Latest News :

‘கணம்’ எனக்கு மிக முக்கியமான படம் - நடிகை அமலா பால் நெகிழ்ச்சி
Saturday September-03 2022

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஸ்ரீ கார்த்திக் இயக்கியிருக்கும் படம் ‘கணம்’. ஷர்வானந்த் ஹீரோவாக நடித்திருக்கும் இப்படத்தில் ரீத்து வர்மா ஹீரோயினாக நடித்திருக்கிறார். நடிகை அமலா நீண்ட இடைவெளிக்குப் பிறகு மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன் நாசர், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

 

தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வரும் செப்டமர் 9 ஆம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளது. இப்ப்டத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில், நடிகை அமலா உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்துக்கொண்டார்கள்.

 

நிகழ்ச்சியில் நடிகை அமலா பேசுகையில், “ஒரு படத்தை பற்றி சாதாரணமாக இவ்வளவு பேச மாட்டார்கள். என்னுடைய இளமை காலத்தில் ஆதரித்த தமிழ் மக்களிடம் 30 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அம்மாவாக வந்துருக்கிறேன். இப்படம் எனக்கு மிக மிக சிறப்பான படம். எங்கிருந்தாலும், எப்போது இருந்தாலும், எந்த மொழியாக இருந்தாலும், எந்த நாட்டில் இருந்தாலும், எந்த நேரமாக இருந்தாலும் இந்த படம் அனைவரையும் இணைக்கும். உங்களை சிரிக்க வைக்கும் அர்த்தமுள்ள படம். ஆழமான அன்பை உணர்வுபூர்வமாக அழகாக கொடுத்திருக்கிறார் ஸ்ரீ கார்த்திக். அம்மாவாக இருக்கும் அனைவருக்கும், போராட்டங்களோடு வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கும் இப்படம் நெருக்கமாக இணைக்கும்.

 

இந்த படத்தில் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமையடைகிறேன். இந்த கதாபாத்திரம் கொடுத்ததற்கு ஸ்ரீ கார்த்திக்கு நன்றி. உங்கள் அம்மாதான் இந்த படத்திற்கு உத்வேகம் கொடுத்தார் என்று எனக்கு தெரியும். இந்தப்படத்தை அவரும் நம்முடன் பார்த்து நிச்சயம் ஆசீர்வதிப்பார் என்று நம்புகிறேன். எஸ். ஆர்.பிரபு, நீங்கள் ஒரு சிறப்பு வாய்ந்த தயாரிப்பாளர். உங்களுடைய எல்லா படங்களும் வெற்றி அடைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன். சினிமா துறையில் இருக்கும் இளம் கலைஞர்களுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நீங்கள் ஆசீர்வாதமாக இருக்கிறீர்கள். இப்படத்தின் குழுவுடன் பணியாற்றுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நான் எந்த படம் பார்த்தாலும் பார்வையாளராக தான் பார்ப்பேன். வரும் செப்டம்பர் 9ஆம் தேதியும் இப்படத்தை பார்வையாளராக பார்க்க ஆவலாக உள்ளேன்.” என்றார்.

 

நடிகர் ஷர்வானந்த் பேசுகையில், “எங்கேயும் எப்போதும் படத்திற்கு பிறகு ஏன் நீங்கள் தமிழில் நடிக்கவில்லை என்று கேட்டார்கள். கணம் படம் போன்று கதைக்காக தான் காத்து கொண்டிருந்தேன். நான் கதையை மட்டுமே நம்பி இருக்கிறேன். நமக்கு எப்போதும் எஸ். ஆர்.பிரபு போன்ற தயாரிப்பாளர்கள் தேவை. இப்படத்திற்கு தூண் போல் இருந்திருக்கிறார். ரவி ராகவேந்திரா போன்று அருமையான நடிகரை யாரும் பார்க்க முடியாது. நாசர் சார், ரீத்து வர்மா இயற்கையாக நடிக்க கூடியவர்கள். இப்படத்தின் மூலம் சதீசும், ரமேஷும் நண்பர்களாக கிடைத்திருக்கிறார்கள்.

