Latest News :

கலகலப்பு-2 விமர்சனம்

236a8fc2bd724868c1e67ac2ad86de59.jpg

Casting : Jiiva, Jai, Shiva, Nikki Galrani, Catherine Tresa

Directed By : Sundar.C

Music By : Hiphop Tamizha

Produced By : Kushboo

 

வடிவேலு, விவேக், சந்தானம் என்று யார் போனால் எனக்கென்ன, வந்தால் எனக்கென்ன, என் படத்தில் காமெடிக்கு பஞ்சமிருக்காது, என்று தனது ஒவ்வொரு படத்திலும் சொல்லாமல் செயலில் காட்டும் சுந்தர்.சி, இயக்கத்தில் வெளியாகியிருக்கும் இந்த ‘கலகலப்பு-2’ எப்படி என்பதை பார்ப்போம்.

 

காசியில் மேன்சன் வைத்திருக்கும் ஜீவா, தனது தங்கை மற்றும் பாட்டியுடன் அதே மேன்சனில் வசித்து வருகிறார். மேன்சனை டெவலப் செய்வதற்காக வங்கியில் கடன் வாங்கும் ஜீவா, அந்த பணத்தை போர்ஜரி ஒருவரிடம் பரிகொடுத்துவிட்டு, மேன்சனை டெவலப் செய்ய என்ன பண்ணலாம் என்று யோசித்துக் கொண்டிருக்க, அந்த மேன்சனுக்கு உரிமையாளரான ஜெய், தனது குடும்ப கஷ்ட்டத்திற்காக மேன்சனை விற்கலாம் என்ற முடிவோடு காசிக்கு வருகிறார். ஜெய்யின் கஷ்ட்ட நிலையை புரிந்துக்கொள்ளும் ஜீவா, மேன்சனை அவருக்கு கொடுக்க முன் வர, ஜீவாவின் கஷ்ட்ட நிலையை புரிந்துக்கொள்ளும் ஜெய், ஜீவாவுடன் அந்த சொத்தை பகிர்ந்துக்கொள்ள முடிவு செய்கிறார்.

 

இதற்கிடையே, ஜீவாவுக்கு கேத்ரின் தெரசாவும்,  ஜெய்க்கு நிக்கி கல்ராணி என்று ஜோடி கிடைத்துவிடுவதோடு, தங்கள் பணத்தை அபேஷ் பண்ணிய தில்லாலங்கடியான சிவா எங்கிருக்கிறார் என்பதும் தெரிய வருகிறது. அவரை தேடி காரைக்குடிக்கு செல்பவர்கள், சிவாவை பிடித்து தங்களது பணத்தை வசூல் செய்ய முயற்சிக்க, அவர்களுக்கு சிவா பெரிய ஆஃபர் ஒன்றை கொடுக்க, அதை செய்து முடிப்பதில் ஈடுபடும் ஜெய் - ஜீவா என்ன ஆனார்கள், அவர்களது காதல் ஜெயித்தது போல, கஷ்ட்டமும் தீர்ந்ததா இல்லையா என்பது தான் ‘கலகலப்பு-2’ படத்தின் மீதைக்கதை.

 

‘கலகலப்பு’ என்ற படத்தின் மூலம் கவலைகள் மறந்து மக்களை சிரிக்க வைத்த இயக்குநர் சுந்தர்.சி, இந்த ‘கலகலப்பு-2’ வில் நம்மையும் மறந்து சிரிக்க வைக்கிறார். சுந்தர்.சி-ன் படங்களில் காட்சிக்கு காட்சி காமெடி இருக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான், ஆனால் இந்த படத்தில் கூடவே பிரம்மாண்டத்தையும் புகுத்தி நம்மை வாய் பிளக்க வைத்திருக்கிறார்.

 

காசியில் பயணிக்கும் முதல் பாதி காமெடியோடு கலர் புல்லாகவும் நகர்கிறது. அதிலும், “ஓகே...ஒகே...” பாடல் படமாக்கப்பட்ட விதம் அசத்தலாக இருக்கிறது.

 

எந்த நடிகராக இருந்தாலும், அவர்களிடம் இருக்கும் நகைச்சுவை எசன்ஸை வெளியே எடுத்துவிடும் இயக்குநர் சுந்தர்.சி, ஜீவா மற்றும் ஜெய் இருவரையும் ரசிக்க வைத்திருக்கிறார். அதிலும், ஜீவாவும், கேத்ரின் தெராசாவும் சதீஷை காதலிக்க வைப்பதற்காக செய்யும் முயற்சியின் போது பேசும் டபுள் மீனிங் வசனங்களால் மொத்த திரையரங்கமே குலுங்கி குலுங்கி சிரிக்கின்றது.

