Latest News :

”சூப்பர் ஸ்டாருடன் ஒப்பிடாமல் ‘சந்திரமுகி 2’ பாருங்கள்” - இயக்குநர் பி.வாசு வேண்டுகோள்
Monday September-04 2023

இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் 65 ஆவது படமாக தயாராகியுள்ள திரைப்படம் ‘சந்திரமுகி 2’. இப்படத்தில் ராகவா லாரன்ஸ், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், ‘வைகைப்புயல்’ வடிவேலு, மகிமா நம்பியார், லட்சுமிமேனன், சிருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ் மேனன், சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

 

ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருதினை வென்ற இசையமைப்பாளர் எம் எம் கீரவாணி இசையமைத்திருக்கிறார் தோட்டா தரணி கலை இயக்கத்தை கவனிக்க படத்தொகுப்பு பணிகளை ஆண்டனி மேற்கொண்டிருக்கிறார். ஆக்சன் காமெடி ஹாரர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லைக்கா புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது. ஜி.கே.எம் தமிழ் குமரன் தலைமை பொறுப்பு வகிக்க, இப்படத்தின் வெளியீட்டுப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

 

சென்னையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் நடைபெற்ற  இப்படத்தின் பிரத்யேக டிரைலர் வெளியீட்டு விழாவில், 'சந்திரமுகி 2' படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்பின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. இவ்விழாவில் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜி கே எம் தமிழ் குமரன், இயக்குநர் பி. வாசு, ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், மகிமா நம்பியார், சிருஷ்டி டாங்கே, சுபிக்ஷா கிருஷ்ணன், குழந்தை நட்சத்திரங்கள் மானசி, தீக்ஷா, நடிகர்கள் ரவி மரியா, விக்னேஷ், கூல் சுரேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

 

நிகழ்ச்சியில் இயக்குநர் பி வாசு பேசுகையில், ”இந்த விழாவிற்கு வருகை தந்து அமராமல் நின்று கொண்டே அயராது உற்சாகம் அளித்து கொண்டிருக்கும் ரசிகர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் முதலில் நன்றி. தயாரிப்பாளர்கள், நடிகர் -நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் இவர்களைத்தான் என்னுடைய குடும்பமாக கருதுகிறேன். இந்த படம் வெற்றி அடையும் போது 50 சதவீதம் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், 50 சதவீதம் நடிகர் நடிகைகளுக்கும் அந்த வெற்றி சேரும்.

 

என்னிடம் அடிக்கடி வளர்ந்து விட்ட டெக்னாலஜியை எப்படி பார்க்கிறீர்கள்? என கேட்பார்கள். அதற்கு ஒரே உதாரணம் கூல் சுரேஷ். அவரைப் போன்ற பலரைப் பார்த்து என்னை நான் அப்டேட் செய்து கொண்டிருக்கிறேன். அவர் இயக்குநர் இல்லை. இருப்பினும் கஷ்டப்பட்டு முயற்சி செய்து தன்னுடைய தனித்துவமான அடையாளத்தை பதிவு செய்திருக்கிறார். இவரை போன்ற கலைஞர்களை பாராட்டுவது தான் என் போன்றோரின் கடமை.

 

அதே போல் தான் நான் இயக்குநராக பணியாற்றும்போது ராகவா லாரன்ஸ்  என்னிடம், 'நான் நான்காவது வரிசையில் ஆடிக் கொண்டிருக்கிறேன். ஒரு வரிசை முன்னேறி மூன்றாவது வரிசையில் ஆட மாட்டேனா என ஏங்குகிறேன் சார்' என்பார். நான்காவது வரிசையிலிருந்து முதல் வரிசையில் ஆடி நடன உதவியாளராகி நடன இயக்குநராகவும் கடின உழைப்பால் உயர்ந்தவர் ராகவா லாரன்ஸ். அதன் பிறகு என்னுடைய இயக்கத்தில் உருவான திரைப்படத்தில் நடன இயக்குநராக பணியாற்றியவர். அதன் பிறகு கதாநாயகனாகி.. நல்ல செயல்களை செய்து.. அனைவரின் மனதிலும் இடம் பிடித்திருக்கிறார். அவருடைய முயற்சியில்.. அவருடைய உழைப்பில்.. இந்த இடத்திற்கு முன்னேறி வந்திருக்கிறார். தன்னிடம் இருப்பதை மற்றவருக்கு பகிர்ந்து கொடுக்கும் நல்ல மனதுள்ள மனிதர்.