 

Kanam

 

அமலா மேடமை எப்போது பார்த்தாலும் அம்மாவாக தான் தோன்றும். இந்த படம் இயக்குநர் ஸ்ரீ கார்த்திக் உடைய படம். இன்னும் 5 வருடங்களுக்கு இது போன்று படம் வருவது சாத்தியமில்லை. இந்தியாவின் சிறந்த இயக்குநராக வருவார் என்பதில் சிறிதும் ஐயமில்லை.” என்றார்.

 

நடிகர் நாசர் பேசுகையில், “4 வருடங்களுக்குப் பிறகு இப்போது தான் டைம் மெஷின் தரை இறங்கி இருக்கிறது. ஒரு தயாரிப்பாளரே அழைத்து இயக்குநரிடம் கதைக் கேளுங்கள் என்று கேட்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எஸ். ஆர். பிரபு அவருடைய நிறுவனத்தில் ஒரு படம் மாதிரி இன்னொரு படம் இருக்க கூடாது என்பதில் எப்போதும் கவனமாக இருப்பார். அவர் ஸ்ரீ கார்த்தியை கண்டுபிடித்தது ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால், சைன்ஸ் பிக்ஷன் என் மனதிற்கு மிகவும் நெருக்கமான விஷயம்.  இந்தியாவில் இது போன்று படம் அதிகம் வருவதில்லை. ஸ்ரீ கார்த்திக் கதை கூறும் போது குழந்தை மாதிரி மாறி விட்டேன். நிறைய பேசினோம் இந்த விஷயங்கள் புரியாது அந்த விஷயங்கள் புரியாது, என்று பல மணி நேரம் சண்டை கூட போட்டு இருக்கிறேன். இந்தக் கதையை ஜுராசிக் பார்க் படத்தில் அந்தத் தாத்தா கூறுவதுபோல விளக்கமாக கூறினால் தான் புரியும் என்றேன். ஆனால் இப்படம் எனக்கு அற்புதமான பயணமாக இருந்தது. அறிவியலைப் பற்றியும், எதிர்காலத்தை பற்றியும் நிறைய விஷயங்களை பேசினோம். இந்த குழுவுடன் பணியாற்றியதில் 30 வயது குறைந்தது போல உணர்ந்தேன்.

 

ஒரு புத்தகத்தில் அழகான கதை இருக்கவே இருக்கிறது என்றால் அதில் உள்ள காகிதங்கள் தான் நான். உண்மையாகவே ஒரு தாய்க்கும் மகனுக்கும் நடக்கும் கதை. அமலா அழகான ஆன்மா கொண்டவர். அவரின் அறிமுக கால கட்டத்தில் இருந்தே பழக்கம்.  அவர் இந்த துறைக்கு மீண்டும் வருவதில் மிகுந்த மகிழ்ச்சி. அவருக்கு டைம் டிராவல் தேவையே இல்லை. அந்த காலம் உறைந்து, அப்போது இருந்தது போலவே இருக்கிறார். அவரை பார்ப்பதை விட பேச வைத்து கேட்டால் அழகாக இருக்கும். பேச்சில் தெளிவு, பரிவு, பாசம் அனைத்தும் நிறைந்திருக்கும். ஆகையால் தான் நான் தள்ளி நின்று கேட்டுக்கொண்டே இருந்தேன்.

 

