கோரிக்கையை மத்திய செய்தி ஒளிபரப்புத் துறை அமைச்சர் ஜவேடேகருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

 

அந்தக் கடிதம் இங்கே :

 

மாண்புமிகு திரு ஜவடேகர் அவர்களுக்கு,

 

பெருமைமிகு தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர்கள். தயாரிப்பாளர்கள், நடிகர்கள், படத் தொகுப்பாளர்கள், எழுத்தாளர்கள் ஆகிய நாங்கள் உங்களுடைய உடனடிப் பரீசலனையை வேண்டி இந்தக் கோரிக்கையை முன் வைக்கிறோம்.

 

இன்று (17-07-2020) பிறந்த நாள் கொண்டாடும் தென்னிந்தியாவின் ‘இயக்குநர் இமயம்’, தயாரிப்பாளர், பத்மஸ்ரீ பாரதிராஜா, தென்னிந்தியத் திரையுலகில் புதிய அலையைத் தொடங்கி வைத்தவர். கடந்த 43 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து திரைப்படங்களை இயக்கி வருபவர். இந்த நன்னாளில் எங்கள் கோரிக்கையை முன் வைப்பதற்கு முன் முதலில் அவருடைய சாதனைகளைப் பட்டியலிட விரும்புகிறோம்.

 

இந்திய சினிமாவுக்கு இயக்குநர் பாரதிராஜாவின் பெருமைமிகு பங்களிப்புகள்:

 

1977 முதல் 2019வரை இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் 42 திரைப்படங்களை இயக்கியுள்ளார். இது நிறைவான பங்களிப்பு.

 

வேலையில்லாத் திண்டாட்டம், தீண்டாமை, சாதிய மோதல்கள், பெண் சிசுக் கொலை போன்ற சமூகக் கொடுமைகளை எதிர்க்கும் படங்களை இயக்கியவர் திரு. பாரதிராஜா. மகளிர் முன்னேற்றம் உள்ளிட்ட சமூக மாற்றத்துக்குத் தேவையான நடவடிக்கைகள், சமூக விழுமியங்கள், ஆகியவற்றை வலியுறுத்தும் படங்களையும், மனித உறவுகளை மகிமைப்படுத்தும் படங்களையும் இயக்கி, தென்னிந்தியாவின் தனிப் பெரும் இயக்குநராக விளங்குகிறார். படைப்பாளிகளுக்கு உத்வேகமூட்டும் சக்தியாகவும் திகழ்கிறார்.

 

சிவாஜிகணேசன், ராஜேஷ்கன்னா, கமல்ஹாசன், ரஜினிகாந்த், சிரஞ்சீவி, ஸ்ரீதேவி, அமோல் பலேகர், நானா படேகர், சன்னி தியோல், சுஹாசினி மணிரத்னம், பூனம் தில்லான், ராதிகா சரத்குமார், விஜயசாந்தி, ரதி அக்னிஹோத்ரி, ரேவதி, ஜெயசுதா உள்ளிட்ட பல புகழ் பெற்ற நடிகர்களை இயக்கியவர்.

 

சென்னையில் அமைக்கப்பட்ட செட்களில் உருவாகி வந்த தமிழ் சினிமாவை முதன் முதலாக கிராமங்களுக்கு எடுத்துச் சென்றவர் அவர்தான். உண்மையாக மக்கள் வாழும் பகுதிகளில் திரைப்படங்களைப் படமாக்கியதன் மூலம் புதிய புரட்சியை உருவாக்கியவர்.

 

அவரது வருகையும், அவரால் உருவாக்கப்பட்ட புதிய அலையும் பல புதிய திறமைசாலிகளை இந்தியா சினிமாவுக்குக் கொண்டு வந்தன. கே.பாக்யராஜ், மணிவண்ணன், மனோபாலா ஆகியோர் இவர்களில் முக்கியமானவர்கள்.

புகழ் பெற்ற பாடலாசிரியரும் ஏழு முறை தேசிய விருது பெற்றவருமான கவிப்பேரரசு வைரமுத்துவை அறிமுகப்படுத்தியவரும் அவர்தான். 50-க்கும் மேற்பட்ட நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை திரையுலகத்திற்கு அறிமுகப்படுத்தியவர் பாரதிராஜா.

