Latest News :

’வா பகண்டையா’ நல்ல தமிழ்ப் படம் என்ற நம்பிக்கை கொடுக்கிறது - ஆர்.கே.செல்வமணி பேச்சு
Thursday February-18 2021

ஒளி ரெவிலேஷன் சார்பில் ப.ஜெயகுமார் தயாரித்து, எழுதி இயக்கியிருக்கும் படம் ‘வா பகண்டையா’. பகண்டையா என்ற கிராமத்தில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளதால் படத்திற்கு அந்த ஊர் பெயரையே தலைப்பாக வைத்திருக்கிறார்.

 

புதுமுக நடிகர்கள் விஜய தினேஷ் ஹீரோவாகவும், நிழன் வில்லனாகவும், அறிமுக நடிகை ஆர்த்திகா ஹீரோயினாகவும் நடித்திருக்கும் இந்த படத்தில், ஏற்கனவே பல படங்களில் நடித்துள்ள யோகி ராம் இன்னொரு வில்லனாக நடிக்கிறார். இவர்களோடு ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, மீரா கிருஷ்ணன், ‘வெண்ணிலா கபடி குழு’ நிதிஷ் வீரா, 'பவர் ஸ்டார்' சீனிவாசன், மனோபாலா, 'காதல்' சுகுமார், பிளாக் பாண்டி, போண்டா மணி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

 

எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைத்து பாடல்கள் எழுதியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. விழாவில் நாயகன், நாயகி, வில்லன், இயக்குநர் உள்ளிட்ட படக்குழுவினருடன், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் 'தேனாண்டாள் பிலிம்ஸ்' முரளி ராமசாமி, 'பெப்சி' தலைவர் ஆர்.கே. செல்வமணி, இயக்குநர் விக்ரமன், இயக்குநர் பேரரசு, இசையமைப்பாளர் தினா, 'ஸ்டண்ட் யூனியன்' தலைவர் தவசி ராஜ், பி.ஆர்.ஓ. சங்கத் தலைவர் விஜயமுரளி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

விழாவில் இயக்குநரும், 'பெப்சி' அமைப்பின் தலைவருமான  ஆர்.கே. செல்வமணி பேசுகையில், “முப்பது வருஷத்துக்கு முன்னே நான் இயக்கிய 'புலன் விசாரணை' படம் ரிலீஸானப்போ என்னால தியேட்டருக்குள்ளே போக முடியலை. அப்படியொரு கூட்டம். அந்தளவு கூட்டத்தை இன்னைக்கு இந்த விழாவுல பார்க்க முடியுது. எப்படி புலன் விசாரணை 100 நாள் ஓடி வெற்றி பெற்றுச்சோ அப்படி இந்த படமும் பெரியளவுல வெற்றி பெறணும்னு வாழ்த்தறேன். புலன் விசாரணையில எப்படி விஜய்காந்தோ அதே பழைய விஜய்காந்த் மாதிரி இந்த படத்தோட ஹீரோ தமிழ் சினிமாவுக்கு கிடைச்சிருக்கார். ஒரு தமிழ்ப் பொண்ணை ஹீரோயினா அறிமுகப்படுத்திருக்காங்க. அதையெல்லாம் வெச்சுப் பார்க்கிறப்போ நல்ல தமிழ்ப் படமா வந்திருக்கும்கிற நம்பிக்கை வருது.

 

டிரெய்லர் பார்க்கிறப்போ, படம் சமூக அக்கறையை மையமா வெச்சு எடுக்கப்பட்டிருக்குன்னு புரிஞ்ச்சுக்க முடிஞ்சுது. இனத்தால, மதத்தால நாட்டை துண்டாடுறவங்களுக்கு எதிரான வசனமும் இருக்கு. அது எல்லாமே சரியானது தான். அந்த வகையில இயக்குநர் நல்ல படத்தை எடுத்திருக்கிறார்.” என்றார்.

 

இயக்குநர் பேரரசு பேசுகையில், “என்னோட படங்களுக்கு ஊர் பெயர்களைத்தான் தலைப்பா வைப்பேன். அதே மாதிரி இந்த படத்தோட இயக்குநர் அவரோட பகண்டையா'ங்ககிற ஊர்ப் பெயரை தலைப்பா வெச்சிருக்கார். இயக்குநருக்கு ஊர்ப்பற்று மட்டுமில்லை; தேசப்பற்றும் இருக்கு. அதனாலதான், நாட்டுல இன உணர்வைத் தூண்டி, மத உணர்வைத் தூண்டி ஆதாயம் பார்க்க, அரசியல் பண்ணா நினைக்கிறவங்களை செருப்பால அடிக்கிற மாதிரி வசனம் வெச்சிருக்கார். யாருக்கு ஊர்ப்பற்றும் தேசப்பற்றும் இருக்கோ அவங்க நல்ல கலைஞன். அவங்கதான் உண்மையான மனிதன். அப்படி பார்க்கிறப்போ இந்த படத்தோட இயக்குநரை உண்மையான மனிதன்னு சொல்லலாம்.

 

டிரெய்லர் பார்த்தப்போ 'சாதிங்கிறது மாம்பழக் கொட்டைக்குள்ள இருக்கிற வண்டு மாதிரி'ன்னு ஒரு வசனம் வந்துச்சு. மாம்பழத்தை ஏன் இழுத்திருக்கார்னு படத்தை பார்த்தாதான் புரியும். பார்க்கணும். அடுத்ததா, படத்தோட ஹீரோ பேரு விஜய தினேஷாம். விஜய்ன்னாலே வெற்றிதான். ஹீரோவை பார்த்து ஆர்.கே. செல்வமணி, விஜய்காந்தை பார்த்த மாதிரி இருக்குன்னார். விஜய்காந்தை மட்டுமில்லை; விஜய்ய பார்த்த மாதிரியும் இருக்கார்.” என்றார்.

 

இயக்குநர் விக்ரமன் பேசுகையில், “'என்னோட பல படங்களுக்கு இசையமைச்ச நண்பர் எஸ்.ஏ. ராஜ்குமார் இந்த படத்துக்கு இசையமைச்சிருக்கிறது மகிழ்ச்சியா இருக்கு. சமூக அக்கறையை மையமா வெச்சு உருவாகியிருக்கிற இந்த படத்தோட ஒரு பாட்டுல 'தமிழர்களோட சினத்தால் தனி ஈழம் உருவெடுக்கும்'கிற மாதிரி ஒரு வரி வருது. இயக்குநரோட அந்த கனவு நனவாகணும். அதுதான் நம் எல்லோருடைய விருப்பமும் ஆசையும்கூட'' என பெருமிதப்பட்டார்.

 

இசையமைப்பாளர் தினா பேசும்போது, ''இந்த நிகழ்ச்சில கலந்துக்கிட்டிருக்கிற, இயக்குநரோட சொந்த ஊரான விழுப்புரத்துல இருந்து வந்திருக்கிற ரசிகர்களோட உற்சாகத்தைப் பார்த்தா படம் விழுப்புரத்துல 175 நாள் ஓடி வெள்ளிவிழா காணும்கிறது உறுதியா தெரியுது. அங்கே மட்டுமில்லாம் எல்லா இடத்துலயும் படம் பெருசா ஓட ரசிகர்கள் ஆதரவு தரணும்.” என்றார்.

 

எஸ்.பி.பி. பாடிய பாடல் இடம்பெற்ற கடைசித் திரைப்படம் என்ற பெருமை பெற்றுள்ள இந்த படத்துக்கு, ஆரி ஆர்.ஜே.ராஜன் ஒளிப்பதிவு செய்ய, சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பு செய்கிறார். சிவசங்கர், அக்‌ஷை ஆனந்த், விஜி ஆகியோர் நடனம் அமைக்க, இடி மின்னல் இளங்கோ சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார். மக்கள் தொடர்பாளராக கோவிந்தராஜ் பணியாற்றுகிறார்.

Related News

7311

தங்கம் விலை உயர்வால் கவலையடைந்த ஆண்ட்ரியா!
Monday November-17 2025

கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...

‘தீயவர் குலை நடுங்க’ கதையை கேட்டு உடல் நடுங்கி விட்டது - ஐஸ்வர்யா ராஜேஷ்
Friday November-14 2025

அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...

’மிடில் கிளாஸ்’ பேசும் விசயம் முக்கியமானது - பிரபலங்கள் பாராட்டு
Wednesday November-12 2025

அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...

Recent Gallery