அமலா கதாபாத்திரம், என்னுடைய கதாபாத்திரம், சதீஷ், ரமேஷ் திலக் மற்றும் ஒவ்வொருவரின் கதாபாத்திரத்தையும் தேடித் தேடி கண்டுபிடித்து வைத்திருக்கிறார் இயக்குநர் ஸ்ரீ கார்த்திக். சின்ன பசங்களைப் பார்க்கும்போது சாயலில் அவர்கள் போலவே இருக்கிறார்கள். இப்படத்தைப் பார்க்கும் அனைவருக்கும் இந்த தருணம் மறுபடியும் கிடைத்தால் நான் தவறு செய்யும்போது அதை செய்யாமல் இருக்க முடியாதா? என்று தோன்றும். ஒரு காலத்தில் கோட்பாடு ரீதியாக இது நடக்கக் கூடும். அதை இந்த படத்தில் நடத்திக் காட்டியிருக்கிறார்கள். இந்த படம் பொழுதுபோக்கான படம் என்பதை விட ஈடுபாட்டுடன் பார்க்கக்கூடிய படம் என்று சொல்வதே சரியாக இருக்கும். 2 1/2 மணி நேரம் சிரித்துக்கொண்டே இருக்கும் படம் கிடையாது. நம் மனதினுடைய மெல்லிய உணர்வுகளைத் தூண்டி விடணும். அது இப்படம் நிச்சயம் செய்யும்.

 

நான் கார்த்தியிடம் வயதானவன் போல் மேக்கப் போடுவதற்கு பதிலாக வயதானது போல் நடித்து விடுகிறேன் என்றேன். இல்லை சார் வயதானவர் போல் நடிக்க வேண்டாம் இருந்தாலே போதும் என்றார். இதற்காக கார்த்தியுடன் வாக்குவாதமே நடந்தது.  இப்படத்திற்கு என்னுடைய கதாபாத்திரத்திற்கு மேக்கப் போடுவதற்கு 2 மணி நேரம் ஆகும். இந்த உலகத்தில் மிகவும் பொறுமையாக ரசிக்கக் கூடிய, உள்வாங்கக் கூடியவர் கமல் சார்தான். உடம்பெல்லாம் எப்படி மேக்கப் போடுகிறோ என்று தெரியவில்லை. இந்த படத்திற்கு மேக்கப் போடுவது விலை உயர்ந்த விஷயம். இதற்காக பிரபு பெங்களூருவில் இருந்து சிறப்பு நிபுணரை வரவழைத்தார். பிரபு எனக்கும் கார்த்திக்கும் மட்டுமல்ல, இந்த படத்திற்கு என்ன தேவையோ? அதை எல்லாவற்றையும் வழங்கினார்.

 

ஷர்வானந்துடன் சில படங்களில் பழகியிருக்கிறேன். விடா முயற்சி என்பது பழக்கமான வார்த்தையாக இருந்தாலும், ஷர்வானந்துக்கும் பொருந்தும். நானும் அவரும் ஒரு படத்தில் இணைந்து நடித்தோம். அதில் அவருக்கு எது மேலே பட்டாலும் துடைத்துக்கொண்டே இருக்கும் படியான கதாபாத்திரம். இதை மிக அழகாக செய்திருந்தார். இந்தப் படத்தைப் போலவே இந்தப் படத்திலும் பணியாற்றியிருக்கிறார்.

 

ரீத்துவை சிறு வயது முதலே என்னுடன் நடித்துக் கொண்டு இருக்கிறது. நாங்கள் இருவரும் தீனி படத்தில் நடித்தோம். ஒரு சிறிய தீவு, அதிலிருந்து வெளியே போகவே முடியாது. ஒரு நாளில் 2 மணி நேரம் தான் கடல் உள்வாங்கும், அந்த சமயத்தில் தான் சென்று வர முடியும். அந்த படத்தில் சிறப்பாக நடித்திருந்தார். ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தீவிரமாக எடுத்துக் கொண்ட நடிக்கக் கூடியவர். இப்படத்திற்கும் அவருடைய பங்களிப்பை கொடுத்திருக்கிறார். இந்தப் படம் எல்லாம் மனங்களையும் போய் சேரும்.” என்றார்.

 

நடிகை ரீத்து வர்மா பேசுகையில், “தமிழில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்திற்குப் பிறகு  இது எனக்கு இரண்டாவது படம். தமிழ் மக்கள் என்னை ஏற்று கொண்டதற்கு நன்றி. இந்த படத்தில் நானும் ஒரு பகுதியாக இருக்கிறேன் என்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது. இந்த வாய்ப்பு கொடுத்த எஸ். ஆர். பிரபுவிற்கு நன்றி. ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் அனைவருக்கும் ஆதரவளித்து வருகிறது. இயக்குநர் சிறப்பாக கதை கூறினார். அமலா மேடம் உள்ளேயும் வெளியேயும் அழகான ஆன்மா உடையவர். சமுதாயத்திற்கும் நிறைய பங்களிப்பு செய்து வருகிறார்.

