அறிமுக இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஷ் குமார் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பார்க்கிங்’. இதில் நாயகியாக இந்துஜா நடிக்க, முக்கிய வேடத்தில் எம்.எஸ்.பாஸ்கர் நடித்திருக்கிறார். இவர்களுடன் ராம ராஜேந்திரன், பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஃபேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இப்படம் வரும் டிசம்பர் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் வெளியீட்டு தேதியை அறிவிக்கும் புரோமோ வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. நகைச்சுவை பாணியில் உருவாக்கப்பட்டுள்ள புரோமோ வீடியோ இணையதளம் மற்றும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில், படத்தின் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன், நடிகர் ஹரிஷ் கல்யாண் மற்றும் நாயகி இந்துஜா ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்து ’பார்க்கிங்’ படத்தை பற்றி மட்டும் இன்றி, பார்க்கிங் பிரச்சனையால் நடந்த சில உண்மை சம்பவங்கள் பற்றியும் பகிர்ந்துக் கொண்டார்கள். குறிப்பாக பார்க்கிங் பிரச்சனையால் கொலை சம்பவங்களும் நடந்திருக்கிறது, என்ற அதிர்ச்சிகரமான உண்மையை நடிகர் ஹரிஷ் கல்யாண் கூறியது, புரோமோ வீடியோ போல் இந்த படம் நகைச்சுவை பாணி படம் அல்ல என்பதை புரிய வைத்து விட்டது.
தொடர்ந்து படம் பற்றி கூறிய ஹரிஷ் கல்யாண், “இந்த படத்தை பற்றி சொல்வதற்கு முன்பு இயக்குநர் ராம்குமார் பற்றி சொல்கிறேன். அவர் இந்த திரைக்கதையை என்னிடம் கொடுத்த போது, அதை படித்த உடன் நான் உணர்ந்த விசயம், ஒரு நடிகராக அல்லாமல் ஒரு பார்வையாளராக இந்த கதையை அனுக வேண்டும் என்பது தான். திரைக்கதையில் என்ன இருந்ததோ, அதை துளி கூட மாற்றாமல் அனைத்தையும் அப்படியே எடுத்தார். கூடுதலாக சேர்த்தாரே தவிர திரைக்கதையில் இருந்த எதையுமே அவர் மாற்றவில்லை, அந்த அளவுக்கு மிக தெளிவாக இருந்தார். இப்படி ஒரு கதையில் என்னை பொருத்தி பார்த்ததற்கு அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
எனக்கு இந்த கதையை கேட்கும் போது, என் வாழ்க்கையில் எங்கேயோ இதுபோன்ற சம்பவம் நடந்திருப்பதாக தோன்றியது. பள்ளிக்கு சைக்கிளில் தான் செல்வேன், அப்போது பள்ளியில் சைக்கிள் நிறுத்துவதற்கு இடம் இருக்கும். அங்கு யார் வேண்டுமானாலும் சைக்கிள் நிறுத்தலாம். அங்குள்ள ஒரு இடத்தில் நான் வழக்கமாக சைக்கிள் விடுவேன். ஒரு நாள் என் இடத்தில் வேறு ஒரு சைக்கிள் இருந்ததால், என் சைக்கிளை வேறு இடத்தில் நிறுத்தினேன். அப்போது அங்கு வழக்கமாக சைக்கிள் விடும் ஒரு மாணவர் என்னிடம் சண்டை போட்டார், அப்போதே இந்த பிரச்சனை இருந்தது.
இப்படி ஒரு கதையை இயக்குநர் சொன்ன போது, நிஜ வாழ்க்கையில் இதுபோன்ற சம்பவங்கள் எப்படி எல்லாம் இருந்திருக்கும் என்பதை அறிந்துக்கொள்வதற்காக நான் பல செய்திகளையும், கட்டுரைகளையும் தேடி படித்தேன். அதில் ஒரு சம்பவம் நினைத்து பார்க்க முடியாதபடி இருந்தது. அது எந்த நகரம் என்று சொல்ல விரும்பவில்லை, ஒரு வீட்டில் மூன்று பேர் தங்கியிருந்தார்கள், அங்குள்ள இடத்தில் தான் அவர்கள் இருசக்கர வாகனத்தை விடுவார்கள், அதில் அந்த மூன்று பேருக்கும் பிரச்சனை ஏற்பட்டு அதில் ஒருவர் கொலை செய்யப்பட்டு விட்டார். இதுபோன்ற சம்பவங்கள் நகரத்தில் மட்டுல் அல்ல, நகரம் அல்லாத ஊர்களிலும் பார்க்கிங்கிற்காக இப்படி பல சம்பவங்கள் நடந்திருக்கின்றன.