 

பாரதிராஜா தன்னுடைய திரைப்படங்களுக்காக இந்திய அரசிடமிருந்து ஆறு முறை தேசிய விருதை வென்றுள்ளார்.ஆறு முறை தமிழக அரசின் விருதை வென்றுள்ளார்.

 

2017-ஆம் ஆண்டின் தேசிய விருதுகள் நடுவர் குழுவின் தலைவராகச் செயல்பட்டார். 

 

அவர் இயக்கிய தெலுங்குப் படத்துக்காக ஆந்திர பிரதேச மாநில அரசின் பெருமைக்குரிய நந்தி விருதை வென்றார்.2004-ஆம் ஆண்டில் மதிப்புக்குரிய ‘பத்மஸ்ரீ’ விருதை வழங்கி இந்திய அரசு அவரைக் கெளரவித்தது.

 

மேலே உள்ள பட்டியலில் இடம் பெற்றவை, இந்த மாபெரும் திரை இயக்குநரின் சில சாதனைகள் மட்டுமே. தன் திரைப்படங்கள் மூலம், அவர் தொடர்ந்து புதிய தலைமுறை இயக்குநர்களுக்கு உந்துதலாகத் திகழ்கிறார். ஒட்டு மொத்த தமிழ் சினிமாத் துறையின் நலனுக்காக ஊக்கத்துடன் உழைத்து வருகிறார்.

 

பாரதிராஜா தன்னுடைய 78-ஆம் பிறந்தநாளைக் கொண்டாடும் இந்த நன்னாளில் இந்திய அரசால் கௌரவிக்கப்பட்டுள்ள படைப்பாளிகளாகிய நாங்கள், இந்திய சினிமாவின் மிக உயரிய விருதான பெருமதிப்புக்குரிய ‘தாதாசாகிப் பால்கே’ விருதை இந்த ஆண்டு திரு.பாரதிராஜாவுக்கு வழங்குவதற்குப் பரிசீலிக்க வேண்டுகிறோம்.

 

இந்த விருதே, நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கும், இந்த திரையுலக மேதைக்கான பொருத்தமான கெளரவமாகவும் 43 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியா சினிமாவில் பல சாதனைகளை நிகழ்த்திய அவருடைய மகத்தான பங்களிப்புக்கு உரிய நேரத்தில் வழங்கப்பட்ட முறையான அங்கீகாரமாகவும் இருக்கும் என நம்புகிறோம்.

 

எங்களுடைய இந்த முக்கியமான கோரிக்கைக்குத் தங்கள் தனிப்பட்ட கவனத்தை நல்குவீர்கள் என்று நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறோம்.

 

நல்ல முடிவுக்கான எதிர்பார்ப்புடன் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

 

பின்குறிப்பு: தேசிய விருது வென்றுள்ள திரைப்பட ஆளுமைகளின் கையொப்பமிடப்பட்ட கோரிக்கை மனு தங்களை விரைவில் வந்தடையும்.

 

இங்கனம்,

 

தேசிய விருது வென்றுள்ள இயக்குநர்கள், நடிகர்கள், படத் தொகுப்பாளர்கள், பாடலாசிரியர்கள்:

 

கமல்ஹாசன், பத்ம பூஷண், 4 முறை தேசிய விருது வென்றுள்ள நடிகர். தயாரிப்பாளர், இயக்குநர்

 

வைரமுத்து, பத்ம பூஷண், 7 முறை தேசிய விருது வென்றுள்ள பாடலாசிரியர்

 

தனுஷ், 3 முறை தேசிய விருது வென்றுள்ள நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர்

 

ஸ்ரீகர் பிரசாத், 8 முறை தேசிய விருது வென்றுள்ள படத் தொகுப்பாளர்.