 

இந்தப் படத்தை பார்க்கும் ரசிகர்கள் அனைவரும் முதலில் ராகவா லாரன்ஸின் நடிப்பை பாராட்டுவீர்கள். அதன் பிறகு கங்கனாவின் சந்திரமுகி கதாபாத்திரத்தை பாராட்டுவீர்கள். அதுமட்டுமில்லாமல் இப்படத்தில் நடித்திருக்கும் அனைவரையும் பற்றியும் நீங்கள் பேசுவீர்கள். ஏனெனில் அனைவருக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்கிறது.

 

எங்களுக்கு  கிடைத்த அருமையான முதலாளி சுபாஸ்கரன். அவரைப் பற்றி ஒற்றை வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால்.. அவரால் பத்தாயிரம் குடும்பங்கள் வாழ்கிறது. ஆனால் இது எதுவும் தெரியாமல் இருப்பவர்தான் சுபாஸ்கரன். நான் என்னுடைய உதவியாளர்களுக்கும், பணியாற்றுபவர்களுக்கும் இவரைப் பற்றி சொல்வதுண்டு. முதலாளி எங்கேயோ இருந்து.. சம்பாதித்து.. நமக்காக அனுப்புகிறார். அவர் நமக்கு தயாரிப்பாளராக கிடைத்திருப்பது மிகப்பெரிய பாக்கியம். நமக்கு மட்டுமல்ல தமிழ் திரையுலகத்திற்கே மிகப்பெரும் பாக்கியம். அவருடைய நம்பிக்கையை பெற்ற ஒரே நபர் நம் ஜி.கே.எம் தமிழ் குமரன் தான்.

 

ஆடியோ வெளியிட்டு விழாவில் என் அருகில் அமர்ந்திருந்தார் சுபாஸ்கரன். மாற்றுத்திறனாளி கலைஞர்கள் மேடையில் நடனம் ஆடிக் கொண்டிருந்தபோது தமிழ்குமரனை அழைத்து ஒரே ஒரு வார்த்தை தான் சொன்னார். உடனடியாக அவர்களுக்கு மேடையிலேயே ஒரு கோடி ரூபாய் நன்கொடையை வழங்கியதுடன் மட்டுமல்லாமல் அவர்களுடன் அமர்ந்தார். நல்ல மனிதர். தர்மம் தலைகாக்கும் என்பார்கள் அது இந்த படத்தின் வெற்றியிலும் தெரியும்.

 

'சந்திரமுகி' படம் வெளியாகும் போது எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வருகை தந்து திருப்தியுடன் சென்றீர்களோ, அதேபோல் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் 'சந்திரமுகி 2' படத்தை காண வாருங்கள். உங்களுக்கு பரிபூரண திருப்தி கிடைக்கும். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

 

இன்னொரு விசயத்தையும் இங்கே சொல்ல விரும்புகிறேன். சூப்பர் ஸ்டாருடன் யாரையும் ஒப்பிடாதீர்கள். புரட்சி நடிகர் எம் ஜி ஆர் மட்டும்தான்... நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மட்டும்தான்... விஜய், அஜித் என ஒவ்வொருத்தருக்கும் உலக அளவில் ஒவ்வொரு அடையாளம் இருக்கிறது. அனைவரும் கஷ்டப்பட்டு உழைத்து இந்த இடத்தை அடைந்திருக்கிறார்கள். அதற்கு உண்டான பலனை மக்கள் அளிக்கிறார்கள். அதேபோல் அதற்கு உண்டான பட்டத்தையும் மக்களே வழங்குவார்கள். அதனால் சூப்பர் ஸ்டார் பட்டத்தை பற்றி யாரும் பேச வேண்டியதில்லை. அது அவசியமுமில்லை. நன்றி” என்றார்.