 

ஜீவா, ஜெய் ஒரு பக்கம் இருக்க, சாமியாராக வரும் யோகி பாபுவும், அவரது உதவியாளரான சிங்கம்  புலி இருவரும் வில்லன் கோஷ்ட்டியினரிடம் சிக்கிக்கொண்டு சின்னாபின்னாமாகும் காட்சிகள் அத்தனையும் காமெடி சரவெடி தான். கிரிக்கெட் ஆடும்போது யோகி பாபுவை ஸ்டெம்பாக பயன்படுத்தும் காட்சியும், அம்மாவாசை என்றால் வெறியாட்டம் போடும் போலீஸ் கான்ஸ்டபிள் ராதாரவியை படுத்தி எடுக்கும் காட்சிகளும் சீட்டில் இருந்து எழுந்து நின்று சிரிக்க வைக்கிறது.

 

நிக்கி கல்ராணி, கேத்ரின் தெர்சா என்று இரண்டு ஹீரோயின்களும் ஆபாசம் இல்லாத கவர்ச்சியால் ரசிகர்களை கவர்வதோடு, பாடல் காட்சிகளில் நம்மை பரவசப்படுத்துகிறார்கள்.

 

கலகலப்பு முதல் பாகத்தில் ஹீரோவாக வந்த மிர்ச்சி சிவா, இந்த இரண்டாம் பாகத்தில் ஆண்டி ஹீரோவாக வந்தாலும், அதே திருடன் வேடத்தில் தனது அலப்பறையால் அமர்க்களப்படுத்துகிறார். ரோபோ சங்கர், விடிவி கணேஷ், மனோ பாலா என்று படத்தில் ஏகப்பட்ட நடிகர்கள் இருந்தாலும், ஒவ்வொருவரும் தங்களது போஷன் வரும் போது, புல் மீல்ஸ் சாப்பிட்டது போல, ரசிகர்களை தங்களது காமெடியால் திருப்தி படுத்துகிறார்கள். ஒரு சில காட்சிகளில் சிறிது நேரம் வரும் கதாபாத்திரங்கள் கூட, நம்மை சிரிக்க வைப்பது படத்தின் சிறப்பாக உள்ளது. 

 

’கூட இருந்த குமாரு’ என்ற வேடத்தில் நடித்திருப்பவரும், ரோபோ சங்கரின் அக்கா வேடத்தில் நடித்த நடிகையும் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே வந்தாலும், அவர்களும் தங்களது பங்குக்கு ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார்கள். இப்படி படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களிடமும் இருக்கும் நகைச்சுவையை வெளிக்காட்டியிருக்கும் சுந்தர்.சி, ரசிகர்களின் பல்ஸ் அறிந்து ஒவ்வொரு காட்சியையும் படமாக்கியிருக்கிறார்.

 

சுந்தர்.சி படத்தில் வரும், பணம் கை மாறுவது, வைரம் திருடுவது, பிறகு அதை தொடர்ந்து நகரும் கதாபாத்திரங்கள், இறுதியில் நட்சத்திரங்களுக்கு இடையே நடக்கும் காமெடி சேசிங், என அனைத்தும் இந்த படத்திலும் உண்டு, என்றாலும் அவை அனைத்தும் நம்மை எந்த இடத்திலும் போராடிக்காமல் சிரிக்க வைப்பதோடு, ரசிக்கவும் வைக்கிறது. அதற்கு காரணம், யு.கே.செந்தில்குமாரின் ஒளிப்பதிவும், ஹிப் ஹாப் தமிழா ஆதியின் இசையும் தான்.

 

ஒரு சில படங்களில் மட்டுமே தமிழ் ரசிகர்கள் பார்த்திருக்கும் காசியை கலர்புல்லாக காட்டியிருக்கும் ஒளிப்பதிவாளர் யு.கே.செந்தில்குமார், காரைக்குடியை கூட கலர்புல்லாக காட்டி முழு படத்தின் ஒளிப்பதிவையும் ஆல்பமாக பிரஸன் பண்ணியிருக்கிறார். 

 

கதை, நடிகர்கள் பர்பாமன்ஸ், ஏற்கனவே பல படங்களில் பார்த்த காட்சியோ, என்று எதைப் பற்றியும் ரசிகர்களை யோசிக்க வைக்காமல், காட்சிக்கு காட்சி சிரிக்க வைத்திருக்கும் இயக்குநர் சுந்தர்.சி, எப்படிப்பட்டவர்களையும் சிரிக்க வைக்கும் மாயாஜால வித்தையை கற்று வைத்திருப்பார் போலிருக்கு. ஒரு படத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ரசிகர்களை சிரிக்க வைக்கலாம், ஆனால் படம் முழுவதும் சிரிக்க வைக்க முடியுமா? என்றால் அது சுந்தர்.சி-யால் மட்டும் முடியும், என்பதை நிரூபித்திருக்கிறது இந்த ‘கலகலப்பு-2’

 

மொத்தத்தில், எப்படிப்பட்ட சோகத்தையும் மறந்து சிரித்து கொண்டாட வேண்டும் என்றால், அதற்கான ஒரு படமாக இந்த ‘கலகலப்பு-2’ இருக்கும்.

 

ஜெ.சுகுமார்