எஸ்.ஜி.எஸ் கிரியேட்டிவ் மீடியா சார்பில் எஸ்.பி.ஆர் தயாரிப்பில், இயக்குநர் எல்.ஜி.ரவிசந்தர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வா வரலாம் வா’. பிக் பாஸ் புகழ் பாலாஜி முருகதாஸ் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் நாயகிகளாக மஹானா மற்றும் காயத்ரி ரெமா நடித்திருக்கிறார்கள். மைம் கோபி வில்லனாக நடிக்க, கிங்ஸ்லி முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன் சிங்கம் புலி, வையாபுரி, சரவண சுப்பையா, தீபா, வாசு விக்ரம், பயில்வான் ரங்கநாதன், போண்டா மணி, மீசை ராஜேந்திரன், கிரேன் மனோகர், ரஞ்சன், திலீபன், பிரபாகரன், வடிவேல் பீட்டர் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க 40 குழந்தைகளும் நடித்திருக்கிறார்கள்.
தேனிசை தென்றால் தேவா இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பிரபல ஒளிப்பதிவாளர் கார்த்திக் ராஜா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ராஜா முகமது படத்தொகுப்பு செய்ய, நோபல் நடனக் காட்சிகளையும், இடிமின்னல் இளங்கோ சண்டைக்காட்சிகளையும் வடிவமைத்துள்ளனர்.
இந்த நிலையில், ‘வா வரலாம் வா’ படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நவம்பர் 15 அம தேதி சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன், இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, மோகன் ஜி, வ.கெளதமன், திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் விஜயமுரளி, இணை செயலாளர் செளந்தரராஜன், விநியோகஸ்தர் ஜே.எஸ்.கே.கோபி, சேலம் ஆர்.ஆர் பிரியாணி உணவக உரிமையாளர் தமிழ்ச்செல்வன், இசையமைப்பாளர் தேவா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் பேசிய இசையமைப்பாளர் தேவா, “இயக்குநர் ரவிசந்தர் இந்த படத்தின் கதையை என்னிடம் சொன்ன போது, என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. காட்சிக்கு காட்சி நகைச்சுவை என என்னை சிரிக்க வைத்து விட்டார். அவர் கதை சொல்லும் போது இந்த படத்தை நாமே எடுத்து விடலாமா என்று கூட நினைத்தேன், அந்த அளவுக்கு சிறப்பான கதை. கதை என்ன சொன்னாரோ அதை அப்படியே படமாக எடுத்திருக்கிறார். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிகர், நடிகைகளை தேர்வு செய்து மிகப்பெரிய படமாக இயக்கியிருக்கிறார். ‘வா வரலாம் வா’ நிச்சயம் மிகப்பெரிய வெற்றி பெறும்.” என்றார்.
இயக்குநர் எல்.ஜி.ரவிசந்தர் பேசுகையில், “இந்த கதையை நான் பல தயாரிப்பாளர்களிடம் சொல்லியிருக்கிறேன். பலர் அட்வன்ஸ் கூட கொடுப்பார்கள், ஆனால் ஏதோ காரணத்தால் படம் நின்றுவிடும் வாங்கிய அட்வான்ஸை நான் திரும்ப கொடுத்து விடுவேன். இப்படியே என் வாழ்க்கை போய் கொண்டிருந்தது. நான்கு ஹிட் படங்களை கொடுத்தும் இந்த கதையை வைத்துக்கொண்டு நான் அலைந்துக் கொண்டிருந்தேன். அப்போது தான் தயாரிப்பாளர் எஸ்.பி.ஆர் அறிமுகம் கிடைத்தது. அவரிடம் கதை சொல்ல நேரம் கிடைத்த போது, இந்த கதையை இவரும் தயாரிக்கவில்லை என்றால், இந்த கதையை தூக்கி போட்டுவிட வேண்டியது தான் என்று நினைத்தேன். அதன்படி அவருக்கு கதை சொன்னேன், கதையை கேட்டுவிட்டு அவர் எதுவும் சொல்லவில்லை, அப்போதே எனக்கு நம்பிக்கை போய் விட்டது. ஆனால், சிறிது நேரம் கழித்து இந்த படத்தை நிச்சயம் பண்ணுகிறேன், நீங்க தான் இயக்குநர் என்று சொன்னார். அதுமட்டும் அல்ல, நீங்களே அலுவலகம் பாருங்கள், நடிகர், நடிகைகளை ஒப்பந்தம் செய்யுங்கள், படப்பிடிப்பை தொடங்குங்கள், பணம் மட்டும் எவ்வளவு வேண்டும் என்று சொல்லி விடுங்கள், என்றார். அதன்படி படம் தொடங்கியதில் இருந்து நான் கேட்டதை எந்தவித மறுப்பு இன்றி கொடுத்து வந்தார், நானும் அவர் கேட்கவில்லை என்றாலும் தினசரி கணக்குகளை ஒப்படைத்து வந்தேன். அப்படி தான் இந்த படம் வளர்ந்தது.