 

Raghava Lawrance and Kangana Ranawat

 

நடிகர் ராகவா லாரன்ஸ் பேசுகையில், ”முதலில் சூப்பர் ஸ்டாருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். அவர் நடிப்பில் 'சந்திரமுகி' படம் வெளியாகி பெரிய வெற்றியை பெறவில்லை என்றால், 'சந்திரமுகி 2' இல்லை. இதற்காக சூப்பர் ஸ்டார்- இயக்குநர் பி. வாசு -சிவாஜி புரொடக்ஷன்ஸ் ஆகியோர்களுக்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவர்கள் சந்திரமுகி உருவாக்கவில்லை என்றால், 'சந்திரமுகி 2' இல்லை. அவர்கள் ஒரு பெரிய மரத்தை நட்டு வைத்து சென்றிருக்கிறார்கள். அதில் கிடைக்கும் பழங்களையும், பலன்களையும் நாம் சாப்பிட்டு அனுபவிக்கிறோம்.

 

நடிகர் கூல் சுரேஷ் என் மீது வைத்திருக்கும் அன்பின் காரணமாக அவர் பேசும் போது பலமுறை என்னை சூப்பர் ஸ்டார் என்று குறிப்பிட்டார். சூப்பர் ஸ்டார் பிரச்சனை இன்றும் ஓடிக் கொண்டிருக்கிறது. சூப்பர் ஸ்டாருடன் என்னை இணைத்து பேசியதால், அதற்கு நான் விளக்கம் தர வேண்டி இருக்கிறது.

 

சூப்பர் ஸ்டார் பட்டம் எனக்கு வேண்டும் என்று விஜய் எப்போதாவது.. யாரிடமாவது.. கேட்டிருக்கிறாரா? அல்லது அவர் எங்காவது அறிவித்தாரா? எனக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் வேண்டும் என்று. நான் எப்போது விஜய்யை சந்தித்தாலும், அவர் என்னிடம் தலைவர் நன்றாக இருக்கிறாரா? என்று தான் முதலில் கேட்பார். அதனால் விஜய்க்கு ரஜினி சார் மீது மரியாதை இருக்கிறது.

 

சூப்பர் ஸ்டாரை சந்திக்கும் போது, 'பீஸ்ட் படம் நன்றாக சென்று கொண்டிருக்கிறது. படம் சூப்பராக இருக்கிறது. வசூல் நன்றாக இருக்கிறது.  சன் டிவியிலிருந்து சொன்னார்கள் என்று சொல்வார். அதனால் இந்த இருவருக்குள் எந்த பிரச்சனையும் இல்லை.

 

இதற்கு ஒரு குட்டி கதை சொல்லலாம் என நினைக்கிறேன். ஒரு தேங்காய் மரம். ஒரு மாங்காய் மரம். தேங்காய் மரத்தில் மாங்காய் முளைக்குமா? மாங்காய் மரத்தில் தேங்காய் முளைக்குமா? கடவுளால் விதிக்கப்பட்ட விதி என்பது வேறு வேறு. ஆனால் இரண்டுமே ஒரே மண்ணில் தான் விளைகிறது. எப்படி அதை பிரித்துப் பார்ப்பது.. ஒரே தாயின் இரண்டு பிள்ளைகளை எப்படி பிரித்துப் பார்ப்பது? ஆனால் நடுவில் ஒருவர் அந்த மாங்காய் மரத்தில் தேங்காய் முளைக்கிறது..! என்று சொல்லிவிட்டு போய்விட்டார். அதைப் பார்த்து அனைவரும் மாங்காய் மரத்தில் தேங்காய்... என்று சொல்லத் தொடங்கி விட்டனர்.

 

மாங்காய் மரத்திற்கு நன்றாக தெரியும் நான் மாங்காய் மட்டும்தான் கொடுப்பேன் என்று, தேங்காய் மரத்துக்கு நன்றாக தெரியும் நான் தேங்காய் தான் கொடுப்பேன் என்று.. ஆனால் நடுவில் இந்த வியாபாரம் செய்கிறவர் இருக்கிறார்களல்லவா..! அவர்கள் சொன்ன வார்த்தை இது. அவர்களிடம் கேட்டுக்கொள்கிறேன். இது வேண்டாம் ப்ளீஸ் விட்டு விடுங்கள். எல்லோரும் இங்கு அண்ணன் தம்பிகளாய்.. ஒரே குடும்பமாக இருக்கிறோம். ஒற்றுமையாக இருக்கிறோம். எங்களை பிரித்து விடாதீர்கள்.