இப்படிப்பட்ட பிரச்சனைகள் எதனால் நடக்கிறது என்று நான் யோசித்த போது, முன்பு எல்லாம் கார் என்பது ஆடம்பரமான பொருளாக இருந்தது. ஆனால், இப்போது அவசியமான பொருளாக மாறிவிட்டது. ஒரு வீட்டில் இரண்டு கார்கள், மூன்று இருசக்கர வாகனங்கள் இருப்பது கூட சகஜமாகி விட்டது. ஒரு விபத்து குறித்து கேள்விப்பட்டால் கூட அதை சாதாரணமாக எடுத்துக் கொள்பவர்கள், தங்களது காரில் சிறிய கோடு விழுந்தால் உடனே அதிர்ச்சியாகி விடுகிறார்கள். இது போன்ற ஒரு உணர்வின் வெளிப்பாடு, எனக்கும், எம்.எஸ்.பாஸ்கர் சாருக்கும் இடையே இருக்கும் ஈகோவை தூண்டி விடுவதோடு, அது எவ்வளவு தூரம் போகிறது என்பது தான் படத்தின் கதை.” என்றார்.
இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் கூறுகையில், “ஊரடங்கு சமயத்தில் நடந்த உண்மை சம்பவங்களை வைத்து எழுதப்பட்ட கதை இது. நான் கதை எழுதியது போல் படமும் மிக நன்றாக வந்திருக்கிறது. ரசிகர்களை தங்களது வாழ்க்கையில் அல்லது அவர்களுக்கு நெருங்கியவர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களுடன் தொடர்பு படுத்தும் வகையில் படம் இருக்கும்.
என் வாழ்வில் தனிப்பட்ட முறையில் ஒரு சம்பவம் நடந்து, அந்த சம்பவம் இவ்வளவு தூரம் போக வேண்டுமா? என்ற கேள்வி என்னுள் எழுந்தது. இதை பற்றி நண்பர்களிடம் கேட்ட போது, அவர்களும் இதுபோன்ற சம்பவங்களை சொன்னார்கள். இது நிறைய பேருக்கு நடந்திருப்பதோடு, நிறைய பேரின் வாழ்வில் தொடர்புடையதாக இருந்ததால், இதை மையமாக வைத்து கதை எழுதினேன். இந்த கதையை பற்றி பேசும் போது, மற்றவர்களும் நிறைய சம்பவங்களை சொன்னார்கள், அது அனைத்தையும் கோர்வையாக சேர்த்து எழுதியது தான் இந்த படத்தின் திரைக்கதை.
இதுபோன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு என்பதே இல்லை, புது புது வடிவத்தில் இதுபோன்ற பிரச்சனைகள் வந்துக்கொண்டு தான் இருக்கும். அதன்படி படத்திலும் எந்தவிதமான தீர்வையும் சொல்லவில்லை. நான் இதை மனிதாபிமானம் என்ற அடிப்படையில் தான் படத்தில் அணுகியிருக்கிறேன். கார் பார்க்கிங் பிரச்சனை மட்டும் அல்ல, சாலையில் வாகனத்தில் செல்லும் போது நம்மை யாராவது இடித்துவிட்டால், அவர்கள் சாரி என்று சொல்லிவிட்டால் போதும் அந்த பிரச்சனை முடிந்துவிடும், ஆனால் அப்படி சொல்லாமல் ஒருவருக்கு ஒருவர் முறைத்துக்கொண்டு, திட்டிக்கொண்டால் அந்த பிரச்சனை நினைத்து பார்க்க முடியாதபடி வளர்ந்து விடும். எனவே, மனிதாபிமானத்தோடு இத்தகைய செயலை அணுகினால் இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படாது, என்று தான் சொல்லியிருக்கிறேன்.” என்றார்.
நடிகை இந்துஜா படம் குறித்து கூறுகையில், “நான் நடிக்கும் ஒவ்வொரு படங்களிலும் ஒவ்வொரு சவால் இருக்க வேண்டும் என்று நினைப்பேன். இந்த படத்திலும் அப்படி ஒரு சவாலான கதாபாத்திரம் தான். அதாவது படம் முழுவதும் கர்ப்பிணியாக நடித்திருக்கிறேன். இந்த படத்தில் அனைத்து விசயங்களுக்கும் தொடர்பு இருக்கிறது அதுபோல் காருக்கும் என் கர்ப்பத்திற்கும் கூட தொடர்பு இருக்கும். அனைத்தையும் இப்போது சொல்ல முடியாது, படம் பார்த்தால் உங்களுக்கு புரியும்.” என்றார்.
ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்திருக்கிறார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்திருக்கிறார். என்.கே.ராகுல் கலை இயக்குநராக பணியாற்ற, தினேஷ் காசி மற்றும் பீனிக்ஸ் பிரபு சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளனர்.
சிறந்த நடிகராக அறியப்பட்ட போஸ் வெங்கட் 'கன்னி மாடம்' என்ற படத்தை இயக்கியதன் மூலம் சிறந்த இயக்குனராகவும் அறியப்பட்டார்...
தமிழ் சினிமா நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் என ஒட்டு மொத்த கலைஞர்களையும் கொண்டாடுவதில் முதல் இடத்தில் இருப்பவர்கள் மலேசியா மற்றும் சிங்கப்பூர் தமிழர்கள் தான்...
’சித்தா’ படத்தை தொடர்ந்து இயக்குநர் எஸ்...