Latest News :

’டேனி’ மூலம் கோலிவுட்டின் கவனத்தை ஈர்க்க வரும் அரசியல் வாரிசு!
Friday July-24 2020

வரலட்சுமி சரத்குமார் நடிப்பில், அறிமுக இயக்குநர் எல்.சி.சந்தானமூர்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘டேனி’. வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி ஜீ5 ஒடிடி தளத்தில் வெளியாக உள்ள இப்படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்திருப்பவர் கவின். இதற்கு முன் சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருக்கும் கவின், ‘காக்டெய்ல்’ படத்தில் யோகி பாபுவின் நண்பராக ஏஜெண்ட் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர், தற்போது ‘டேனி’ படத்தின் மூலம் கோலிவுட்டின் கவனத்தை ஈர்க்க இருக்கிறார்.

 

மதுரையின் முதல் பெண் மேயரான தேன்மொழி கோபிநாதனின் மருமகனான கவின், வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றாலும், நடிகராவதற்காக பல இன்னல்களை எதிர்கொண்டவர், தற்போது தனக்கு கிடைத்திருக்கும் இடத்தை அடைய பட்ட கஷ்ட்டங்கள் குறித்தும், ‘காக்டெய்ல்’ மற்றும் ‘டேனி’ பட வாய்ப்புகள் குறித்தும் நம்மிடையே பகிர்ந்துக் கொண்டது இதோ,

 

மதுரையில் வசதியான குடும்பத்தை சேர்ந்தவன் நான். ஆனால் படிப்பு ஏறாததால் பத்தாம் வகுப்போடு படிப்பை நிறுத்தி விட்டேன். சினிமாவில் நடிக்கும் ஆர்வத்தை வீட்டில் சொன்னபோது பயங்கர எதிர்ப்பு எழுந்தது. அவர்களை சமாதனப்படுத்துவதற்காக வாரத்தில் ஐந்து நாட்கள் வியாபாரத்தை பார்த்துக்கொண்டு மீதி இரண்டு நாட்கள் கார் எடுத்துக்கொண்டு மதுரை பகுதிகளில் நடக்கும் படப்பிடிப்புகளை பார்க்க கிளம்பி விடுவேன்.

 

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் அண்ணன் மகன் எனக்கு நண்பர் என்பதால் அவர் இயக்கிய ஈரநிலம் படப்பிடிப்பில் உதவியாக வேலை பார்த்தேன். 

 

தமிழகத்தின் முதல் பெண் மேயராக மதுரையில் பொறுப்பேற்றவர் என் அத்தை. அவரது மகளுக்கும் எனக்கும் திருமணம் நடத்தி வைத்த மு.க.அழகிரி சினிமாவை நினைத்துப் பார்க்கக் கூடாது என எனக்கு அன்புக்கட்டளை போட்டார்.

 

அப்படியே ஐந்து வருடம் போனதும் மதுரை அருகில் வாகை சூடவா படப்பிடிப்பு நடத்த வந்த இயக்குநர் சற்குணம், விமல் எனக்கு பழக்கமானார்கள். இப்போதும் சென்னை வந்தால் விமலின் வீட்டில் சென்று தங்கும் அளவுக்கு அந்த நட்பு வளர்ந்துவிட்டது.  

 

இந்த நிலையில் இயக்குநர் சற்குணம் தயாரித்த ‘மஞ்சப்பை’ படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் அய்யா ராஜ்கிரணுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பின்னர் சண்டிவீரன் படத்தில் வில்லன் நடிகர் லாலின் மகனாக நடித்தேன்.அப்போதுதான் அந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய பி.ஜி.முத்தையாவுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு ஏற்பட்டது.

 

அதன்பிறகு பி.ஜி.முத்தையா தயாரிப்பாளராக மாறி ராஜா மந்திரி, பீச்சாங்கை உள்ளிட்ட சில படங்களை தயாரித்தார். 

 

திடீரென 2019 புத்தாண்டு அன்று போன் செய்து தன்னுடைய உதவியாளர் சந்தான மூர்த்தி இயக்கத்தில் தான் தயாரித்துவரும் டேனி என்கிற படத்தில் ஒரு போலீஸ்காரர் கேரக்டரில் நடிக்க அழைத்தார். கதாநாயகியை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் படத்தில் வரலட்சுமி நடித்துள்ளார். 

