Latest News :

’பூமர காத்து’ படத்திற்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் - பிரபலங்கள் பாராட்டு
Friday February-23 2024

ஜீசஸ் கிரேஸ் சினி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஞான ஆரோக்கிய ராஜா தயாரித்து இயக்கியுள்ள திரைப்படம் ‘பூமர காத்து’.விதுஷ்,  சந்தோஷ் சரவணன் ஆகியோர் கதாநாயகர்களாக நடித்திருக்கும் இப்படத்தில் கதாநாயகியாக மனிஷா நடித்திருக்கிறார். இவர்களுடன் மனோபாலா, சிங்கம் புலி, தேவதர்ஷினி, முத்துக்காளை, போண்டாமணி, ஓ.எஸ்.மணி, குழந்தை நட்சத்திரம் ஜி.வி.சன்மதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

 

பள்ளி பருவத்தில் வரும் காதல் சரியா? தவறா? என்பதை மையமாக கொண்டு எழுதப்பட்டுள்ள இப்படத்தின் கதையில், காதலோடு பல்வேறு சமூக கருத்துகளும் பேசப்பட்டுள்ளது. குறிப்பாக, பள்ளி மாணவர்களின் காதல் தவறு என்றால், அது மாணவர்களுக்கு பிடிக்காது. அதே சமயம், சரி என்றால் அதை பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனால், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என இரு தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும்படியான கருத்தை கமர்ஷியலாக மட்டும் இன்றி, முகம் சுழிக்காதபடி நேர்மையாக சொல்லியிருப்பது இப்படத்தின் சிறப்பமசமாகும்.

 

’பூமர காத்து’ படத்தை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பார்த்தால், நிச்சயம் அனைத்து மாணவர்களிடமும் படத்தை கொண்டு போய் சேர்ப்பார், அந்த அளவுக்கு மாணவர்களுக்கான விழிப்புணர்வு திரைப்படமாக இருக்கிறது, என்று கூறிய படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான ஞான ஆரோக்கிய ராஜா, விழிப்புணர்வு படம் என்பதற்காக அதை பாடம் எடுப்பது போல் சொல்லாமல், நகைச்சுவை, காதல்,  செண்டிமெண்ட் என அனைத்து கமர்ஷியல் அம்சங்களையும் அளவாக கையாண்டு சிறுவர்கள், பெரியவர்கள் என குடும்பமாக உட்கார்ந்து பார்க்கும் முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக கொடுத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

 

பள்ளி பருவம், கல்லூரி பருவம் மற்றும் திருமண பருவம் என்று மூன்று காலக்கட்டங்களாக நடக்கும் கதையில், கதாபாத்திரங்களின் தோற்றமும், பருவங்களுக்கு ஏற்ப மாறுபடுவதோடு, நடிப்பிலும் வேறுபாட்டை காண்பித்து நடித்திருக்கும் நடிகர்களின் நடிப்பும் பாரட்டும்படி இருக்குமாம்.

 

காதலை தவறு என்று பார்ப்பவர்களுக்கு அது தவறாகவே தெரியும், அதே சமயம் அதை சரி என்ற கண்ணோட்டத்தில் பார்ப்பவர்களுக்கு சரியாக தெரியும், என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இயக்குநர் ஞான ஆரோக்கிய ராஜா, பெற்றோர்களின் துணை இல்லாமல் காதலர்களால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது, என்பதை இப்படத்தில் பதிவு செய்திருக்கிறார். 

 

முக்கோண காதல் கதைக்கு சுவாரஸ்யமான திரைக்கதை அமைத்து அதை அனைத்து தரப்பினரும் பார்க்க கூடிய ஜனரஞ்சகமான படமாக கொடுத்திருக்கும் இயக்குநர் ஞான ஆரோக்கிய ராஜா, மாணவர்களுக்கு மட்டும் இன்றி ஆசிரியர்கள், பெற்றோர்கள் என அனைவருக்கும் அறிவுரை சொல்லும்படியான காட்சிகளை வடிவமைத்திருப்பதோடு, வாழ்க்கைக்கு எது தேவை, எது தேவையற்றது போன்ற பல நல்ல விசயங்களை பாடமாக அல்லாமல் அனைவரும் கொண்டாடும் கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்த படமாக கொடுத்திருக்கிறார்.

 

இப்படத்தில் தமிழ் சினிமாவின் முக்கிய காமெடி நடிகர்கள் பலர் நடித்திருக்கிறார்கள். சுமார் 15-க்கும் மேற்பட்ட காமெடி நடிகர்களை நடிக்க வைத்திருக்கும் இயக்குநர் ஞான ஆரோக்கிய ராஜா, அவர்களை வெறும் காமெடி நடிகர்களாக மட்டும் இன்றி கதையில் முக்கியத்துவம் கொண்ட கதாபாத்திரங்களாகவும் பயன்படுத்தியிருப்பது படத்தின் கூடுதல் சிறப்பு. குறிப்பாக, மறைந்த நடிகர் மனோபாலா இந்த படத்தில் பள்ளி மாணவராக நடித்திருக்கிறார். மனோபாலா பல படங்களில் இளமை தோற்றத்தில் நடித்தாலும், இளமை என்பது அவரது தோற்றத்தில் இல்லாமல் உடையில் மட்டுமே இருக்கும். ஆனால், இந்த படத்தில் மனோபாலாவின் பள்ளி பருவத்தோற்றத்தை பார்ப்பவர்கள் நிச்சயம் ஆச்சரியத்தில் உரைந்துபோவார்கள்.

