Latest News :

அதிகாலை 4 மணிக்கு குடும்பத்தோட தியேட்டரில் பார்க்கும் படமாக ‘வீட்ல விசேஷம்’ இருக்கும் - ஆர்.ஜே.பாலாஜி
Sunday June-05 2022

பிற மொழிகளில் வெற்றி பெற்ற படங்களை தமிழிக்கு ஏற்றபடி பல மாற்றங்களோடு உருவாகும் படங்கள் தமிழ் சினிமாவி மிகப்பெரிய வெற்றி பெறுகிறது. சமீபத்தில் வெளியான உதயநிதியின் ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தை தொடர்ந்து இந்தியில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘பதாய் ஹோ’ என்ற படத்தை ‘வீட்ல விசேஷம்’ என்ற தலைப்பில் ஆர்.ஜே.பாலாஜி தமிழில் ரீமேக் செய்திருக்கிறார். தமிழுக்கு ஏற்றபடி பல மாற்றங்களோடு உருவாகியிருக்கும் இந்த படத்தில் ஹீரோவாக நடித்திருப்பதோடு, என்.ஜே.சரவணனனுடன் இணைந்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கவும் செய்திருக்கிறார்.

 

சத்யராஜ், ஊர்வசி, அபர்ணா பாலமுரளி, கே.பி.ஏ.சி.லலிதா, யோகி பாபு, மயில்சாமி, புகழ், ஜார்ஜ் மர்யன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ், பேவீவ் புரொஜக்ட்ஸ் சார்பில் போனி கபூர் மற்றும் ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

 

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படம் வரும் ஜூன் 17 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

 

இந்த நிலையில், படம் குறித்து பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்துக்கொண்ட ஆர்.ஜே.பாலாஜி, “கல்யாண வயசுல வீட்டுல பையன் இருக்கும்போது, அம்மா கர்ப்பமானா என்ன நடக்கும் அப்படிங்கறதுதான் கதை. அந்தக் கதையை மட்டும் எடுத்துக்கிட்டு திரைக்கதையை மொத்தமாக தமிழுக்கு ஏற்ப மாத்தியிருக்கோம். ஒரிஜினல் படத்துல, அம்மா ஏன் குழந்தைப் பெத்துப்பாங்கன்னா, அவங்களைப் பொறுத்தவரை அபார்ஷன்ங்கறது பாவச்செயல்னு சொல்வாங்க. ஆனா, நாங்க இதை மாற்றியிருக்கோம். நான் குழந்தைப் பெத்துக்க போறேன் என்று ஒரு அம்மா சொல்றாங்கன்னா, அதை ஏன் என்று  கேட்கிற உரிமை யாருக்குமில்லை. அதே நேரத்துல அபார்ஷன் பாவச் செயல்னும் சொல்ல முடியாது. இப்படி கதையில சில மாற்றங்கள் இருக்கு. அதே மாதிரி மருத்துவமனையில ஒரு ஏழு நிமிட காட்சி இருக்கு. அது ஒரிஜினல்ல கிடையாது. இப்பட பல மாற்றங்களோடு தான் இந்த படத்தை எடுத்திருக்கோம். சொல்லப்போனால் இந்தி படத்தை எத்தனை பேர் பார்த்திருப்பார்கள் என்று தெரியாது, அதனால் இது முழுக்க முழுக்க நேரடி தமிழ் கதையாக தான் இருக்கும்.

 

இந்த படத்தோட ஹீரோ, ஹீரோயின் என்றால் சத்யராஜ் சாரும், ஊர்வசி மேடமும் தான். இந்த  படத்தில் அம்மா வேடத்தில் ஊர்வசி தான் நடிக்க வேண்டும் என்று முதலில் முடிவு செய்தோம். ஏன் என்றால், அவங்களுடன் நான் ‘மூக்குத்தி அம்மன்’ படத்தில் நடிக்கும் போது எனக்கு ரொம்ப ஈஸியாக இருந்தது. அதேபோல், இந்த படத்தில் சத்யராஜ் சார் கதாப்பாத்திரத்திற்கு வேறு சில நடிகர்களை தேர்வு செய்தோம். ஆனால், அவர்கள் எனக்கு அப்பாவாக நடிக்க யோசித்தார்கள். ஏற்கனவே சத்யராஜ் சாரை எல்.கே.ஜி படத்தில் நடிக்க வைக்க விரும்பினேன். ஆனால், அவர் வில்லனாக நடிக்க மாட்டேன், என்று மறுத்துவிட்டார். அதனால், இதில் நடிக்க கேட்டால் என்ன சொல்வாரோ என்ற தயக்கத்தோடு தான் அவரை அனுகினோம். ஆனால், அவர் இந்த படத்தின் கதையை கேட்டதும் உடனே ஒகே சொன்னதோடு, எனது 10 சிறந்த படங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும், என்று அவர் சொன்னது எனக்கு உற்சாகத்தை கொடுத்தது.