இந்த படத்திற்கான பல ஹீரோக்களை நான் தேடினாலும் இறுதியாக எனக்கு பாலாஜி முருகதாஸ் கிடைத்தார். அவரை போல் வேறு யாரும் இந்த கதைக்கு பொருந்த மாட்டார்கள் என்று சொல்லும் அளவுக்கு சிறப்பாக நடித்திருக்கிறார். மஹானா, காயத்ரி ரெமா என அனைத்து நடிகர்களும் நல்ல ஒத்துழைப்பை கொடுத்தார்கள். இது போன்ற தயாரிப்பாளர் கிடைத்தால் நிச்சயம் அனைவராலும் வெற்றி படம் கொடுக்க முடியும். இந்த படத்திற்குப் பிறகு நான் மற்றொரு படத்தை தொடங்க இருக்கிறேன். ஆனால், இந்த தயாரிப்பாளரின் தயாரிப்பில் வாய்ப்புக்காக காத்திருக்கும் புதிய இயக்குநர்கள் படம் பண்ண வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இதுபோன்ற தயாரிப்பாளர் புதிய இயக்குநர்களுக்கு கிடைத்தால் அவர்கள் நிச்சயம் வெற்றி படத்தை கொடுப்பார்கள்.” என்றார்.
நடிகர் பாலாஜி முருகதாஸ் பேசுகையில், “இந்த இடத்திற்கு வருவதற்கு எனக்கு 10 வருடங்கள் தேவைப்பட்டது. எனக்கு இப்படி ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த இடத்தில் நான் அனைவருக்கும் நன்றி சொல்வதற்காக தான் வந்தேன். இயக்குநர், தயாரிப்பாளர், என்னுடன் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.
நாயகி மஹானா பேசுகையில், “எங்களை போன்ற வளர்ந்து வரும் நடிகர்களின் படங்களை வாழ்த்த இவ்வளவு பெரியவர்கள் வந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்களால் முடிந்த அளவுக்கு உழைப்பை கொடுத்து இந்த படத்தை உருவாக்கியுள்ளோம். இயக்குநர் சார், கேமராமேன் சார் கடுமையாக உழைத்தார்கள். படம் மிகப்பெரிய படமாக வந்திருக்கிறது. இசையமைப்பாளர் தேவா சாரின் தீவிர ரசிகை நான், இன்று அவரது இசையமைப்பில் நடித்திருப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது. மற்ற படங்களுக்கு போல் எங்கள் படத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.” என்று கூறி நடிகர் விஜய் பாணியில் குட்டி கதை ஒன்றையும் சொல்லி விருந்தினர்களிடம் பாராட்டு பெற்றார்.
கமர்ஷியல் காமெடி ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள ‘வா வரலாம் வா’ படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படம் வருகின்ற டிசம்பர் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
கெளபாய்ஸ், நாடோடி வீரர்கள், கோஸ்ட்பஸ்டர்ஸ் அல்லது புதையல் வேட்டையாடுபவர்கள் பற்றிய படங்களே பொதுவாக சாகச படங்களாகக் கருதப்படுகின்றன...
மறைந்த நடிகர் முரளியின் இளைய மகனும், அதர்வா முரளியின் சகோதரருமான ஆகாஷ் முரளி கதாநாயகனாக அறிமுகமாகவுள்ள திரைப்படம் ‘நேசிப்பாயா’...
‘டிஎன்ஏ' படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்ததில் இருந்தே அதன் மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பு வைத்திருக்கின்றனர்...