‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’ என்ற நல்ல தலைப்புடன் உருவாகியிருக்கும் ஒரு படத்திற்கு தணிக்கை குழு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியிருப்பது ஆச்சரியமாக இருப்பதோடு, அப்படத்தின் மீது எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சித்தார்த் நடிப்பில் வெளியான ‘எனக்குள் ஒருவன்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பிரசாத் ராமர் இயக்கியிருக்கும் ‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’ படத்தை பூர்வா புரொடக்ஷன்ஸ் சார்பில் பிரபல பாடகரும், இசையமைப்பாளருமான பிரதீப் குமார், தயாரித்து இசையமைத்து பாடல்கள் எழுதியுள்ளார்.
இளைஞர்களின் வாழ்வியலை மையமாக வைத்து வடிவமைக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியிருப்பது ஏன்? என்பது விரைவில் வெளியாக இருக்கும் படத்தின் டிரைலர் புரிய வைத்துவிடும் என்றாலும், படத்தின் டிரைலரில் இருக்கும் விசயங்களை விட படத்தில் பேசப்பட்டிருக்கும் விசயங்கள் படம் பார்ப்பவர்களின் மனதில் பல்வேறு கேள்விகளை எழுப்பும், என்கிறார் படத்தின் இயக்குநர் பிரசாத் ராமர்.
வரும் மார்ச் 8 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’ படம் பற்றி இயக்குநர் பிரசாத் ராமர் கூறுகையில், “தணிக்கை குழு ஏ சான்றிதழ் வழங்கியிருக்கிறது. அதற்காக, ஆபாசமான காட்சிகள் மூலம் ரசிகர்களை திரையரங்கிற்கு அழைக்கும் நோக்கம் எங்களுக்கு இல்லை. இந்த சமூகத்தில் இளைஞர்கள் மீதான பார்வை எப்படி இருக்கிறது, சமூகத்தை அவர்கள் எப்படி பார்க்கிறார்கள், என்பதை சொல்லும் வகையில் தான் இந்த படத்தின் கதை வடிவமைக்கப்பட்டிருக்கிறது. மேலும், இதன் திரைக்கதை ஒரு ரோட் டிராவல் பாணியிலும் இருக்கும். கதைக்காக படத்தில் முத்தக்காட்சிகள் வைத்திருக்கிறோம், அதற்கு கூட தணிக்கை குழு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால், சில விசயங்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அப்படிப்பட்ட விசயங்களை நீக்கி விட்டோம். இருந்தாலும், நாங்கள் தொட்டிருக்கும் சம்பவங்களுக்காக ஏ சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள். அதே சமயம், அக்காட்சிகளை எடுக்கும் போது சம்மந்தப்பட்ட நடிகர், நடிகைகளுக்கு விரிவாக புரிய வைத்து தான் எடுத்திருக்கிறோம். அந்த காட்சிகள் எந்தவிதத்திலும் நெருடலாக இருக்காது. படத்தை பார்க்கும் போது அதை நீங்களும் உணர்வீர்கள்.
மதுரையிலிருந்து தஞ்சை, புதுக்கோட்டை, கும்பகோணம் வழியாக மாயவரத்தை அடைகிறார்கள் இரண்டு இளைஞர்கள். பூம்புகார் செல்வதற்கு முன்பு அவர்களுடன் அந்தப் பயணத்தில் ஒரு பெண்ணும் இணைகிறாள். அந்த இளைஞர்களின் நோக்கம் ஒன்றாக இருக்க, அந்த பெண்னின் எதிர்பார்ப்பு வேறாக இருக்கிறது. இறுதியில் இருவரது எண்ணங்கள் மற்றும் புரிதல் எப்படி இருக்கிறது, அவர்கள் மீதான சமூகத்தின் புரிதல் எப்படி இருக்கிறது, என்பதை பற்றி தான் படம் பேசுகிறது. இந்த படத்தில் எந்தவித மெசஜையும் சொல்லவில்லை, இது சரி, அது தவறு என்று அறிவுரையும் சொல்லவில்லை, எந்த ஒரு தீர்வையும் சொல்லவில்லை. இப்படிப்பட்ட விசயங்களை இளைஞர்கள் எப்படி பார்க்கிறார்கள், என்பதை பற்றி மட்டுமே பேசியிருக்கிறோம், அதை திரையில் பார்க்கும் போது பார்வையாளர்களுக்கு பல கேள்விகள் எழும்.
இந்த படத்தை வழக்கமான சினிமா பாணியில் எடுக்காமல் நிஜ வாழ்க்கை பயணமாக இருக்க வேண்டும் என்று நினைத்து எடுத்திருக்கிறோம். அதற்காக தான் ஈஸ்தட்டிக்ஸ் கலர் போன்ற விசயங்களை தவிர்த்திருக்கிறோம். அதேபோல், மதுரை உள்ளிட்ட பகுதிகளை காட்டும் போது வழக்கமாக காட்டப்படும் லொக்கேஷன்களை காட்டாமல், இதுவரை திரைப்படங்களில் பார்க்காத மதுரை பகுதிகளில் காட்சிகளை படமாக்கினோம். அதற்கு காரணம், அப்பகுதிகளில் இருப்பவர்கள் படத்துடன் தங்களை தொடர்புபடுத்திக் கொள்வதற்காக தான். தஞ்சை, புதுக்கோட்டை, கும்பகோணம் என்று அனைத்து பகுதிகளையும் இப்படித்தான் கையாண்டிருக்கிறோம்.” என்றார்.
தயாரிப்பாளர் பிரதீப் குமார் கூறுகையில் , “’எனக்குள் ஒருவன்’ படத்தின் போதே இயக்குநர் பிரசாத் ராமரை தெரியும். அன்று முதல் நாங்கள் நண்பர்களாக பழகி வருகிறோம். எனக்கு தயாரிப்பாளர் ஆக வேண்டும் என்ற எண்ணம் கிடையாது. ஒரு முறை அவர் இந்த கதையை என்னிடம் சொன்ன போது, புதிதாகவும், பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த ஜாலியான கதையாக இருந்தது, அதனால் உடனே ஆரம்பித்து விடலாம் என்று சொன்னேன், பிறகு தான் தெரிந்தது நான் தான் தயாரிப்பாளர் என்று. நான் மட்டும் தயாரிக்கவில்லை, எனக்காக என் குடும்பமே ஒன்று சேர்ந்து இந்த படத்தை தயாரித்திருக்கிறார்கள். படம் நன்றாக வந்திருக்கிறது. படத்தை பார்த்தவர்கள் அனைவரும் நட்சத்திரங்கள் பற்றி பேசுகிறார்கள், அவர்களை கையாண்ட விதம் பற்றி பேசுகிறார்கள், படம் அனைவருக்கும் பிடித்திருக்கிறது. நிச்சயம் ரசிகர்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறோம்.” என்றார்.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் செந்தூர் பாண்டியனுக்கு இது தான் முதல் படம். ஆனால், நாயகி ப்ரீத்தி கரன் பிரபல மாடல் மற்றும் முறையாக நடிப்பு பயின்றவர் மட்டும் இன்றி ஏற்கனவே ‘கட்டுமரம்’ என்ற படத்தில் நடித்திருப்பதோடு, ‘தங்கலான்’ மற்றும் ‘ட்ரைன்’ படங்களிலும் நடித்து வருகிறாராம். ஆனால், அவர் இந்த படத்திற்கான கதாபாத்திரத்தில் தன்னை பொருத்திக்கொள்ள ஆரம்பத்தில் சிரமப்பட்டாலும், பிறகு கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறாராம்.
நாயகனாக நடித்திருக்கும் செந்தூர் பாண்டியன் ஆடிசன் மூலம் தேர்வானாலும், இந்த படத்திற்காக பயிற்சிகள் மேற்கொண்டு நடித்திருக்கிறார். அவரது நண்பராக முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் சுரேஷ் மதியழகன் என்பவரும் ஆடிசன் மூலம் தேர்வாகி அசத்தலாக நடித்திருக்கிறாராம். இவர்கள் மட்டும் இன்றி மற்ற வேடங்களில் நடித்திருக்கும் இளைஞர்கள் அனைவரும் புதியவர்கள் என்றாலும், படம் பார்ப்பவர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்திருக்கிறார்களாம்.
கெளபாய்ஸ், நாடோடி வீரர்கள், கோஸ்ட்பஸ்டர்ஸ் அல்லது புதையல் வேட்டையாடுபவர்கள் பற்றிய படங்களே பொதுவாக சாகச படங்களாகக் கருதப்படுகின்றன...
மறைந்த நடிகர் முரளியின் இளைய மகனும், அதர்வா முரளியின் சகோதரருமான ஆகாஷ் முரளி கதாநாயகனாக அறிமுகமாகவுள்ள திரைப்படம் ‘நேசிப்பாயா’...
‘டிஎன்ஏ' படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்ததில் இருந்தே அதன் மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பு வைத்திருக்கின்றனர்...