 

Veetla Vishesham

 

படம் ஆரம்பிக்கும் போது இவங்க தான் படத்துலா பேசப்படுவாங்க, என்று நான் ஒரு கணக்கு போட்டேன். ஆனால், படம் முடிந்த பிறகு அனைவரையும் ஊர்வசி மேடம் காலி செய்துவிட்டார். அவர் தான் படத்தில் அதிகம் பேசப்படுவார். அந்த அளவுக்கு பிரமாதமாக அவருடைய கதாப்பாத்திரமும், நடிப்பும் இருக்கும்.

 

அபர்ணா பாலமுரளி எனக்கு ஜோடியாக நடித்திருக்காங்க. தமிழ் தெரிந்த ஒரு நடிகையை நடிக்க வைக்க வேண்டும் என்பது தான் எனது நோக்கம். காரணம், தமிழ் தெரியாதவர்களை நடிக்க வைப்பது மிகப்பெரிய கஷ்ட்டமான விஷயம். அதற்காகவே தமிழ் தெரிந்தவர்களை தேடினோம். அபர்ணா பாலமுரளி அதற்கு சரியானவர் என்பது தெரிந்தது. சூரரைப் போற்று படத்தில் எப்படி சிறப்பாக நடிச்சாங்களோ அதுபோல இந்த படத்திலும் நல்லா நடிச்சிருக்காங்க.” என்றார்.

 

கல்யாண வயசுல பையன வச்சிக்கிட்டு அம்மா குழந்தை பெத்துக்கறது சர்ச்சையான விஷயமாகாதா? என்ற கேள்விக்கு பதில் அளித்த பாலாஜி, “இது நம்ம வாழ்க்கையில் சாதாரண விஷயம் தான். எத்தனையோ குடும்பத்தில் இப்படி நடந்துட்டு இருக்கு, ஆனால் நாம் அதை இப்போது கவனிப்பதில்லை. நான் பிளஸ் டூ படிக்கும் போது என் அம்மா ஐந்தாவது குழந்தை பெற்றெடுத்தார். நான் கல்லூரியில் சேறும் போது அந்த குழந்தையை தூக்கிக்கொண்டு வந்தார். அதனால் இது சர்ச்சையான விஷயமே அல்ல, நம் வாழ்க்கையில் நடக்கும் ஒன்று தான். அதேபோல், இதை படமாக சொல்லும் போதும் குடும்பத்தோடு பார்க்க கூடிய படமாக தான் எடுத்திருக்கிறோம். இப்போது அதிகாலை 4 மணிக்கு தியேட்டரில் படம் பார்க்கும் பழக்கம் அதிகரித்துள்ளது.  அதிகாலை 4 மணி காட்சிக்கு இளைஞர்கள் மட்டும் அல்ல, அவர்கள் தங்களது பெற்றோர்களையும் அழைத்துச் செல்லும் ஒரு படமாகத்தான் ’வீட்ல விஷேசம்’ இருக்கும்.” என்றார்.

Related News

8289

‘தீயவர் குலை நடுங்க’ கதையை கேட்டு உடல் நடுங்கி விட்டது - ஐஸ்வர்யா ராஜேஷ்
Friday November-14 2025

அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...

’மிடில் கிளாஸ்’ பேசும் விசயம் முக்கியமானது - பிரபலங்கள் பாராட்டு
Wednesday November-12 2025

அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...

’யெல்லோ’ படம் மூலம் நிறைய கற்றுக்கொண்டோம் - பூர்ணிமா ரவி நெகிழ்ச்சி
Tuesday November-11 2025

யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...

Recent Gallery