 

ஷ்ர்வானந்த் புத்துணர்ச்சியுடன் அவருடைய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த பயணத்தை உணர்வுபூர்வமாக கொண்டு சென்றிருக்கிறார். நாசர் சாருடன் 4 படங்களில் நடித்துவிட்டேன். சதீஷ் அண்ணா மற்றும் ரமேஷ் திலக் உடன் நடித்ததில் மகிழ்ச்சி. சுஜித், ஸ்ரீஜித் போன்ற புத்திசாலித்தனமான தொழில்நுட்ப கலைஞர்கள் இருக்கிறார்கள். இந்த படம் பார்க்கும்போது நீங்கள் சிரிப்பீர்கள், அழுவீர்கள், படத்துடன் பின்னி பிணைந்து இருப்பீர்கள்.” என்றார்.

 

இயக்குநர் ஸ்ரீ கார்த்திக் பேசுகையில், “இது என்னுடைய முதல் பத்திரிகையாளர் சந்திப்பு. குறிப்பிட்ட வயது வரை நேரத்தை நான் மதித்தது இல்லை. ஒரு கட்டத்தில் மதிக்க வேண்டிய கட்டாயம் வந்தது. எனது அம்மா சிறிது காலம் தான் இருப்பார் என்ற சூழ்நிலை வரும் போது தான் நேரத்திடம் நான் பேசினேன். நான் கதை கூறும் போது என் நண்பர்கள் ஆர்வமாக கேட்பார்கள். மறுபடியும் கதை கூற சொல்லி ஊக்குவித்தார்கள். அது தான் இப்படம் இயக்கக் காரணமாக அமைந்தது. நிறைய பேரிடம் கதை கூறினேன். இறுதியாக எஸ். ஆர். பிரபு ஒப்புக் கொண்டார். என்னை பொறுத்தவரை அவர் செலிபிரிட்டி தயாரிப்பாளர். அவருக்கும் எஸ். ஆர். பிரகாஷ் இருவருக்கும் நன்றி. ரோலர் கோஸ்டர் தயார் செய்துக் கொடுத்தார். நான் கற்பனை செய்தது மற்றும் எதிர்பார்த்தது போலவே எனக்கு எல்லாமே செய்துக் கொடுத்தார்.

 

"ஒரு முறை என்னை பாரம்மா” இந்த வரிகள் தான் இப்படத்தின் ஆன்மா. என் அம்மாவை நினைத்து 2 வருடங்கள் கதை எழுதினேன். ஆனால் எழுதும் போது அமலா மேடமை மனதில் வைத்து தான் எழுதினேன். ஆனால் அவர் சம்மதிப்பாரா என்று எஸ். ஆர். பிரபுவிடம் கூறினேன். அவரும் ஏற்பாடு செய்தார். அமலா மேம் கதை கேட்டதும் ஆவலுடன் உடனே ஒப்புக் கொண்டார். எஸ். ஆர். பிரபு இந்த படத்தை இரட்டை மொழிகளில் பெரிதாக எடுக்க வேண்டும் என்றார். பிறகு தான் ஷர்வானந்த் பொருத்தமாக இருப்பார் என்று யோசித்தோம். இப்படத்தில் நீங்கள் எதிர்பார்த்ததை விட அனைவரையும் ஆச்சரியப்படுத்துவார். அதே போல் நாசர் சாரை நினைத்து தான் அவருடைய கதாபாத்திரம் எழுதினேன். நாங்கள் நினைத்ததை விட அருமையாக வந்துருக்கிறது.