 

Kavin

 

இப்படத்தில் நடிக்க வேண்டிய நடிகர் ஒருவர் சில காரணங்களால் விலகிவிட, அந்த நேரத்தில் பிஜி முத்தையாவுக்கு பளிச்சென என் ஞாபகம் வந்ததால் என்னை அழைத்து நடிக்க வைத்தார். படம் முழுவதும் வரும் முக்கியமான கேரக்டர்.. இதில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைத்து.

 

இந்த நேரத்தில் தான் பிஜி முத்தையா ‘காக்டெய்ல் என்கிற படத்தையும் தயாரித்து வந்தார். ஒருநாள் என்னை அழைத்தவர் அந்தப் படத்திலும் யோகிபாபுவின் நாலு நண்பர்களில் ஒருவராக நடிக்கும்படி கூறினார். இந்த கதாபாத்திரம் கூட ஏற்கனவே முத்தையா தயாரித்த லிசா படத்தில் நடித்த மற்றொரு நடிகர்  நடிக்கவேண்டிய கதாபாத்திரம் தான். ஆனால் அவர் திடீரென ஒதுங்கிக்கொள்ள எனக்கு அதிர்ஷ்டம் அடித்தது. 

 

திடீரென ஒருநாள் வாட்ஸ்அப்பில் பிளைட் டிக்கெட் அனுப்பி கிளம்பி வரச் சொன்னார். ஏர்போர்ட் வருவதற்குள் படத்தின் முழு ஸ்க்ரிப்ட்டையும் எனக்கு ஈமெயிலில் அனுப்பி சென்னை வருவதற்குள் விமானத்திலேயே படித்துவிடுங்கள் என்றும் கூறிவிட்டார். அந்த நான்கு கதாபாத்திரங்களில் எனக்குப் பிடித்த கேரக்டரை என்னையே தேர்ந்தெடுத்துக்கொள்ளச் சொன்னார். அப்படி நான் தேர்ந்தெடுத்தது தான் நான்  நடித்த ஏஜெண்ட் கதாபாத்திரம். 

 

Kavin in Cocktail

 

இதில் இன்னொரு ஸ்பெஷல் என்னவென்றால் அந்த கேரக்டரில் தானே நடிக்கலாம் என முத்தையா நினைத்திருந்தார். ஆனால் எனக்காக விட்டுக் கொடுத்துவிட்டார்.

 

‘டேனி’ படத்தில் நான் நடித்திருக்கும் கதாப்பாத்திரம் என்னை ரசிகர்களிடம் நெருக்கமாக கொண்டு சேர்ப்பதோடு, திரையுலகினரின் கவனத்தையும் என் பக்கம் திருப்பும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இதற்கு, பி.ஜி.முத்தையாவுக்கும், இயக்குநர் சந்தானமூர்த்திக்கும் நிச்சயம் நன்றி சொல்லியாக வேண்டும்.

 

சினிமாவுக்காக எனது சொந்த வாழ்க்கையில் பல கஷ்ட்டமான அனுபவங்களை சந்தித்திருக்கிறேன். நான் சினிமாவுக்கு போக போகிறேன், என்றது தெரிந்ததும், எனக்கு சொத்துக்களை தர மாட்டேன், என்று என் தந்தை பத்திரத்தில் எழுதி வாங்கிக் கொண்டு தான் என்னை அனுமதித்தார். அதுமட்டும் அல்ல, வசதியான வீட்டு பையன் என்று என்னை ஆரம்பக்கட்டத்தில் பலர் அவர்களது தேவைக்காக பயன்படுத்திக் கொண்டார்கள். ஆனால், சென்னையில் ஒரு நாள் இரவு தூங்க கூட இடம் இல்லாமல், ரயில்வே பிளாட்பாரத்தில் தூங்கிய சூழ்நிலையையும் அனுபவித்திருக்கிறேன்.

 

இப்படி பலவிதமான போராட்டங்களுக்குப் பிறகே சினிமாவில் எனக்கான இடம் கிடைத்திருக்கிறது. என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர்கள் பி.ஜி.முத்தையா, சற்குணம் போன்றவர்களுடன் என் சினிமா பயணம் தொடரும்.

Related News

6825

காமெடி நடிகர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ‘கலப்பை மக்கள் இயக்கம்’!
Thursday November-20 2025

பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...

’மாண்புமிகு பறை’ தலைப்பே ஆழமாக சிந்திக்க வைக்கிறது - தொல்.திருமாவளவன் பாராட்டு
Thursday November-20 2025

அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...

ஆதரவற்றோர் இல்லத்தில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் அருண் விஜய்!
Wednesday November-19 2025

தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...

Recent Gallery