Latest News :

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் மரணம்! - உண்மை சம்பவத்தின் மர்ம முடிச்சை அவிழ்க்க வரும் ‘டீமான்’
Thursday August-17 2023

தமிழ் சினிமா மட்டும் அல்ல உலக அளவில் திகில் படங்களுக்கு என்று தனி ரசிகர்கள் வட்டம் இருப்பதோடு, திகில் படங்களுக்கு எந்த காலக்கட்டத்திலும் வரவேற்பும் இருந்து வருகிறது. அதிலும், திரைக்கதை மற்றும் காட்சிகளை வித்தியாசமாக கையாள்வதோடு, ரசிகர்களை மிரட்டும் வகையிலான படமாக இருந்தால், அந்த படம் சூப்பர் ஹிட் ஆவது உறுதி. அந்த வகையில், கோலிவுட்டில் சமீபத்தில் வெளியான ‘அஸ்வின்ஸ்’ உள்ளிட்ட சில படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்த வரிசையில், மற்றொரு வித்தியாசமான திகில் படமாக மட்டும் இன்றி, உண்மை சம்பவத்தின் மர்ம முடிச்சை அவிழ்க்கும் உளவியல் தொடர்பான திகில் திரைப்படமாக உருவாகியுள்ள ‘டீமான்’.

 

அறிமுக இயக்குநர் ரமேஷ் பழனிவேல் இயக்கத்தில், இயக்குநர் வசந்த பாலன் வழங்க, விண்டோ பாய்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஆர்.சோமசுந்தரம் தயாரித்திருக்கும் இப்படத்தில் நாயகனாக சச்சின் நடிக்க, நாயகியாக அபர்ணதி நடித்திருக்கிறார். இவர்களுடன் ’கும்கி’ அஸ்வின், ஸ்ருதி பெரியசாமி, ரவீனா தஹா, ஆர்.சோமசுந்தரம், மிப்புசாமி, ’கேபிஒய்’ பிரபாகரன், நவ்யா சுஜி, தரணி, அபிஷேக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

 

வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘டீமான்’ படத்தை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பிளாக்பஸ்டர் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பி.யுவராஜ் வெளியிடுகிறார். இவர் ஏற்கனவே ’எறும்பு’, ‘கருங்காப்பியம்’ போன்ற படங்களை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்த நிலையில், ‘டீமான்’ படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றதோடு, இணையத்தளம் மற்றும் சமூக வலைதளப் பக்கங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து, நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த படக்குழுவினர் படம் குறித்த சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துக் கொண்டார்கள்.

 

இயக்குநர் ரமேஷ் பழனிவேல் படம் குறித்து கூறுகையில், “இது உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட கதை. டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் தங்களது வீட்டுக்குள் மர்மமான முறையில் இறந்தனர். அவர்களது மரணம் தற்கொலை என்று வழக்கு முடிக்கப்பட்டாலும், அவர்கள் எதற்காக தற்கொலை செய்துக்கொண்டார்கள் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. அதே சமயம், அவர்களுடைய மரணத்திற்கு காரணமாக பல்வேறு கருத்துக்கள் நிலவுகிறது. அந்த சம்பவத்தை மையமாக வைத்து தான் இந்த கதையை எழுதினேன். ஆனால், அந்த சம்பவத்தை மட்டுமே படம் சார்ந்திருக்காது, நம்முடைய கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு திரைக்கதை அமைத்திருக்கிறேன்.  இது ஒரு உளவியல் திகில் படமாக இருக்கும்.

 

பெரும்பாலான திகில் படங்கள், ஆள் நடமாட்டமே இல்லாத ஒரு வீடு, அதற்குள் சிக்கிக்கொள்ளும் மனிதர்களின் அமானுஷ்ய அனுபவங்கள், பிறகு அதற்கான பின்னணியை விவரிப்பது போன்ற பாணியில் தான் இருக்கும். ஆனால், இந்த படத்தை பொருத்தவரை அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் நடக்கும் அமானுஷ்ய சம்பவங்களையும் அதனால் பாதிக்கபப்டும் நாயகனின் உளவியல் தொடர்பான பிரச்சனைகளையும் திகிலாக சொல்லியிருக்கிறோம். நிச்சயம், ரசிகர்களை சீட் நுணியில் உட்கார வைப்பதோடு, வித்தியாசமான படத்தை பார்த்த அனுபவத்தை கொடுக்கும் படமாகவும் ‘டீமான்’ இருக்கும்.

 

’டீமான்’ என்ற தலைப்பு வைத்ததற்கு கதை ஒரு காரணமாக இருந்தாலும், தலைப்பு ஈர்ப்பாக இருப்பது தான் முக்கிய காரணம். பல தலைப்புகளை விவாதித்தோம், அப்போது தான் இந்த தலைப்பு தோன்றியது. கேட்கவும் நன்றாக இருந்ததால் இதை தலைப்பாக வைத்துவிட்டோம்.” என்றார்.

