Latest News :

தமிழ்நாட்டின் மிகப்பெரிய சொத்து இளையராஜா - இயக்குநர் பாரதிராஜா புகழாரம்
Monday March-21 2022

பிரபாகரன் மூவிஸ் வழங்கும் கானா வினோதன், குப்பன் கணேஷன் ஆகியோரது தயாரிப்பில், கே.கணேஷனின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தில் உருவாகும் படம் ‘காதல் செய்’. 

 

அறிமுக நடிகர் சுபாஷ் சந்திர போஸ் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அறிமுக நடிகை நேகா நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் மனோபாலா, லொள்ளு சபா சுவாமிநாதன், லொள்ளு சபா மனோகரன், கணேஷன், வைத்தியநாதன், அனுபமா, அர்ச்சனா சிங், லிங்கேஷ்வரன், பத்மா, பிரவீன், ஸ்ரீனிவாஷ் உள்ளிட்ட பல நடிக்கிறார்கள்.

 

இளையராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ஏ.சி.மகேந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். கார்த்திக் படத்தொகுப்பு செய்ய, ராஜ்தேவ் நடனம் அமைக்கிறார். ஃபைஸ் கான் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார்.

 

இப்படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் வெளியீட்டு விழா சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள இளையராஜா ஸ்டுடியோவில் இன்று நடைபெற்றது. இதில் இளையராஜா, இயக்குநர்கள் பாரதிராஜா மற்றும் பி.வாசு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள்.

 

இசைக்குறுந்தகடை வெளியிட்டு பேசிய இயக்குநர் பாரதிராஜா, “காதல் செய் என்ற தலைப்பே மிக இனிமையாக இருக்கிறது. காதல் இல்லாமல் இந்த உலகில் எதுவும் இல்லை. இளையராஜாவுக்கு காதல் இருக்கும். ஆனால், அவர் எதை காதலிக்கிறார் என்பது தான் முக்கியம். இளையராஜாவின் ஒரு முகம் தான் நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். ஆனால், அவருக்கு பல முகங்கள் இருக்கிறது. ஓவியம் வரைவார், பாடல்கள் எழுவார், இப்படி பல திறமைகள் அவரிடம் இருக்கிறது. மொத்தத்தில், இளையராஜா தமிழ்நாட்டின் மிகப்பெரிய சொத்து. அவரது இசையமைப்பில் உருவாகியுள்ள காதல் செய் படம் நிச்சயம் வெற்றி பெறும்.” என்றார்.

 

இயக்குநர் பி.வாசு பேசுகையில், “பாரதிராஜா சார் சொன்னது போல் காதல் இல்லாமல் எதுவும் இல்லை. சினிமாவில் கூட அனைவரும் காதலை வைத்து தான் முதலில் படம் இயக்குவார்கள். பிறகு தான் ஆக்‌ஷன் படங்கள் எடுப்பார்கள். நான் கூட ஆரம்பத்தில் காதல் படம் மூலமாகத்தான் சினிமாவுக்குள் நுழைந்தேன். அதனால், காதல் இல்லாமல் எதுவும் இல்லை. இளையராஜா மற்றும் பாராதிராஜா இருவருடன் நான் அமர்ந்திருப்பது எனக்கு கிடைத்த பாக்கியம். இவர்களை பார்த்து தான் நான் சினிமாவுக்கே வந்தேன், இன்று அவர்களுடன் அமர்ந்திருப்பது எனக்கு மிகப்பெரிய சந்தோஷமாக இருக்கிறது.

 

இந்த இடத்தில் இப்படி ஒரு நிகழ்ச்சி நடக்கிறது என்றால் அது சாதாரண விஷயம் அல்ல. இளையராஜா சார் சாருக்கு அவருடைய இடத்தை இப்படி ஒரு நிகழ்வு நடக்க அனுமதிக்க மாட்டார். அவரே இதற்கு சம்மதித்தார் என்றால், இது சாதாரண விஷயமல்ல. அதனால் இயக்குநர் கணேஷனுக்கு, காதல் செய் படத்திற்கும் இதுவே மிகப்பெரிய வெற்றி தான்.” என்றார்.

