ஒவ்வொருவரும் திரையரங்கம் சென்று பார்க்க வேண்டிய படம் ‘வாத்தி’ - பாராதிராஜா பாராட்டு
Monday February-20 2023

நடிகர் தனுஷ் முதன்முறையாக தெலுங்கில் அடியெடுத்து வைத்து நடித்துள்ள படம், தெலுங்கில் ‘சார்’ என்றும் தமிழில ‘ வாத்தி’ என்றும் கடந்த பிப்-17ஆம் தேதி வெளியானது. இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இந்தப்படத்தில் சம்யுக்தா கதாநாயகியாக நடிக்க, சமுத்திரக்கனி, சாய்குமார், தணிகலபரணி, ஆடுகளம் நரேன் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது இசையில் இந்தப்படத்திற்கு அற்புதமான பாடல்களை கொடுத்துள்ளார்.

 

இதற்குமுன் திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷுடன் இணைந்து படம் முழுவதும் பயணிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருந்த இயக்குநர் இமயம் பாரதிராஜா, இந்தப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

 

இந்தப்படம் குறித்து தனது உணர்வுகளை சிலாகிப்புடன் பகிர்ந்துகொண்டுள்ள பாரதிராஜா, படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

 

வாத்தி பற்றி பற்றி அவர் கூறுகையில், “என் திரையுலக பயணத்தில் எத்தனையோ மைல்கல்களை தாண்டி வந்திருக்கிறேன். சில இடங்களில் ஸ்தம்பித்து நின்று இருக்கிறேன், அப்படி ஒரு பயணத்தின்போது நான் ஸ்தம்பித்து நின்ற இடம் தான் ‘வாத்தி’. எத்தனையோ படங்கள் பார்க்கிறேன், அதில் இந்த படம் ஸ்பெஷல். இந்த படத்தில் நான் சிறப்பு தோற்றத்தில் இரண்டு காட்சிகளில் நடித்துள்ளேன்.

 

ஊடகம் என்பது பொழுதுபோக்கு சாதனமாக இருந்தாலும் கூட, மக்களுக்கும் சமுதாயத்திற்கும் பயன்படுவதாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு ஊடகம் தான் ‘வாத்தி’. கல்வி என்பது இந்த சமூகத்திற்கு எவ்வளவு தேவை என்பதை வலியுறுத்தி சொல்கிறது இந்த வாத்தி.

 

இதில் நடித்துள்ள தனுஷ் என் மகன் போன்றவர். அவர் பொழுதுபோக்கிற்காக படம் நடித்தாலும் கூட அதில் சமுதாய நோக்கத்துடன் செயல்படுபவர். அப்படிப்பட்ட ஒரு பிள்ளை கிடைப்பதற்கு தவம் செய்திருக்க வேண்டும். அவர் நடிகன் மட்டுமல்ல எழுத்தாளன், பாடகன், சிந்தனையாளன்.

 

இந்த படத்தில் சமுத்திரக்கனி வில்லனாக ஒரு அற்புதமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சமுத்திரக்கனியின் நடையும் அந்த உயரமும் கம்பீரமும் நடிப்பும் பார்க்கும்போது திரையுலகம் எத்தனையோ முத்துக்களை கண்டிருக்கிறது, அதில் சிறந்த முத்து இந்த சமுத்திரக்கனி. எத்தனையோ கனிகள் இருக்கிறது இல்லையா ? அதில் சிறந்த கனி சமுத்திரக்கனி.

 

ஒரு டீச்சர் எவ்வளவு அம்சமாக இருக்க வேண்டும் என பல மேடைகளில் நான் சொல்லியிருக்கிறேன். எப்படி சம்யுக்தாவை தேர்வு செய்தார்கள் ? ஒரு டீச்சருக்கான அம்சம் அப்படியே அவரிடம் இருக்கிறது. அதனால் தான் விழா மேடையில் கூட காணொளி மூலமாக ஐ லவ் யூ சம்யுக்தா என்று சொன்னேன். ஒரு டீச்சருக்கான நடை உடை பாவனை உடல் மொழி என அனைத்தையும் தாங்கி நிற்கிறார் சம்யுக்தா.  கிரேட்.

 

ஜி.வி.பிரகாஷ் இசையில் எல்லா பாடல்களும் இனிக்கின்றன. அவரெல்லாம் நமக்கு கிடைத்த வரப்பிரசாதம். நானும் ஜி வி பிரகாசம் சேர்ந்து ஒரு படத்தில் கூட இணைந்து நடித்துள்ளோம்.  இந்த படத்தில் மட்டுமல்ல பல படங்களில் நான் அவரை கவனித்து வருகிறேன். இந்த வருடத்தில் அவரது இசைக்கும் நடிப்புக்கும் நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

 

வாத்தி ஒரு நல்ல டைட்டில், ஒரு வாத்தியாரின் சமூக பொறுப்பு என்ன என்பதை அழகாக சொல்லி இருக்கிறது. இந்தப்படத்தில் நடித்துள்ள அத்தனை பேரும் அற்புதமாக நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை தியேட்டரில் ரசிகர்களுடன் அமர்ந்து பார்த்தபோது அவர்களது கரகோஷம், அவர்கள் படத்தை ரசித்த விதமெல்லாம் பார்க்கும்போது, சமீப நாட்களில் வெளியான ஒரு சிறந்த படம் என்று சொல்வேன்.

 

நான் இந்த படத்தில் நடித்திருக்கிறேன் என்பதற்காக சொல்லவில்லை. வாத்தி திரைப்படம் ஒவ்வொருவரும் திரையரங்கம் சென்று பார்க்க வேண்டிய படம். ரசிகர்கள் இந்த படத்தைக் திரையரங்கிற்கு சென்று பார்ப்பார்கள் பார்த்துவிட்டு இந்த பாரதிராஜாவுடன் அதுபற்றி உரையாடுவார்கள்.

 

வாத்தி படக்குழுவிற்கு என் வாழ்த்துக்கள்” என்று பாராட்டியுள்ளார்.

Related News

8832

கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் ரேவதி நடிக்கும் புதிய படம் அறிவிப்பு!
Thursday July-17 2025

தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்துவரும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ‘புரொடக்சன்-10’ என பெயரிடப்பட்டுள்ள புதிய படம் தயாராகிறது...

நடிகர் விக்ரமின் புதிய படம் அறிவிப்பு!
Thursday July-17 2025

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிட்டெட் நிறுவனம், அடுத்த தயாரிப்பை அறிவிப்பதில்   பெருமை கொள்கிறது...

ஆகஸ்ட் 8 ஆம் தேதி ’பாய் - ஸ்லீப்பர் செல்ஸ்’ வெளியாகிறது!
Thursday July-17 2025

ஒரு வித்தியாசமான முயற்சியாக மூன்று மதத் தலைவர்கள் இணைந்து ஒரு திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டனர்...

Recent Gallery