இனி யாராவது வந்து அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? என்று கேட்டால், 'தேங்காய் மரத்தில் தேங்காய் தான் முளைக்கும். மாங்காய் மரத்தின் மாங்காய் தான் முளைக்கும்' என்று பதில் சொல்லுங்கள்.

 

படத்தின் தயாரிப்பாளரான சுபாஸ்கரனுக்கு மிகப்பெரிய நன்றியை சொல்ல வேண்டும். மிக அண்மையில் தான் 'சந்திரமுகி 2' படத்தின் இசை வெளியீட்டு விழாவை மிகப் பிரம்மாண்டமாக நடத்திக் காட்டினார். அந்த விழாவில் என்னுடைய மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் நன்கொடை அளித்தார். அந்நிகழ்ச்சி நிறைவடைந்து 15 நாட்களுக்குள் மீண்டும் இப்படி ஒரு பிரம்மாண்டமான முன்னோட்ட வெளியிட்டு விழாவை நடத்துகிறார்.

 

லைக்கா நிறுவனத்தில் பணியாற்றுவது பெருமிதமாக இருக்கிறது. இந்நிறுவனத்தின் தயாரிப்பில் முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். லைகாவை பொருத்தவரை சுபாஸ்கரன் எண்ணம் என்றால்.. அதற்கு செயல் வடிவம் கொடுப்பது ஜி கே எம் தமிழ் குமரன்.

 

தமிழ் குமரன் படத்தின் முன்னோட்டத்தை பார்த்துவிட்டு, எனக்கு போன் மூலம் ட்ரைலர் வேற லெவலில் இருக்கிறது என உற்சாகத்துடன் சொன்னார். நான் இப்போதுதான் படத்தின் முன்னோட்டத்தை உங்களுடன் அமர்ந்து பார்த்தேன் மிக பிரம்மாண்டமாகவும், நேர்த்தியாகவும் இருக்கிறது. இந்தப் படத்தை அனைத்து இடங்களுக்கும் எடுத்துச் சென்றிருக்கும் தமிழ் குமரனுக்கும், அவருடன் பணியாற்றும் மேனேஜர்களுக்கும் என்னுடைய நன்றி.

 

இயக்குநர் பி. வாசுவை பற்றி கடந்த விழாவின் போது மேடையில் குறிப்பிட்டேன். நான் நடன நடிகராக இருந்த போதும் அவர் இயக்குநர். நான் தயாரிப்பாளராக.. இயக்குநராக.. உயர்ந்த பிறகும் என்றும் அவர் இயக்குநர். நாளை என்னுடைய தம்பியையும் அவர் இயக்கலாம். எதிர்காலத்தில் எனக்கு குழந்தை பிறந்தால், அந்த குழந்தையையும் அவர் இயக்குவார். அந்த அளவிற்கு ஆற்றலுடன் இன்றும் இயங்குகிறார் பி. வாசு. படப்பிடிப்பு தளத்திற்கு சொன்ன நேரத்திற்கு வருகை தந்து திட்டமிட்ட பணியை பூர்த்தி செய்வார்.

 

இந்தப் படத்தில் பி. வாசுவிற்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. என்னுடைய உடலில் இருந்து ரஜினியின் சாயலை பிரித்தெடுப்பது தான். படத்தில் ஒரு வசனம் இடம் பெறுகிறது. அந்த வசனத்தை பேசிவிட்டு, நான் நடந்து வந்து ஓரிடத்தில் நிற்க வேண்டும். அந்தக் காட்சியை நான் முதல் முறை  நடிக்கும் போது.. பி வாசு குறிக்கிட்டு, ”ராகவா.. சார் தெரிகிறார். அதை தவிர்த்து விடுங்கள் அல்லது அதனை குறைத்து விடுங்கள்.” என்றார். 

 

அதன் பிறகு அவரிடம் நான் அந்த நடையை நீங்கள் நடந்து காட்டுங்கள். உங்களைப் பார்த்து நான் நடிக்கிறேன் என்றேன். அவரும் ஒரு முறை நடந்து காட்டினார். பிறகு அதை போல் நடக்க வேண்டும் என்றார். அப்போது அவரிடம், சார் நீங்கள் கூட ரஜினி சார் போலத்தான் நடக்கிறீர்கள் என்று சொன்னேன். எங்களிடமிருந்த சவாலே இதுதான். எங்களிடமிருந்து ரஜினியை பிரிக்க முடியவில்லை. இருந்தாலும் இந்த படத்தில் எனது நடிப்பிற்கு கிடைக்கும் அனைத்து விமர்சனங்களும், நற்பெயர்களும் இயக்குநர் பி வாசுவிற்கே சேரும்.

