Latest News :

குடும்பத்தோடு பார்ப்பதற்கு சரியான படம் ‘அடடே சுந்தரா’ - நடிகர் நானி நம்பிக்கை
Saturday June-04 2022

நானி, நஸ்ரியா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘அடடே சுந்தரா’. கலப்பு திருமணத்தை மையமாக வைத்து குடும்ப காமெடி காதல் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தை விவேக் ஆத்ரேயா இயக்கியிருக்கிறார். நரேஷ், அழகம்பெருமாள், நதியா, ரோகிணி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு நகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்ய, விவேக் சாஹர் இசையமைத்திருக்கிறார்.

 

மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருக்கும் இப்படம்  தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வரும் ஜூன் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. 

 

இந்த நிலையில், ‘அடடே சுந்தரா’ படத்தின் தமிழ் பதிப்பின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் நானி, நடிகை நஸ்ரியா, நடிகை ரோகிணி, நடிகர் அழகம்பெருமாள் ஆகியோர் கலந்துக்கொண்டார்கள்.

 

நிகழ்வில் நடிகர் நானி பேசுகையில், “அடடே சுந்தரா படத்தில் நடித்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஷ்யாம் சிங்கார ராய் போன்ற ஆக்சன் படங்களில் நடித்துவிட்டு, ‘அடடே சுந்தரா’ போன்ற நகைச்சுவையும், காதலும் கலந்த திரைக்கதையில் நடிப்பது பொருத்தமான தேர்வு என நினைக்கிறேன். ரசிகர்களுக்கும் நிச்சயம் இது பிடிக்கும். படத்தின் கதை, தெலுங்கு, தமிழ், மலையாளம் என மொழி கடந்து அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் அமைந்துள்ளது. படத்தின் உணர்வுபூர்வமான திரைக்கதை, அனைத்துவித ரசிகர்களையும் கவரும். எங்களுடைய ஒட்டுமொத்த படக்குழுவினரும் கடின உழைப்பை அளித்திருக்கிறோம். ‘அடடே சுந்தரா’ நல்லதொரு திரையரங்க அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும். ஜூன் 10ஆம் தேதியன்று வெளியாகும் இந்த திரைப்படத்தை ரசிகர்கள் எப்படி வரவேற்பார்கள் என்ற ஆவலுடன் காத்திருக்கிறோம். ஜூன் மாத தொடக்கத்தில், பள்ளி, கல்லூரிகள் திறந்துவிடும் என்பதாலும், குடும்பத்துடன் திரையரங்கத்திற்கு சென்று காண வேண்டிய அற்புதமான காதலும், நகைச்சுவையும் கலந்து திரைப்படம்தான் அடடே சுந்தரா. குடும்பத்தோடு பார்க்க கூடிய கலகலப்பான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக ‘அடடே சுந்தரா’ நிச்சயம் இருக்கும்.” என்றார். 

 

படத்தின் நாயகி நஸ்ரியா பேசுகையில், “தமிழில் பேசி நீண்ட நாட்களாகிவிட்டது. அதனால் ஏதேனும் தவறு வந்து விடுமோ..! என்ற அச்சம் காரணமாக ஆங்கிலத்திலேயே பேசுகிறேன்.. இந்தப் படத்தில் நானி உடன் இணைந்து பணியாற்றியது மகிழ்வான அனுபவமாக இருந்தது. காதல் கதைக்கு ஊக்கமும், ஆதரவும் அளித்து வரும் தமிழ் ரசிகர்கள் ‘அடடே சுந்தரா’ படத்திற்கும் ஆதரவு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். பொழுதுபோக்கு அம்சங்களுடன் காதலும் நகைச்சுவையும் கலந்து உருவாகியிருக்கும் ‘அடடே சுந்தரா’ படத்திற்கு ஆதரவு தாருங்கள்.” என்றார்.

 

நடிகர் அழகம் பெருமாள் பேசுகையில், “எனக்கு இது முக்கியமான திரைப்படம். நான் தெலுங்கில் நேரடியாக அறிமுகமாகும் முதல் திரைப்படம் இது. தமிழைத் தவிர வேறு மொழி படங்களில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய கனவு. ஏனெனில் ஒவ்வொரு மொழி திரைப்படங்களில் பணியாற்றும்போது ஒவ்வொரு வகையான கலாச்சாரத்தையும், வித்தியாசமான சிந்தனை கொண்ட படைப்பாளிகளையும் காணலாம். பழகலாம். அவர்களிடமிருந்து பல நுட்பமான விசயங்களை கற்றுக் கொள்ளலாம். வேறு மொழிப் படங்களில் நடிக்கும்போது கிடைக்கும் புத்துணர்ச்சி மிக மிக முக்கியமான தேவையாக இருக்கிறது. நிறைய தமிழ் படங்களில் நடித்தாலும், வேறு மொழி படங்களில் நடிக்கும் போது கிடைக்கும் அனுபவம் அலாதியானது. அந்தவகையில் ‘அடடே சுந்தரா’ அற்புதமான அனுபவத்தை வழங்கிய திரைப்படம். படத்தின் இயக்குநர் விவேக் ஆத்ரேயா. இளம் திறமைசாலி. ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் என திறமையான தொழில்நுட்ப குழுவினருடன், திறமைவாய்ந்த நடிகர் நானி, நஸ்ரியா, ரோகிணி, நதியா போன்றோருடன் நடித்தது மறக்க இயலாதது. இந்தப்படத்தில் நானும், நதியாவும் ஜோடிகளாக நடித்திருக்கிறோம். ஆனால் என்னுடைய கல்லூரி காலகட்டங்களில் நதியா மீது எனக்கு கிரஷ் இருந்தது. தெலுங்கில் முக்கியமான குணச்சித்திர நடிகரான நரேஷ் நல்லதொரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். திறமையான கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுடன், தயாரிப்பு நிறுவனமும்  என்னைப் போன்ற கலைஞர்களுக்கு இருந்த சங்கடங்களை புரிந்து முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார்கள். படப்பிடிப்பு அனுபவம் முழுவதும் நான் எதிர்பார்த்ததை விட நேர்த்தியாக அமைந்தது. இதற்காக உளமார மகிழ்ச்சியடைந்து நன்றி கூறுகிறேன்.” என்றார்.

