Latest News :

பா.இரஞ்சித்துடன் கைகோர்த்த முன்னணி நிறுவனம்! - எந்த படத்திற்காக தெரியுமா?
Tuesday March-12 2024

இந்திய அளவில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான அப்ளாஸ் எண்டர்டெயின்மெண்ட் தமிழ் சினிமாவில் தடம் படித்த முதல் படத்திலே மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. ஆம், கடந்த ஆண்டு திரையரங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘போர் தொழில்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் தனது தயாரிப்பு பணியை தொடங்கிய அப்ளாஸ் நிறுவனம் தற்போது இயக்குநர் பா.இஞ்சித்துடன் கைகோர்த்துள்ளது. பா. ரஞ்சித் மற்றும் தயாரிப்பாளர் அதிதி ஆனந்த்தின் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து பல திரைப்படங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது. 

 

இதன் தொடக்கமாக இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம் நடிக்கும் விளையாட்டை மையப்படுத்திய திரைப்படத்தை பா.இரஞ்சித்துடன் இணைந்து அப்ளாஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கான அறிவிப்பு இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

 

படைப்பாளி மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத இந்தத் திரைப்படத்தின் பணிகள் 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கியது. கபடி விளையாட்டை மையப்படுத்திய படைப்பாக உருவாகிறது. அனைத்து தரப்பிலும் எதிரிகள் சூழ்ந்த இந்த உலகத்தில் துணிச்சலையும், தைரியத்தையும் வாழ்வியலாக கொண்ட இளைஞனின் கதையை சொல்கிறது இந்த திரைப்படம். இந்தக் கதை- ஒரு மனிதன் விளையாட்டையே துப்பாக்கி போன்ற வலிமை மிக்க ஆயுதமாக ஏந்தி, வன்முறையற்ற.. அமைதியான.. மரணமற்ற வாழ்க்கையை வாழ்வதற்காக போராடும் போராட்டத்தை விவரிக்கிறது.

 

தனித்துவம் மிக்க நட்சத்திர நடிகர் சீயான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக 'பிரேமம்', 'குரூப்' ஆகிய படங்களில் நடித்து பிரபலமான நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார்.  

 

திரைப்படத்தைப் பற்றி அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சமீர் நாயர் கூறுகையில், “நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடனான எங்களது ஒத்துழைப்பு.. அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட்டுகான ஒரு அற்புதமான அத்தியாயத்தை குறிக்கிறது. இந்தக் கூட்டணி ஒரு அசாதாரணமான விளையாட்டை மையப்படுத்திய திரைப்படத்துடன் தொடங்கி, தாக்கத்தை ஏற்படுத்தும் கதைகளை தேர்வு செய்வதில் எங்களது அர்ப்பணிப்பை சுட்டிக்காட்டுகிறது. இயக்குநர் மாரி செல்வராஜின் திறமை மற்றும் திறன் மிகு தொழில்நுட்ப குழுவினரின் ஆதரவுடன் தென்னிந்திய சினிமாவில் ஒரு குறிப்பிடத்தக்க இடத்தை உருவாக்குவதற்கான அடித்தளத்தையும் அமைக்கிறது.” என்றார்.

 

நீலம் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர்கள் பா.ரஞ்சித் மற்றும் அதிதி ஆனந்த் கூறுகையில், “’பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு நீலம் ஸ்டுடியோஸ், மாரி செல்வராஜுடனும் இணைந்து பணியாற்றுவது உற்சாகமாக இருக்கிறது. அர்த்தமுள்ள சினிமா மற்றும் உண்மையான கதைகளுக்கான எங்களின் அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டு காட்டும் வகையில் அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட்டுடன் இந்தப் பயணத்தை மேற்கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.” என்றனர்.

 

இயக்குநர் மாரி செல்வராஜ் கூறுகையில், “பரியேறும் பெருமாள்- பா ரஞ்சித் அண்ணாவுடன் நான் இணைந்த முதல் திரைப்படம். இப்படம் இவ்வளவு உயரம் எட்டியதற்கு பா. ரஞ்சித்தும் ஒரு முக்கிய காரணம். என்னுடைய அடுத்தடுத்த படங்களுக்கு அது ஒரு படிக்கல்லாக அமைந்தது. அவருடன் மீண்டும் ஒரு முறை இணைந்து பணியாற்றுவது உற்சாகத்தை அளிக்கிறது. இப்போது என்னுடைய ஐந்தாவது படத்திற்காக அவருடனும், மற்றொரு வலிமையான கூட்டாளியான அப்ளாஸ் என்டர்டெய்ன்மெண்ட்டுடனும் இணைந்திருக்கிறேன். மீண்டும் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அதிதி ஆனந்த் ஆகியோருடன் இணைந்து பணியாற்றுவதில் மட்டற்ற மகிழ்ச்சி. பரியேறும் பெருமாள் முதல் என்னுடைய அனைத்து படைப்புகளையும் அதிதி ஆனந்த் தொடர்ந்து கண்காணித்து வருகிறார். அவர் ஒரு நல்ல தோழியும் கூட. மேலும் அவருடைய உள்ளார்ந்த ஆதரவுடன் இந்தத் திரைப்படத்தில் இணைந்து பணியாற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த திரைப்படம் கபடி என்னும் விளையாட்டின் வேர்களைத் தேடிச் செல்லும் ஒரு ஸ்போர்ட்ஸ் டிராமாவாக இருக்கும். மேலும் துருவுடன் இணைந்து பணியாற்றுவது என்பதும் மகிழ்ச்சி. இந்தத் திரைப்படத்தில் வலிமையாகவும்.. திறமையான இளைஞனாகவும் துருவ் விக்ரம் வித்தியாசமான கோணத்தில் திரையில் தோன்றுவார். இந்த திரைப்படம் நம் அனைவருக்கும் ஒரு முக்கியமான மைல் கல்லாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.” என்றார்.

Related News

9590

’மாஸ்க்’ பட நிகழ்வில் நடிகை ஆண்ட்ரியா அழகை வர்ணித்த விஜய் சேதுபதி!
Monday November-10 2025

தி ஷோ மஸ்ட் கோ ஆன் மற்றும் பிளாக் மெட்ராஸ் பிலிம்ஸ் (The Show Must Go On & Black Madras Films) நிறுவனங்கள் சார்பில், ஆண்ட்ரியா ஜெரேமியா , எஸ்...

’வெள்ளகுதிர’ இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா
Sunday November-09 2025

நிஜம் சினிமா தயாரிப்பில் சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கத்தில் ஹரிஷ் ஓரி, அபிராமி போஸ் நடிப்பில்  உருவாகியுள்ள படம் ‘வெள்ளகுதிர’...

குடும்ப படம் தான், ஆனால் பல ஜானர்களின் பாதிப்பு இருக்கும் - ‘மிடில் கிளாஸ்’ படம் பற்றி இயக்குநர் கிஷோர் எம்.ராமலிங்கம்
Sunday November-09 2025

அக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி மற்றும் குட் ஷோ (Axess Film Factory & Good Show) பட நிறுவனங்கள் சார்பில் தேவ், கேவி துரை இணைந்து தயாரிக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...

Recent Gallery