 

’காதல் செய்’ படத்தின் தயாரிப்பாளர் கானா வினோதன் பேசுகையில், “மலேசியாவில் இருந்து வந்திருக்கிறேன். என் படத்திற்கு இளையராஜா சார் இசையமைப்பது என்பது கனவில் கூட நான் நினைக்காத ஒன்று. அதற்காக அவருக்கு மிகப்பெரிய நன்றி. என் படத்திற்கு இசையமைத்ததோடு, அதன் இசை வெளியீட்டு விழாவை அவரிடத்தில் நடத்த அனுமதி கொடுத்தது என் வாழ்நாளில் மறக்க முடியாதது.” என்றார்.

 

Kadhal Sei Audio Launch

 

‘காதல் செய்’ பட இயக்குநர் கணேஷன் பேசுகையில், “கன்னடத்தில் 15 படங்கள், தமிழில் 4 படங்கள் இயக்கியிருந்தாலும் காதல் செய் படம் என் சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத படமாக அமைந்துவிட்டது. காரணம், இளையராஜா சார் இந்த படத்திற்கு இசையமைத்தது மட்டும் அல்ல, அவருடைய இடத்தில் பாடல்கள் வெளியீட்டு நிகழ்ச்சி நடத்துவதற்கும் தான். இப்படி ஒரு நிகழ்வு யாருக்கும் நடந்திருக்காது, எனக்கு நடந்திருக்கிறது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது.

 

அடையாளம் தெரியாத நடிகர்களுக்கு வாழ்க்கை கொடுத்தவர் இளையராஜா, அதேபோல் பல இயக்குநர்களுக்கு வாழ்வு கொடுத்தவர் இளையராஜா. அவருக்காக தமிழ் சினிமா இயக்குநர்கள் ஒன்றிணைந்து ஒன்றை செய்திருக்க வேண்டும், என்று நான் ஆசைப்பட்டேன். ஆனால், அது நடக்கவில்லை. 

 

நான் ஒரு படம் எடுத்தேன், அதில் இலங்கை தமிழர்கள் பற்றி சில காட்சிகள் இருந்தது. ஆனால், சிலர் அந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்க மாட்டார், என்று எண்ணிடம் கூறினார்கள். நானும் அவர்கள் சொன்னதை நினைத்துக்கொண்டே இளையராஜாவிடம் வந்தேன், படத்தை பார்த்த அவர், இங்கே நீ பிரபாகாரனை காட்டியிருக்க வேண்டும், என்று கூறினார். எனக்கு மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்தது. அப்போது தான் புரிந்தது ராஜாவை பற்றி வெளியில் எப்படி தவறாக புரிந்து வைத்திருக்கிறார்கள். யார் எதை சொன்னாலும், அவரைப் போல் ஒரு நல்ல மனிதரையும், தமிழ்ப்பற்று உள்ளவரையும் பார்க்க முடியாது.” என்றார்.

 

இறுதியாக பேசிய இளையராஜா, “இங்கு சிலர் பேசும்போது எதிர்கால இளையராஜாக்களே, எதிர்கால பாராதிராஜாக்களே என்று பேசினார்கள், இளையராஜா என்றால் அது ஒருவர் மட்டும் தான், அது இளையராஜா மட்டும் தான். அதேபோல், பாரதிராஜா என்றால் அவர் ஒருவர் மட்டும் தான், அவரைப்போல் இனி யாராலும் வர முடியாது. என்னைப் போலவும் வர முடியாது.

 

எனக்கு கூட காதல் இருக்கும் என்று பாரதிராஜா கூறினார், என்னைப் போல் காதலித்தவர் யாரும் இருக்க முடியாது. ஆனால், நான் எதை காதலித்தேன் என்பது தான் முக்கியம். இசையை தவிர வேறு எதையும் நான் காதலிக்கவில்லை.

 

காதல் என்பது மிகவும் முக்கியம், அதனால் காதல் செய் என்ற தலைப்பில் படம் எடுத்திருக்கும் இயக்குநர் கணேஷனும், அவருடைய படமும் நிச்சயம் வெற்றி பெறும்.” என்றார்.

Related News

8107

‘தீயவர் குலை நடுங்க’ கதையை கேட்டு உடல் நடுங்கி விட்டது - ஐஸ்வர்யா ராஜேஷ்
Friday November-14 2025

அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...

’மிடில் கிளாஸ்’ பேசும் விசயம் முக்கியமானது - பிரபலங்கள் பாராட்டு
Wednesday November-12 2025

அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...

’யெல்லோ’ படம் மூலம் நிறைய கற்றுக்கொண்டோம் - பூர்ணிமா ரவி நெகிழ்ச்சி
Tuesday November-11 2025

யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...

Recent Gallery