 

பீ.லெனின், 5 முறை தேசிய விருது வென்றுள்ள இயக்குநர், படத் தொகுப்பாளர்

 

கே.எஸ்.சேதுமாதவன், 10 முறை தேசிய விருது வென்றுள்ள இயக்குநர்

 

எஸ்.பிரியதர்ஷன், பத்மஸ்ரீ மற்றும் தேசிய விருது வென்றுள்ள இயக்குநர்

 

திரு. சந்தானபாரதி, தேசிய விருது வென்றுள்ள இயக்குநர்

 

அகத்தியன், தேசிய விருது வென்றுள்ள இயக்குநர்

 

ஞான ராஜசேகரன், 3 முறை தேசிய விருது வென்றுள்ள இயக்குநர்

 

கே.ஹரிஹரன், தேசிய விருது வென்றுள்ள இயக்குநர்

 

ஆர்.பார்த்திபன், 2 முறை தேசிய விருது வென்றுள்ள இயக்குநர்

 

சேரன், 4 முறை தேசிய விருது வென்றுள்ள இயக்குநர்

 

பாலா, இரண்டு முறை தேசிய விருது வென்றுள்ள இயக்குநர்

 

எஸ்.பி. ஜனநாதன், தேசிய விருது வென்றுள்ள இயக்குநர்

 

வசந்தபாலன், தேசிய விருது வென்றுள்ள இயக்குநர்

 

பாண்டிராஜ், தேசிய விருது வென்றுள்ள இயக்குநர்

 

வெற்றிமாறன், 3 முறை தேசிய விருது வென்றுள்ள இயக்குநர், தயாரிப்பாளர்

 

சீனு ராமாசாமி, தேசிய விருது வென்றுள்ள இயக்குநர்

 

சுசீந்திரன், தேசிய விருது வென்றுள்ள இயக்குநர்

 

ஏ.சற்குணம், தேசிய விருது வென்றுள்ள இயக்குநர்

 

பாலாஜி சக்திவேல், தேசிய விருது வென்றுள்ள இயக்குநர்

 

ராம், தேசிய விருது வென்றுள்ள இயக்குநர்

 

பி. சமுத்திரக்கனி, தேசிய விருது வென்றுள்ள நடிகர், இயக்குநர்

 

ராஜு முருகன், தேசிய விருது வென்றுள்ள இயக்குநர்

 

ஜி. பிரம்மா, தேசிய விருது வென்றுள்ள இயக்குநர்

 

செழியன், தேசிய விருது வென்றுள்ள இயக்குநர், ஒளிப்பதிவாளர்

 

தேசிய விருது வென்றுள்ள தயாரிப்பாளர்கள்

 

கலைப்புலி எஸ். தாணு, தேசிய விருது வென்றுள்ள தயாரிப்பாளர்

 

சிவசக்தி பாண்டியன், தேசிய விருது வென்றுள்ள தயாரிப்பாளர்

 

எல். சுரேஷ், தேசிய விருது வென்றுள்ள தயாரிப்பாளர்

 

எம். சசிகுமார், தேசிய விருது வென்றுள்ள தயாரிப்பாளர்

 

சுபாஷ் சந்த்ர போஸ், தேசிய விருது வென்றுள்ள தயாரிப்பாளர்

 

எஸ். முருகானந்தம், தேசிய விருது வென்றுள்ள தயாரிப்பாளர்

 

ஜே. சதீஷ்குமார், இரண்டு முறை தேசிய விருது வென்றுள்ள தயாரிப்பாளர்

 

எஸ்.ஆர். பிரபு, தேசிய விருது வென்றுள்ள தயாரிப்பாளர்

 

இவர்களுடன்,

 

ஜி. தனஞ்செயன், சினிமா குறித்த எழுத்துக்காக இரண்டு முறை தேசிய விருது வென்றுள்ளவர் மற்றும் திரை விமர்சகர்.

Related News

6800

காமெடி நடிகர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ‘கலப்பை மக்கள் இயக்கம்’!
Thursday November-20 2025

பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...

’மாண்புமிகு பறை’ தலைப்பே ஆழமாக சிந்திக்க வைக்கிறது - தொல்.திருமாவளவன் பாராட்டு
Thursday November-20 2025

அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...

ஆதரவற்றோர் இல்லத்தில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் அருண் விஜய்!
Wednesday November-19 2025

தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...

Recent Gallery