 

நடிகை ரோகிணி பேசுகையில், ”தொடர்ந்து நல்ல படங்களில் நடித்துக்கொண்டே ரசிகர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ‘அடடே சுந்தரா’ எனக்கு மிகவும் ஸ்பெஷலான தனித்துவமான திரைப்படம். ஆக்ஷன் படங்களில் ஆக்ஷன் காட்சிகள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. இதுபோன்ற நேரத்தில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாகவும், உற்சாகத்துடனும் சிரித்துக்கொண்டே கண்டு ரசிக்கக் கூடிய படமாக ‘அடடே சுந்தரா’ தயாராகியிருக்கிறது. நகைச்சுவையுடன் மட்டுமல்லாமல் மனதில் தங்கும் காதல் கதையும் இதில் இருக்கிறது. இந்தப்படத்தில் நடிப்பதற்கு முன் நானும், நானியும் ஏராளமான திரைப்படங்களில் தாய் -மகன்  வேடங்களில் நடித்திருக்கிறோம். எனக்கும், ரசிகர்களுக்கும் பிடித்த நடிகர் நானி. படப்பிடிப்பு தளத்தில் நானும், நானியும் பணியாற்றும்போது நிஜமாகவே தாயும் மகனையும் போலவே பழகுவோம். நடந்துகொள்வோம். இந்தப் படத்திலும் நானிக்கு தாயாக நடித்திருந்தாலும், அந்த கதாபாத்திரத்திற்கென தனித்தன்மை இருக்கிறது. அதை ரசிகர்களுக்கு திரையில் சொல்லும் விதம் அனைவருக்கும் பிடிக்கும். இந்த படத்தில் கதைதான் ஹீரோ என சொல்லலாம்.

 

இயக்குநர் விவேக் இந்தப் படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் தனித்தன்மையை முன்கூட்டியே தீர்மானித்து, அதனை அவருடைய கற்பனை கண்களில் கண்டு ரசித்து, அதை மட்டுமே திரையில்  கொண்டுவந்திருக்கிறார். இது படத்திற்கு பின்னணி பேசும்போது உணர முடிந்தது. தொடர்ந்து வெற்றிப் படங்களில் நான் இடம்பெறுவதற்கு விவேக்கை போன்ற இயக்குநர்கள் தான் காரணம் என்பதையும் இங்கே நான் கூற விரும்புகிறேன். ஜூன் 10ஆம் தேதி ‘அடடே சுந்தரா’ வெளியான பிறகு, ரசிகர்கள் அனைவரும் எங்களையும், எங்களது கதாபாத்திரங்களையும் கொண்டாடுவார்கள். தொடர்ந்து எனக்கு நல்ல கதாபாத்திரங்களை வழங்கிவரும் தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகினருக்கு நன்றி தெரிவிப்பதுடன், நான் இன்று நல்லதொரு நிலையில் திரையுலகில் பயணிக்கிறேன் என்றால், இதற்கு காரணமாக இருந்த அனைத்து இயக்குநர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.” ன்றார்.

 

நகைச்சுவைக்கும், காதலுக்கும் முக்கியத்துவம் கொடுத்து தயாராகியிருக்கும் ‘அடடே சுந்தரா’ படத்தின் தமிழ் பதிப்பின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related News

8287

‘நாகபந்தம்’ படத்தின் “நமோ ரே” பாடல் வெளியானது!
Tuesday March-17 2026

விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...

‘கேடி : தி டெவில்’ பட பாடலில் நோரா ஃபதேஹி!
Tuesday March-17 2026

பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...

‘ஹேப்பி ராஜ்’ போன்ற குடும்பக் கதைகள் தான் இன்று தேவை – விஜய் சேதுபதி
Tuesday March-17 2026

ஜெயவர்தன் தயாரிப்பில், மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’ஹேப்பி ராஜ்’ திரைப்படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், வெளியீட்டுக்கு முந்த நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது...

Recent Gallery