 

காதல் தொடர்பான நல்ல விசயங்கள் மட்டும் இன்றி பல உயரிய விருதுகள் பெரிய மனிதர்களுக்கு வழங்கப்பட்டாலும், பெரும்பாலும் அவர்கள் இறந்த பிறகே அவர்களுக்கான விருது அறிவிக்கப்படுகிறது. அப்படி இல்லாமல் வாழும் போதே அவர்களுக்கான அங்கீகாரத்தை கொடுக்கும் விதமாக உயரிய விருதுகளை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியிருப்பதோடு, கடன் தொடர்பாக சில காமெடி காட்சிகளை சிரிக்கும்படியும், சிந்திக்கும்படியும் வைத்திருக்கிறார். அதாவது, முன்பெல்லாம் கடன் கொடுப்பவர்களை நாம் தேடி செல்வோம். ஆனால், இன்று கடன் கொடுக்கும் வங்கிகள் நம்மை தேடி தேடி கடன் கொடுக்கிறார்கள், அப்படி கடன் கொடுக்கும் அவர்கள் அந்த கடனை வசூல் செய்யும் விதம் வேறு மாதிரியானதாக இருக்கும். இப்படி வங்கிகளிடம் கடன் வாங்கி, அதனால் பாதிக்கப்படுபவர்கள் பற்றிய காட்சிகளை காமெடியாக சொல்லி சிரிக்க வைத்திருப்பதோடு, சிந்திக்கவும் வைத்திருக்கிறார்கள். இதேபோல்,  சாதி பிரிவினை மற்றும் சமூக நீதி என சமூகத்திற்கு தேவையான அனைத்து நல்ல விசயங்களையும், அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும்படியாக உருவாகியுள்ள ‘பூமர காத்து’ திரைப்படத்தை பார்த்த திரை பிரபலங்கள் சிலர், படத்திற்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும், என்று பாராட்டியுள்ளனர்.

 

Director Gnan Aarokkiya Raja

 

மேலும், படம் தணிக்கை குழுவினருக்கு திரையிட்டபோது, படத்தை பார்த்த தணிக்கை குழுவினர், பள்ளி மாணவர்கள் நிச்சயம் பார்க்க வேண்டிய ஒரு படமாக ’பூமர காத்து’ உள்ளது. இப்படிப்பட்ட படங்கள் சமூகத்திற்கு மிகவும் அவசியம்,நிச்சயம் படம் அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற வகையில் இருக்கிறது, என்று பாராட்டி படத்திற்கு யு சான்றிதழ் வழங்கியுள்ளார்கள். 

 

ஞான ஆரோக்கிய ராஜா கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கி தயாரித்திருக்கும் ‘பூமர காத்து’ படத்திற்கு ”நமச்சிவாயா...நமச்சிவாயா...ஓம் நமச்சிவாய” பாடல் புகழ் அரவிந்த் ஸ்ரீராம் இசையமைத்திருக்கிறார். இப்படத்தில் இடம்பெற்றுள்ள நான்கு பாடல்களும் ஒவ்வொரு விதத்தில் ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. “வெல்லக்கட்டி” என்ற பாடலை சத்திய பிரகாஷ் பாடியிருக்கிறார். “சிறகு தொலைத்த பறவை’ என்ற பாடலை வைக்கம் விஜயலட்சுமியும், “கருவின் பிறந்த காதலை” பாடலை பவித்ராவும், “குடிடா குடிடா” என்ற பாடலை திப்புவும் பாடியுள்ளார்கள். 

 

மதுரை ஈஸ்வர் பின்னணி இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு ஜோ ஒளிப்பதிவு செய்ய, சார்ப் ஆனந்த் படத்தொகுப்பு செய்துள்ளார். ஓ.எஸ்.மணி இணை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். மக்கள் தொடர்பாளராக கோவிந்தராஜ் பணியாற்றுகிறார்.

Related News

9542

’லாரா’ படத்தின் தலைப்பு போஸ்டரை வெளியிட்ட நடிகர் சத்யராஜ்!
Saturday June-15 2024

'நாக்குக்கு நரம்பில்லை . எதை வேண்டுமானாலும்  பேசும்' என்பார்கள்...

”டிஜிட்டல் தளங்களில் படைப்பு சுதந்திரம் இல்லை” - ’கருடன்’ வெற்றி விழாவில் வெற்றிமாறன் பேச்சு
Saturday June-15 2024

இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில், சூரி நாயகனாகவும், சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் முக்கிய வேடங்களில் நடிக்க, கடந்த மாதம் வெளியான ‘கருடன்’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது...