Latest News :

‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ அனைத்து வயதினரையும் பாதிக்கும் படமாக இருக்கும் - இயக்குநர் அனந்த் நம்பிக்கை
Wednesday June-12 2024

எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி வெளியான சில படங்கள் ரசிகர்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி மிகப்பெரிய வெற்றி பெறுவதுண்டு. அந்த வரிசையில், ‘சென்னை 600028, ‘அட்ட கத்தி’ உள்ளிட்ட படங்களை சொல்லலாம். இப்படிப்பட்ட படங்கள் பெரும்பாலும் புதிய இயக்குநர், புதிய தயாரிப்பாளர் மற்றும் புதிய நட்சத்திரங்களின் கூட்டு முயற்சியினால் உருவான படங்களாகவே இருக்கும். அந்த வகையில், ரசிகர்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு திரைப்படமாக உருவாகியிருக்கிறது ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’. இந்த படமும் முழுக்க முழுக்க புதிய முகங்களின் முயற்சியினால் உருவாகி தற்போது கோலிவுட்டின் பிரபல முகங்கள் அனைவரிடத்திலும் பாராட்டு பெற்று வருகிறது.

 

’மீசையை முறுக்கு’ திரைப்படத்தில் ஆதியின் தம்பி கதாபாத்திரத்தில் நடித்த அனந்த், இயக்குநராகவும், கதாநாயகனாகவும் அறிமுகமாகும் படம் ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’. மசாலா பாப்கார்ன் மற்றும் ஒயிட் ஃபெதர் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் ஐஸ்வர்யா.எம் மற்றும் சுதா.ஆர் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு வழங்குவதோடு, ரசிகர்களுக்கு தான் வழங்கும் பரிசு என்றும் இப்படத்தை குறிப்பிட்டுள்ளார். காரணம், அவர் இயக்கிய முதல் படமான ‘சென்னை 600028’ ரசிகர்களிடம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியதோ அதைவிட அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இப்படத்தின் கதைக்களம் அமைந்திருப்பது தான்.

 

இதில், அனந்த் கதையின் மையக்கதாபாத்திரமாக நடித்திருந்தாலும், ஆர்ஜே விஜய், பவானி ஸ்ரீ, இர்பான், வில்ஸ்பேட், தேவ், மோனிகா, கே.பி.ஒய் பாலா, ஆர்ஜே ஆனந்தி, சபரிஷ், குகன், ஃபென்னி ஆலிவர், தர்மா, வினோத் உள்ளிட்ட பல புதுமுகங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் லீலா, குமரவேல், விஷாலினி போன்ற அனுபவம் வாய்ந்த நடிகர்களும் நடித்திருக்க, தயாரிப்பாளர் ஐஸ்வர்யா மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

 

இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று, படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், விரைவில் வெளியாக இருக்கும் படத்தின் டிரைலர் எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரிக்கச் செய்யும், என்று படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

 

இந்த நிலையில், தயாரிப்பாளர் ஐஸ்வர்யா, இயக்குநர் மற்றும் நடிகர் அனந்த், இசையமைப்பாளர் ஏ.எச்.காஷீப் உள்ளிட்ட படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து படம் பற்றிய தகவல்களை பகிர்ந்துக்கொண்டார்கள்.

 

படம் குறித்து இயக்குநரும் நடிகருமான அனந்த் கூறுகையில், “பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருக்கிறேன். மீசையை முறுக்கு படத்தில் ஆதியின் தம்பியாக நடித்த வேடம் எனக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்தது. நாளைய இயக்குநர்கள் ஐந்தாவது சீசனில் கலந்துக்கொண்டு இறுதிப் போட்டி வரை பயணித்திருக்கிறேன். நண்பன் என்ற குறும்படத்திற்காக விகடன் விருது பெற்றேன். பிறகு என் வாழ்க்கையில் ஒரு தரமான சம்பவம் நடந்தது. என் வாழ்க்கையில் மட்டும் அல்ல, இது பலரது வாழ்க்கையில் நடந்திருக்கும். என் நண்பனுக்கு நடந்த அந்த சம்பவம் பற்றி எழுத ஆரம்பித்தேன், அது தான் இந்த கதை. இந்த கதை அனைவரின் வாழ்விலும் நடந்திருக்கும். இந்த கதையை கேட்டவர்கள் அனைவரும், ”இது என் வாழ்க்கையில் நடந்த சம்பவம் போல இருக்கே” என்று சொன்னார்கள்.

 

ஒரு நல்ல கதை தனக்கானதை தானாகவே தேடிக்கொள்ளும் என்று சொல்வார்கள், சென்னை 600028 போன்ற படங்களுக்கு அப்படி தான் நடந்ததாக சொன்னார்கள், அதுபோல தான் இந்த படத்திற்கான அனைத்து விசயங்களும் தானாகவே நடந்தது. வெங்கட் பிரபு சாரிடம் கதை சொன்ன போது, ”‘சென்னை 600028’ மூன்றாம் பாகத்திற்கான ஐடியாவாக இருக்கே” என்று சொன்னது மட்டும் இன்றி, தன்னுடைய பங்களிப்பும் இதில் இருக்க வேண்டும் என்பதற்காக, இந்த படத்தை அவர் வழங்குகிறார்.

 

இது ஏதோ நண்பர்களுக்கான படம் என்பதால் இளைஞர்களுக்கான படம் என்று நினைக்க வேண்டாம். 60 வயதுடையவர்கள் கூட இந்த கதையுடன் தங்களை தொடர்புப்படுத்திக் கொள்வார்கள், அவர்கள் வாழ்க்கையிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருக்கும். அதனால், இந்த கதை அனைத்து வயதினரையும் நிச்சயம் பாதிக்கும். நீங்கள் பலரை பார்த்திருப்பீர்கள், அவர்களுடைய பேச்சை கேட்டிருப்பீர்கள். நான் பேசுவது கொஞ்சம் அதிகம் என்று உங்களுக்கு தோன்றலாம், ஆனால் படத்தை பார்க்கும் போது நான் பேசியது அனைத்தும் சரி என்று உங்களுக்கு புரியும்.  ‘சென்னை 600028’, ‘அட்ட கத்தி’ போன்ற படங்கள் எப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியதோ அதுபோல் ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ படமும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.” என்றார்.

 

தயாரிப்பாளர் ஐஸ்வர்யா.எம் படம் பற்றி கூறுகையில், “ஊடகத்துறை சம்மந்தமாக படித்து, அத்துறையில் பல தளங்களில் பணியாற்றினேன். பிறகு என் நண்பர் வெங்கட் பிரபு ஆரம்பித்த பிளாக் டிக்கெட் நிறுவனத்தின் பணியாற்றினேன். அதன் பிறகு என்ன செய்யலாம் என்றால் தயாரிப்பு தான், ஆனால் திரைப்பட தயாரிப்பு சாதாரணமல்ல, அதில் எப்படிப்பட்ட சிக்கல்கள் இருக்கிறது என்று எனக்கு புரிய வைத்தார்கள். அந்த சமயத்தில் தான் என்னை நடிப்பதற்காக அனந்த் அனுகினார். நான் விளம்பர படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால், திரைப்படத்தில் பெரிய கதாபாத்திரம் என்பது எனக்கு புதிது தான். அதனால், அவரிடம் என்னை தான் அந்த வேடத்தில் நடிக்க வைக்க வேண்டுமா?  நன்றாக யோசித்து சொல்லுங்கள், என்றேன். அவர் சென்ற பிறகு எனக்கு போன் எதுவும் வரவில்லை. அதே சமயம், அவர் சொன்ன கதை எனக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. நம் வாழ்க்கைக்கு நெருக்கமான கதையாக இருக்கிறதே, என்று தோன்றியது. அப்போது தான் இப்படி ஒரு கதை மூலமாகத்தான் தயாரிப்பாளராக வேண்டும் என்று முடிவு செய்தேன். இயக்குநர் சொன்னது போல் படம் பார்ப்பவர்கள் அனைவரும் கதையோடு தங்களை தொடர்புபடுத்திக் கொள்வதோடு, படம் சினிமாத்தமாக இன்றி, ஒரு எதார்த்தமான வாழ்வியலாக இருக்கும்.” என்றார்.

 

Nanban Oruvan Vantha Piragu

 

நடிகர் ஆர்ஜே விஜய் படத்தில் நடித்தது பற்றி கூறுகையில், “இந்த படத்தில் நான் இரண்டு பாடல்கள் எழுதியிருக்கிறேன். அதில் ஒரு பாடலை தனுஷ் சாரும், மற்றொன்றை ஜி.வி.பிரகாஷ் சாரும் பாடியிருக்கிறார்கள். இது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுத்தது. பாடல் எழுதுவதற்காக தான் இயக்குநர் என்னை அனுகினார். பிறகு கதை பற்றி என்னிடம் சொன்ன போது, நானும் இதில் நடிக்கலாமே, அதற்கான வாய்ப்பு இருக்கிறதே என்று தோன்றியது. ஆனால், அதை எப்படி கேட்பது என்று தயங்கினே. ஆனால், இயக்குநரும் என்னை நடிக்க வைக்க வேண்டும் என்று விரும்பினார். ஒரு வழியாக இருவரும் எங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தி விட்டோம், அப்படி தான் இந்த படத்தில் நான் நடிக்க வந்தேன். இயக்குநர் சொன்னது போல் இந்த படம் அனைத்து வயதினருக்குமான படம். இந்த கதை எல்லோருடைய வாழ்விலும் நடந்திருக்கும். கதையை அனந்த் மிக அழகாக எழுதியிருக்கிறார்.” என்றார்.

 

இசையமைப்பாளர் ஏ.எச்.காஷீப் கூறுகையில், “’காற்றின் மொழி’ உள்ளிட்ட  படங்களில் பணியாற்றிய பிறகு நல்ல கதையில் பணியாற்ற வேண்டும் என்று நினைத்தேன். அப்போது தான் இந்த கதை என்னிடம் வந்தது. அனந்த் கதை சொன்ன போது, நான் இசை பற்றி யோசிக்க ஆரம்பித்து விட்டேன். நான் ஏ.ஆர்.ரஹ்மான் சாரிடம் தான் பணியாற்றி வருகிறேன். அதனால், இந்த கதை பற்றி அவரிடம் சொல்லி, “முஸ்தபா...” பாடலை பயன்படுத்த உள்ளோம் என்பதை சொன்னதோடு, உங்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த படம் இருக்கும், என்றேன். அவர் எங்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருப்பதோடு, படத்திற்கான அடையாளமாக மாறியிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.” என்றார்.

 

நடிகர் தேவ் கூறுகையில், “திரைப்பட தயாரிப்பில் பணியாற்றி வந்தாலும் நடிப்பதில் தான் எனக்கு ஆர்வம். சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருக்கிறேன். இந்த கதையில் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறேன். படம் நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும்.” என்றார்.

 

யூடியுப் பிரபலம் வில்ஸ்பேட் கூறுகையில், “நான் மொபைல்போன் மூலம் வீடியோ எடுத்து வெளியிட்டு வருவேன். எனக்கும் நடிக்க வேண்டும் என்பது தான் ஆசை. செல்போனியில் வீடியோ எடுத்து வெளியிடும் நமக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்றெல்லாம் யோசித்தேன். அப்போது தான் அனந்த் புரோவிடம் இருந்து அழைப்பு வந்தது. உங்க வீடியோ நன்றாக இருக்கிறது, இப்படி ஒரு படம் பண்ண போறோம், உங்களுக்கு ஒரு வேடம் இருக்கிறது, என்று அழைத்தார். எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு கொடுத்த அவருக்கு நன்றி. படம் சிறப்பாக வந்திருக்கிறது. அதில் நடிக்கும் போதே நாங்கள் நிஜமான நண்பர்களாக தான் இருந்தோம். படமும் அனைவருக்கும் பிடிக்கும்.” என்றார்.

 

அனந்த் கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்திற்கு அனந்த் மற்றும் ராஜேஷ்.வி திரைக்கதை எழுதியிருக்கிறார்கள். தமிழ் செல்வன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஃபென்னி ஆலிவர் படத்தொகுப்பு செய்ய, ராகுல் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். 

 

விரைவில் இப்படத்தின் டிரைலரை வெளியிட இருக்கும் படக்குழு அதன் பிறகு படத்தின் வெளியீட்டு தேதி உள்ளிட்ட விவரங்களை அறிவிக்க உள்ளது.

Related News

9815

கவனம் ஈர்க்கும் ‘மெட்ராஸ்காரன்’ பட டீசர்!
Thursday July-25 2024

எஸ்.ஆர்.புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பி...

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்தின் முதல் பார்வை மற்றும் தலைப்பு வெளியானது!
Thursday July-25 2024

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், ‘லவ் டுடே’ புகழ் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் படம் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK)...

அகரம் மற்றும் சிவகுமார் கல்வி அறக்கட்டளை 45-ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா!
Thursday July-25 2024

திரைக்கலைஞர் சிவகுமார் அவர்கள், தனது கல்வி அறக்கட்டளை மூலம் கடந்த 44 ஆண்டுகளாக, ப்ளஸ்-டூ தேர்வில் நல்ல மதிப்பெண்களை எடுத்த, மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி கௌரவித்து வருகிறார்...