Latest News :

உதயநிதி உள்ளிட்ட ரெட் ஜெயண்ட் குழுவினர் படத்தை பாராட்டினாங்க! - மகிழ்ச்சியில் ‘டாடா’ படக்குழு
Friday January-27 2023

’ஜிப்ஸி’ உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ள எஸ்.அம்பேத்குமார், தனது ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் படம் ‘டாடா’. கவின் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அபர்ணா தாஸ் நாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் கே.பாக்யராஜ், விடிவி கணேஷ், ஐஸ்வர்யா பாஸ்கரன், பிரதீப் ஆண்டனி, ஹரிஷ்.கே உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

 

அறிமுக இயக்குநர் கணேஷ் கே.பாபு எழுதி இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜென் மார்டின் இசையமைத்துள்ளார். எழில் அரசு.கே ஒளிப்பதிவு செய்ய, கதிரேஷ் அலகேஷன் படத்தொகுப்பு செய்துள்ளார். சாண்டி நடனக்காட்சிகளை வடிவமைக்க, சண்முகராஜா கலையை நிர்மாணித்துள்ளார்.

 

இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றிருப்பதோடு, சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வரும் நிலையில், தொடர்ந்து வெற்றி படங்களை வெளியிட்டு வரும் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றியிருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

 

வரும் பிப்ரவரி 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘டாடா’ படம் குறித்து நாயகன் கவின், இயக்குநர் கணேஷ் கே.பாபு, இசையமைப்பாளர் ஜென் மார்டின் ஆகியோர் இன்று பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்துக்கொண்டார்கள்.

 

Dada Press Meet

 

நாயகன் கவின் பேசுகையில், “இயக்குநர் கணேஷ் கே.பாபுவும் நானும் கல்லூரி நண்பர்கள். நான்கு வருடங்களுக்கு முன்பே இந்த கதையை அவர் என்னிடம் சொல்லிவிட்டார். நேரம் வரும்போது நிச்சயம் பண்ணலாம் என்று இருந்தோம். அதன்படி ’லிப்ட்’ படம் முடிந்ததும், இது சரியான நேரம் என்று தோன்றியது. உடனே படத்தை தொடங்கி விட்டோம். இது இளைஞர்களுக்கான ஜாலியான ஒரு படம் என்றாலும் படத்தின் இறுதியில் மெசஜ் ஒன்றும் சொல்லியிருக்கிறோம்.

 

மணிகண்டன் என்ற இளைஞனின் வாழ்க்கை பயணம் தான் கதை. யாருடைய பேச்சையும் கேட்காமல், எதை செய்யக்கூடாது என்று சொல்கிறார்களோ அதை மட்டுமே செய்யும் ஒரு இளைஞன், வாழ்க்கையில் அடிபட்டு, வாழ்க்கை சொல்லிக் கொடுக்கும் சில விஷயங்கள் மூலம் தனது வாழ்க்கையை மாற்றிக்கொள்கிறான், அப்படிப்பட்ட இளைஞனின் வாழ்க்கை தான் படம்.

 

படம் ஜாலியான இளைஞர்களுக்கான படமாகவும் அதே சமயம் இறுதியில் நல்ல கருத்து சொல்லும் படமாகவும் இருக்கும். அதனால் இளைஞர்களுக்கு மட்டும் இன்றி அனைத்து தரப்பினருக்குமான படமாகவும் இருக்கும். படத்தை பார்த்த அனைவரும் படம் செண்டிமெண்டாக கனெக்ட் ஆவதாக சொல்லியிருக்கிறார்கள்.

 

ரெட் ஜெயண்ட் மூவிஸ் படத்தை வெளியிடுவது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி. பெரிய பெரிய படங்களை வெளியிடுகிறார்கள், எங்கள் படத்தை அவர்கள் வெளியிடுகிறார்கள் என்பது சந்தோஷம் தான். அதற்கு தயாரிப்பாளர் அம்பேத்குமார் சார் தான் காரணம். படம் நன்றாக இருந்தால் ரெட் ஜெயண்ட் வெளியிடும் என்பதால், அவர் அவர்களை தொடர்பு கொண்டிருக்கிறார். அவர்களுடம் படத்தை பார்த்துவிட்டு பாராட்டி படத்தை வெளியிட சம்மதித்துள்ளனர். தயாரிப்பாளரிடம் உதயநிதி ஸ்டாலின் சார் படம் குறித்து பாராட்டியதாக சொன்னார்கள். அவர் மட்டும் இன்றி ரெட் ஜெயண்ட் குழுவினர் அனைவரும் படம் ஜாலியாக இருந்தாலும், அதில் இருக்கும் செண்டிமெண்ட் நிச்சயம் மக்களிடம் கணெக்ட் ஆகும் என்று சொல்லி பாராட்டினார்கள்.

 

இந்த படத்தின் இசையமைப்பாளர் ஒப்பந்தம் ஆனதும் சுவாரஸ்யமானது. நான் சில ஆல்பம் பாடல்கள் செய்துள்ளேன்.  ஜென் மார்டினும் செய்திருக்கிறார். அப்படிதான் ஒரு ஆல்பம் பாடலுக்காக அவர் என்னை அனுகினார். அவர் அனுப்பிய ட்யூன் நன்றாக இருந்தது, அப்போது நேரில் சந்திக்கலாம் என்று சொன்னேன். நேரில் அவரை சந்தித்த போது, அவர் இதுவரை போட்டு வைத்திருந்த ட்யூன்களை கேட்டேன், அதில் சில ட்யூன்களை தேர்வு செய்து இதை அப்படியே வைங்க, நாம ஆல்பம் செய்ய வேண்டாம், படம் செய்யலாம் என்று சொல்லிவிட்டேன். அவர் போட்டு வைத்திருந்த ஒரு பாடலின் வரிகளை எந்தவித மாற்றமும் செய்யாமல் அப்படியே படத்தில் பயன்படுத்தியிருக்கிறோம். அது கதைக்கு மிக பொருத்தமாக இருந்தது.” என்றார்.

 

இயக்குநர் கணேஷ் கே.பாபு படம் குறித்து கூறுகையில், “இந்த படத்திற்கு கவினை தேர்வு செய்ததற்கு காரணம், இந்த கதாபாத்திரத்திற்கு அவர் பொருத்தமாக இருப்பார் என்பது மட்டும் அல்ல, நன்றாக நடிப்பார் என்பதும் தான். புதிதாக செய்திருக்கிறோம் என்று நான் சொல்ல மாட்டேன், பழைய கான்சப்ட் தான் என்றாலும் அதை கொடுத்த விதம் புதிதாகவும், ரசிக்கும்படியும் இருக்கும். அதற்காக நாங்கள் குழுவாக உழைத்திருக்கிறோம். 

 

ஒரு கல்லூரி மாணவன் கைக்குழந்தையோடு கல்லூரிக்கு செல்கிறார். அந்த குழந்தை யார்? அதன் பின்னணி என்ன? என்பதை தான் திரைக்கதையாக்கியிருக்கிறோம். அதற்கு மேல் எதுவும் சொல்ல முடியாது, படத்தை பார்த்தால் அது ஏன் என்பது உங்களுக்கு தெரியும். படத்தை பார்த்தவர்கள் அனைவரும் பாராட்டியிருக்கிறார்கள். இளைஞர்களுக்கான படமாக மட்டும் இன்றி காதலர்களுக்கு மட்டும் அல்ல பொதுவாக ஒரு கருத்தை பதிவு செய்திருக்கிறோம். அந்த இடம் நிச்சயம் வரவேற்பு பெறும் என்று படம் பார்த்தவர்கள் சொல்லியிருக்கிறார்கள். 