 

இயக்குநர் வசந்த பாலனிடம் உதவி இயக்குநராக இருந்துவிட்டு முதல் படமாக திகில் ஜானரை தேர்வு செய்தது ஏன்? என்ற கேள்விக்கு பதில் அளித்த இயக்குநர் ரமேஷ் பழனிவேல், “நான் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவன், முதலில் நான் சந்தித்த மக்கள் மற்றும் நான் வளர்ந்த மண் சார்ந்த கதையை தான் முதல் படமாக எடுக்க நினைத்தேன், அதற்கான கதையை தான் எழுதி வைத்திருந்தேன். ஆனால், அப்படத்திற்கான பட்ஜெட் எனக்கு அமையவில்லை, அப்போது தான் இப்படி ஒரு ஜானர் படம் எடுப்பதற்கான வாய்ப்பும், அதற்கான பட்ஜெட்டும் கிடைத்தது, அதனால் தான் இப்படி ஒரு ஜானர் படத்தை எடுத்தேன். அதுமட்டும் அல்ல பேய் படம் என்றால் ரசிகர்களுக்கு ஒரு ஈர்ப்பு வருகிறது, அதுவும் ஒரு காரணம். பேய் படமாக இருந்தாலும், வசந்த பாலன் பேய் படம் இயக்கினால் எப்படி இருக்குமோ அப்படி தான் இந்த படத்தை நான் இயக்கியிருக்கிறேன். உணர்ச்சிகரமான பாணியிலான ஒரு பேய் படமாக தான் ‘டீமான்’ இருக்கும். நிச்சயம் வழக்கமான பாணியிலான திகில் படம் போல் இந்த படம் இருக்காது.

 

இயக்குநர் வசந்த பாலன் சாரும் எனக்கு இந்த படத்தில் உதவியாக இருந்தார். ’அங்காடித் தெரு’ படத்தில் இருந்து அவரிடம் உதவியாளராக பணியாற்றினேன். இப்போதும் அவர் படம் பண்ணும் போது பணியாற்றுவேன். நான் படம் இயக்கப் போவதாக சொன்ன உடன், எனக்கு அவர் பல உதவிகளை செய்தார். இந்த படத்தின் தயாரிப்பு பணிகளில் பல உதவிகளை செய்ததோடு, அவருடைய பெயரையும் பயன்படுத்திக்கொள்ள அனுமதித்தார்.” என்றார்.

 

 

பிளாக்பஸ்டர் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் படத்தை வெளியிடும் பி.யுவராஜ் படம் குறித்து கூறுகையில், “’டீமான்’ படம் இதுவரை வெளியான திகில் படங்களில் இருந்து முற்றிலும் வித்தியாசமான படமாக இருக்கும். அதற்கு காரணம், பேயால் ஒரு மனிதன் உளவியல் ரீதியாக எப்படி பாதிக்கப்படுகிறான், பேய் மனிதனை உளவியல் ரீதியாக எப்படி ஆட்கொள்கிறது, என்பதை இந்த படத்தில் காட்சிப்படுத்தியிருக்கிறோம். இது நிச்சயம் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும். அதேபோல், இன்றைய காலக்கடத்தில் திரையரங்குகளில் வெளியாகும் படங்களை, சில நாட்கள் கழித்து ஒடிடி-யில் பார்த்துக் கொள்ளலாம் என்று மக்கள் நினைக்கிறார்கள். அதனால் திரையரங்கிற்கு மக்கள் வருவதும் சற்று குறைந்துவிட்டது. குறிப்பாக சிறிய முதலீட்டு படங்களுக்கு திரையரங்கிற்கு வருவது குறைந்து விட்டது. ஆனால், திகில் படம் என்றால் அதை திரையரங்கில் தான் பார்க்க வேண்டும் என்ற மனநிலை மக்களிடம் இருக்கிறது. காரணம், பெரிய திரையில், ஒலி உள்ளிட்ட தொழில்நுட்ப விஷயங்களுக்காக திகில் படங்களை திரையரங்கில் மட்டுமே பார்க்க வேண்டும் என்று பலர் விரும்புகிறார்கள், அதனால் திகில் படங்கள் மக்களை திரையரங்கிற்கு அழைத்து வருவதாலும், இதுபோன்ற படங்கள் அதிகமாக வெளியாகிறது.” என்றார்.

 

’மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ படத்திற்கு இசையமைத்த ரோனி ரபெல் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு ஆர்.எஸ்.அனந்தகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ரவிகுமார்.எம் படத்தொகுப்பு செய்ய, விஜய் ராஜன் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். கார்த்திக் நேதா பாடல்கள் எழுத, ராக் பிரபு சண்டைக்காட்சிகளை வடிவமைத்திருக்கிறார். ‘அஸ்வின்ஸ்’ படத்திற்கு ஒலி வடிவமைப்பு செய்த ஹரிஷ் மற்றும் ராஜு ஆல்பெர்ட் ஒலி வடிவமைப்பு செய்துள்ளனர்.

 

Demon

Related News

9179

’லாரா’ படத்தின் தலைப்பு போஸ்டரை வெளியிட்ட நடிகர் சத்யராஜ்!
Saturday June-15 2024

'நாக்குக்கு நரம்பில்லை . எதை வேண்டுமானாலும்  பேசும்' என்பார்கள்...

”டிஜிட்டல் தளங்களில் படைப்பு சுதந்திரம் இல்லை” - ’கருடன்’ வெற்றி விழாவில் வெற்றிமாறன் பேச்சு
Saturday June-15 2024

இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில், சூரி நாயகனாகவும், சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் முக்கிய வேடங்களில் நடிக்க, கடந்த மாதம் வெளியான ‘கருடன்’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது...