Latest News :

கமல் சார் எனக்கு ஆன் ஸ்கீரின் குரு - சிம்பு
Tuesday May-17 2022

கமல் தயாரித்து நடித்திருக்கும் விக்ரம் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த நிகழ்வில் நடிகர் சிம்பு சிறப்பு விருந்தினராக கலந்துக்கொள்ள, இயக்குநர் பா.இரஞ்சித், படத்தில் நடித்திருக்கும் விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டார்கள்.

 

நிகழ்வ்வியில் பேசிய நடிகர் சிம்பு, ”கமல் 50 நடந்த போது நான் மேடையில் ஏறி பேச முடியவில்லை என வருத்தமா இருந்துச்சு. அது இப்போது நிறைவேறி இருக்கு. அப்பா எப்படி ஆப்-ஸ்கிரின்ல எப்படியோ அது மாதிரி கமல் சார் எனக்கு ஆன்-ஸ்கீரின் குரு. விஸ்வரூபம் படம் பிரச்னையின் போது, எதுக்குமே எழுந்து ஓட மாட்டேன் ஆனால் அன்னிக்கு கமல் சார் கூடவே இருந்தேன். இந்த படம் ட்ரைலர் சூப்பரா இருந்தது. ஒவ்வொருமுறை கமல் சார் படம் வரும் போது என்னை கூப்பிடுவாரு, ஒரு தடவை 'படம் நல்லா இருக்கு,ஆனா ஓடுமான்னு தெரியல' எனச் சொன்னேன். இன்னொரு தடவ 'எனக்கு படம் பிடிக்கல. ஆனால் சூப்பர் ஹிட் ஆகும்னு' சொன்னேன். கமல் சார் சிரிச்சாரு. 

 

இந்த படத்தை பத்தி எனக்கு எதுவுமே தெரியாது. ட்ரைலர் மட்டும் தான் பார்த்தேன். ஆனால் இந்த படம் சூப்பர் ஹிட் ஆகும்னு சொல்றேன். லோகேஷ் உடன் நிறைய பேசி இருக்கேன். பழகி இருக்கேன். நிறைய பேசணும் வெளிய சொல்லணும் என இருக்க காலத்துல தன்னுடைய படம் பேசணும்னு வேலை பார்க்கிற ஒருத்தர், லோகேஷ் கனகராஜ். இவ்வளவு பெரிய ஸ்டார் காஸ்ட் வச்சுட்டு படம் பண்றது சாதாரண விஷயம் கிடையாது."

 

 அப்புறம் இந்த விஜய் சேதுபதி தன்னை எப்போதும் நார்மலா வச்சுட்டு மத்தவங்க கிட்ட இருந்து கத்துக்க முயற்சி செய்பவர். அவர் கூட செக்க சிவந்த வானம் படத்துல நடிச்சு இருக்கேன். மலையாளத்துக்கு பஹத் எப்படியோ அப்படி தமிழுக்கு விஜய் சேதுபதி. பஹத் பாசில் எனக்கு ரொம்ப பிடிக்கும். பர்பார்மன்ஸ் செய்கிற மூன்று பேர் இந்தப் படத்தில் இருக்காங்க. அனிருத்தின் உழைப்பு எனக்கு தெரியும். அனிருத்தின் உழைப்பு தான் ஹிட் ஆகுறதுக்கு காரணம். படம் வெற்றியடைய வாழ்த்துகள்.” என்றார்.

 

நடிகர் விஜய் சேதுபதி பேசுகையில், ”கமல் 60 நிகழ்ச்சியின் போது, கமல் சாருடன் நடிக்க வேண்டும் என்று கேட்டேன். இப்போது அது நடந்துவிட்டது.  அடுத்து ஒரு வேண்டுகோள் சார் ... உங்க டைரக்சன்ல நடிக்கணும்னு ஆசை சார். 13 வயசுல கமல் சாரோட நம்மவர் படத்துல நடிக்கிறதுக்கு போய் ரிஜெக்ட் ஆனேன். இப்போ சேர்ந்து நடிச்சது நான் செஞ்ச புண்ணியமா, என் பாட்டன் செஞ்ச புண்ணியமான்னு தெரில” என்றார்.

 

இயக்குநர் பா.இரஞ்சித் பேசுகையில், “லோகேஷ் நிறைய பேட்டிகளில் தான் கமல் ரசிகர் என சொல்லி இருக்கிறார். கமலுக்கு என்ன வேண்டும் என சரியாக புரிந்து கொண்டு லோகேஷ் இந்தப் படம் இயக்கியிருக்கிறார். விஜய் சேதுபதி முக்கியமான கதாபாத்திரம் பண்ணியிருக்கிறார். சமீபகாலமாக தமிழ் சினிமாவில் நல்ல கன்டென்ட்டே இல்லையானு நிறைய பேர் கேக்குறாங்க. அப்படி எதுவும் கிடையாது. 'விக்ரம்' அது எல்லாத்தையும் உடைச்சு பெரிய வெற்றிபெறும்னு நம்புறேன். லோகேஷுக்கு வாழ்த்துக்கள். உங்களை நம்பி நிறைய பேர் காத்திருக்கோம். மதுரையைக் கதைக்களமா வச்சு கமல் சாரோட ஒரு படம் பண்ணனும்னு எனக்கு ரொம்ப நாள் ஆசை. விருமாண்டி எனக்கு ரொம்ப பிடிச்ச படம். மிக விரைவில் அவருடன் இணையப்போகிறேன்.” என்றார்.

 

உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “கடைசி நேரத்தில் ஓடும் ரயிலில் ஏறுவது போல தான் இந்த படத்தில் கடைசியில் இணைந்தேன். நிறைய பேர் என்னிடம் கமல்ஹாசனையே மிரட்டி படம் வாங்கி விட்டீர்களா என்று கேட்டார்கள். அவரை யாரும் மிரட்ட முடியாது. என்ன நடந்தது என்பது எனக்கும் கமல் சாருக்கு மட்டும் தான் தெரியும். அது போகட்டும் அரசியல் கட்சி தொடங்கி சிறப்பாக செயல்பட்டு வரீங்க கமல் சார். ஆனா ஒரு ரெக்வஸ்ட், வருசத்துக்கு ஒரு படமாச்சு பண்ணுங்க சார் . ரெட் ஜெயன்ட்ல பல சின்ன படங்கள் தயாரிக்கும் போது பெரிய பலமா கமல் சார் இருப்பாரு. நானும் அவரோட பெரிய ரசிகன். இந்த படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கு.” என்றார்.

 

இசையமைப்பாளர் அனிருத் பேசுகையில், “விக்ரம் படம் எங்கள் அனைவருக்கும் முக்கியமான படம். நான் 11 வருடங்களாக இசையமைத்து வருகிறேன். 'இந்தியன்2' படத்தில் கிடைத்த வாய்ப்பும் முழுமை பெறாமல் போன வருத்தத்தில் இருந்த போது தான், லோகேஷ் இந்த வாய்ப்பு கொடுத்தார். 'பத்தல பத்தல' பாடலுக்கான ரெக்கார்டிங் நடந்த இரண்டு நாட்கள் மறக்க முடியாது. ஒரு மாதத்திற்கு முன்பே இந்த பாடல் வரிகளை கமல்ஹாசன் அனுப்பி விட்டார். தமிழில் பாடி முடித்ததும் தெலுங்கின் வரிகளை பார்த்து இதில் பிழை இருக்கிறது என சொல்லி அவரே சரி செய்து உடனே பாடினார். 'மாஸ்டர்' 50% லோகேஷ் படம். ஆனால், 'விக்ரம்' படம் முழுக்க முழுக்க கமல் சாரின் ரசிகனாக லோகேஷின் சம்பவம். எந்தவொரு இசை வெளியீட்டு விழாவிலும் ஒரு படத்தின் வெற்றி குறித்து பேச மாட்டேன். ஆனால், இந்த படம் நிஜமாகவே உலகம் முழுக்க வெற்றி பெறும்.” என்றார்.

 

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசுகையில், ”கமல் சார் வீட்டில் என்னுடைய ஆரம்ப காலத்தில் நின்று கைக்காட்டுவார் என்று எதிர்பார்த்து கடவுளை வேண்டி கொண்டேன். ஆனால், இப்போது ஆக்‌ஷன் கட்டே சொல்ல வைத்து விட்டார். அந்த ஆண்டவருக்கும் இந்த ஆண்டவருக்கும் நன்றி. அவரால் தான் நான் சினிமாவுக்குள்ளேயே வந்தேன். எட்டு ஒன்பது வருடங்கள் சினிமாவில் என் உழைப்பு தான் அவரிடம் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. இந்த படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி போய் கொண்டிருந்தது. இரவு 2 மணிக்கு தேவைப்பட்ட காட்சி ஒன்றுக்கு 26 புஷ் அப்கள் செய்தார். அதை வீடியோவாக எடுத்து வைத்துள்ளேன். படம் வெளியானதும் மேக்கிங் வீடியோவாக முதலில் அதை தான் வெளியிடுவேன். இந்த வயதில் கொரோனாவுக்கு பிறகு கமல் சார் உழைப்பை பார்க்கும் போது நாம் பார்ப்பதெல்லாம் வேலையே இல்லை என்று தான் தோன்றுகிறது. படம் பார்த்து விட்டு கமல் பிடித்திருக்கிறது என சொன்னதும் எனக்கிருந்த ஒரு வருட அழுத்தம் குறைந்தது. இந்த படத்தில் சூர்யா சார் நடித்திருப்பதற்கு நன்றி. ஏன் அந்த நன்றி என்பது படம் பார்க்கும் போது உங்களுக்கே தெரியும். நிச்சயம் உங்கள் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யும்.” என்றார்.

Related News

8254

இசையமைப்பாளர் அவதாரம் எடுத்த இயக்குநர் மிஷ்கின்
Tuesday June-28 2022

இசையமைப்பாளர்கள் நடிகர் மற்றும் இயக்குநர் ஆவதும், இயக்குநர்கள் இசையமைப்பாளர்கள் ஆவதும் தமிழ் சினிமாவில் அவ்வபோது நடக்கும் சம்பவங்கள் தான்...

காதலுக்கான மொழி தமிழ் தான்! - தமிழச்சி தங்கபாண்டியன் பேச்சு
Tuesday June-28 2022

அமெரிக்க வாழ் தமிழ் எழுத்தாளரான தமிழ்க்காரி என்கிற சித்ரா மகேஷ் அவர்களின் ‘காதல் கதை சொல்லட்டுமா’ மற்றும் ‘பூக்கள் பூக்கும் தருணம்’ ஆகிய இரண்டு நூல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது...

பாலபிஷேகம், அன்னதானம்! - ‘மாயோன்’ படத்தால் பரவசமடைந்த மக்கள்
Monday June-27 2022

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'மாயோன்' திரைப்படத்தைப் பற்றி திரையுலக ஆர்வலர்கள், ரசிகர்கள் என பலரும் நேர்மறையான விமர்சனங்களைத் தெரிவித்ததால், பொது விடுமுறை தினமான ஞாயிறன்று சென்னையிலுள்ள ரோஹிணி திரையரங்கத்திற்கு இப்படத்தைக் காண அதிகளவிலான ரசிகர்கள் சென்றனர்...