 

ஹீரோயினாக நடித்திருக்கும் அபர்ணா தாஸ் நல்ல நடிகை. முதலில் அவர் சரியாக இருப்பாரா என்று யோசித்தேன். ஆனால், அவர் நடித்த விதத்தை பார்த்து வியப்பாக இருந்தது. நான் எதிர்பார்த்ததை விட சிறப்பாக நடித்திருக்கிறார். ரொம்ப லைவ்லியான ஒரு கேரக்டராக இருக்கிறார். நம்ம என்ன சொன்னாலும் அதை மிக சரியாக புரிந்துக்கொண்டு நடிக்கிறார். எனக்கு ஆச்சரியாக இருந்தது, மலையாளத்தில் இருந்து வந்தவர், கதையை புரிந்துக்கொண்டு மிக சரியாக நடித்தார். அவர் படத்திற்கு மிகப்பெரிய பலம்.

 

Dada

 

பாக்யராஜ் சாரை நடிக்க வைத்ததன் மூலம் நான் நிறைய கற்றுக்கொண்டேன். டப்பிங் போன்ற விஷயங்களை எப்படி எளிதாக செய்ய வேண்டும் என்பதை அவரிடம் கற்றுக்கொண்டேன். அவரும் சில யோசனைகளை சொல்வார், அதை ஏற்றுக்கொள்வேன். அவரை நடிக்க வைத்தது எனக்கு ஒரு கற்றல் அனுபவமாக இருந்தது.” என்றார்.

 

இசையமைப்பாளர் ஜென் மார்டின் பேசுகையில், “நானும் கவின் போல தான், நண்பர்களுடன் சேர்ந்து இசைத்துறையில் பயணித்து வருகிறேன்.  நண்பர்களுடன் சேர்ந்து ஆல்பம் பாடல் என்று எதையாவது செய்துக்கொண்டிருப்பேன். அப்படி ஒரு முயற்சியில் தான் கவினின் அறிமுகம் கிடைத்து, இந்த பட வாய்ப்பும் கிடைத்தது.

 

இந்த படம் தான் என் முதல் படம். புரோமோவுக்காக உருவாக்கிய பாடல் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றிருக்கிறது. யுவன் சங்கர் ராஜா சார் ஒரு பாடல் பாடியிருக்கிறார். அந்த பாடலை விரைவில் வெளியிட இருக்கிறோம். கதையை விவரிக்க கூடிய அந்த பாடல் நிச்சயம் மிகப்பெரிய வெற்றி பெறும். அறிமுக இசையமைப்பாளராக இருந்தாலும் பாடல் வரிகள் பிடித்திருந்ததால் யுவன் சங்கர் ராஜா சார் பாடிக்கொடுத்தார். வரிகளை படித்த உடனேயே அவர் பாடினால் நன்றாக இருக்கும் என்று முடிவு செய்தேன். அதை தயாரிப்பாளரிடம் சொல்லியதும் அவர் ஏற்பாடு செய்துக்கொடுத்தார். யுவன் சங்கர் ராஜா சார் பாடல் பதிவு செய்யும் போது என் பிறந்தநாள், நானும் அவருடைய ரசிகன் தான், அதனால் அவர் என் முதல் படத்தில் பாடியிருப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.” என்றார்.

Related News

8791

அஜித்தின் ‘அமராவதி’ திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது!
Tuesday March-28 2023

அஜித் நாயகனாக அறிமுகமான திரைப்படம் ‘அமராவதி’...

வியக்க வைத்த ‘விடுதலை’ பட ஆக்‌ஷன் காட்சிகள்! - வைரலாகும் மேக்கிங் வீடியோ
Tuesday March-28 2023

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதையின் நாயகனாகவும், விஜய் சேதுபதி வாத்தியாராகவும் நடித்திருக்கும் ‘விடுதலை - பாகம் 1’ திரைப்படத்தை ஆர்...

நடிகை யாஷிகா ஆனந்த் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்!
Monday March-27 2023

2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24 ஆம் தேதியன்று இரவு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் தனது தோழிகளுடன் நடிகை யாஷிகா ஆனந்த் சென்ற கார் மகாபலிபுரம் அருகே விபத்துக்குள்ளானது...