 

கங்கனா மேடத்தை முதலில் 'கங்கனா மேடம்' தான் அழைத்தேன். பிறகு அவரிடம் பழகிய பிறகு 'ஹாய் கங்கு' என்றேன். அவர் அதை எளிதாக எடுத்துக்கொண்டு, 'ஹாய் மாஸ்டர்' என பேசினார்.  நான்கு முறை சிறந்த நடிப்பிற்காக தேசிய விருது பெற்ற நடிகை கங்கனா என்னுடன் இணைந்து நடித்திருப்பதை நான் பெருமிதமாக கருதுகிறேன்.

 

மகிமா நம்பியார், சிருஷ்டி டாங்கே, சுபிக்ஷா கிருஷ்ணன், குட்டீஸ், ரவி மரியா, விக்னேஷ்.. என அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஒளிப்பதிவாளர் ஆர் டி ராஜசேகருக்கும் நன்றி. நான் நேரில்  பார்ப்பதற்கும், திரையில் பார்ப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை அவர்தான் திரையில் அழகாக காட்சிப்படுத்தி இருக்கிறார். அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

 

படத்தில் ஒரு வசனம் இருக்கிறது. வேட்டையன் கதாபாத்திரம் பேசும் அந்த வசனம். தூய தமிழில் இருந்தது. நான் ராயபுரத்தில் பிறந்தவன். தமிழ் சுமாராக தான் தெரியும். தூய தமிழில் பேசி நடிக்க வேண்டும் என்றவுடன் முதலில் எனக்கு வரவே இல்லை. பிறகு பல முறை பயிற்சி எடுத்து அந்த வசனத்தை பேசி நடித்தேன்.” என்றார்.

 

Chandramukhi 2 Trailer Launch

 

நடிகை கங்கனா ரனாவத் பேசுகையில், ”நான் முதன்முதலாக 'சந்திரமுகி 2' என்ற காமெடி ஹாரர் படத்தில் நடித்திருக்கிறேன். இந்த படத்தின் இந்தி பதிப்பில் நான் பின்னணி பேசி இருக்கிறேன். பின்னணி பேசும்போது கடினமாகவும், சவாலாகவும் இருந்தது. குறிப்பாக லக லக லக பேசும்போது. இந்தப் படத்தில் நடனம் ஆடி இருக்கிறேன். பேயாயாகவும் நடித்திருக்கிறேன். தென்னிந்தியாவை பொறுத்தவரை எனக்கு ரச சாதம் மிகவும் பிடிக்கும்.

 

ராகவா லாரன்ஸ் என்னை 'ஹாய் கங்கு' என்று அழைத்ததால், நான் அவரை 'ஹாய் ராகு' என அழைக்க விரும்புகிறேன். படப்பிடிப்பு தளத்தில் ராகவா லாரன்ஸ் செய்யும் சில குறும்புகள் ரசிக்கும் படி இருக்கும். ஜோக்குகள், குட்டிக்கதை என சொல்லி கலகலப்பாக வைத்திருப்பார். இந்தப் படத்தில் நடித்தது வித்தியாசமான அனுபவம். மறக்க இயலாது” என்றார்.

Related News

9218

”’பீனிக்ஸ்’ நாயகன் சூர்யாவுக்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது” - இயக்குநர் அனல் அரசு புகழாரம்
Saturday July-12 2025

இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...

திரைப்பட தயாரிப்பில் இறங்கிய 'நாய்ஸ் அண்டு கிரைன்ஸ்'!
Saturday July-12 2025

திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ள இந்தியாவின் முன்னணி ஊடகத் தயாரிப்பு மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), திரைப்பட தயாரிப்பில் களம் இறங்குகிறது...

தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘மார்ஷல்’!
Saturday July-12 2025

‘டாணாக்காரன்’ பட புகழ் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்திற்கு ‘மார்ஷல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது...

Recent Gallery