 

மூன்று குழந்தைகளின் பெற்றோருக்கு மிக்க நன்றி. 5 வருடங்கள் வேறு எங்கும் அனுப்பாமல் நம்பிக்கை வைத்துக் காத்திருந்தார்கள். ரவி  ராகவேந்தரா மிகவும் உறுதுணையாக இருந்தார். தூய தமிழில் பாட வைக்கவும் ஆட வைக்கவும் மதன் கார்க்கியால் தான் முடியும். இப்படம் என்னுடைய கனவு மட்டுமல்ல. என் குடும்பத்தில் உள்ள அனைவரின் கனவு.” என்றார்.

 

Sharvanand and Reethu Varma

 

தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபு பேசுகையில், “அருவி படத்தின் கதையை கேட்கும் போது திரையில் சிறப்பாக கொண்டு வரமுடியும் என்று நம்பிக்கை எப்படி வந்ததோ அதே நம்பிக்கை ஸ்ரீ கார்த்திக் கதை கூறும்போது வந்தது. இப்படத்தை பட்ஜெட் படமாக எடுப்பதை விட நிறைய செலவு செய்தால் தான் நன்றாக இருக்கும் என்று ஸ்ரீயிடம் கூறினேன். அவரும் பெருந்தன்மையாக நீங்களே எடுங்கள் என்று கூறினார்.

 

மாயா படத்தில் இருந்தே ஒவ்வொரு கதையையும் ஷர்வானந்துக்கு அனுப்பி கொண்டே இருப்பேன். ஆனால், இந்த கதையை கேட்டு உடனே ஒப்புக் கொண்டார். அமலா மேடமிடம் இந்த கதையைக் கூறுவதற்கு தயக்கம் இருந்தது. இருந்தாலும், இந்த படத்தில் நடிப்பது பற்றி அவரே முடிவெடுக்கட்டும் என்று நினைத்தோம். அவர் வந்ததில் மிக்க மகிழ்ச்சி.

 

ஸ்ரீ ஒவ்வொரு காட்சிக்கும் மிகவும் மெனக்கெடுவார். தொழிற்துறையில் காலகட்டத்திற்கு ஏற்ப அதை புரிந்து கொண்டு அந்த துறையை மேம்படுத்தக் கூடியவர்கள் ஒரு சிலர் தான். அப்படி ஒருவர் தான் ஸ்ரீ கார்த்திக். படம் மட்டுமல்ல, பாடல்களுக்கும் உடன் இருந்து பணியாற்றினார். ஒவ்வொரு படம் பார்க்கும் போதும் பார்வையாளர்கள் ஏற்றுக் கொள்வார்களோ என்ற நடுக்கம் இருக்கும். ஆனால், இப்படத்தில் அது இல்லை.

 

டைம் ட்ராவல் மற்றும் உணர்வுபூர்வமான விஷயங்களும் ஒன்றாக பயணிக்கும் போது திருப்தியாக இருக்கும். நிறைய காட்சிகள் இல்லையென்றாலும், கதைக்கு முக்கியத்துவம் இருந்ததால் சரியாக புரிந்து கொண்டு நடித்து கொடுத்த ரீத்து வர்மாவிற்கு நன்றி. சமீபமாக எங்கள் நிறுவன படங்கள் ஓடிடியில் வெளியாவதால் இனிமேல் இப்படித்தான் இருக்குமா? என்று கேட்டார்கள். அதற்கு அப்படியில்லை என்று கூறினேன்.” என்றார்.

Related News

8481

‘தீயவர் குலை நடுங்க’ கதையை கேட்டு உடல் நடுங்கி விட்டது - ஐஸ்வர்யா ராஜேஷ்
Friday November-14 2025

அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...

’மிடில் கிளாஸ்’ பேசும் விசயம் முக்கியமானது - பிரபலங்கள் பாராட்டு
Wednesday November-12 2025

அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...

’யெல்லோ’ படம் மூலம் நிறைய கற்றுக்கொண்டோம் - பூர்ணிமா ரவி நெகிழ்ச்சி
Tuesday November-11 2025

யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...

Recent Gallery