Latest News :

அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகன் விமர்சனம்

472de94c7cd57b2ceff0dafb900afd89.jpg

Casting : Nagarjuna, Anushka, Pragya Jaiswal, Jagapathi Babu

Directed By : K Raghavendra Rao

Music By : Maragadamani

Produced By : Joshika Films

 

ஒரு நிமிடம் கூட முழுசாக பார்க்க முடியாத திருப்பதி ஏழுமலையானை இரண்டரை மணி நேரம் பார்த்து ரசிக்கும்படியான முயற்சியாக உருவாகியிருக்கும் படம் தான் இந்த ‘அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகன்’.

 

திருப்பதி எழுமலையான் கோவில் உருவானது எப்படி என்பதை விவரிக்கும் இப்படம், ஏழுமலையானின் அருமை பெறுமையை சொல்வதோடு, அவரது தீவிர பக்தரான ராமர் என்பவரின் அருமை பெருமைகளையும் சொல்கிறது. ஏழுமலையான் பக்தராக நாகஜுர்னா நடிக்க, மற்றொரு பக்தையாக அனுஷ்கா நடித்திருக்கிறார்.

 

ஏழுமலையானுக்கு செய்யப்படும் அபிஷேங்கள் தோன்றிய விதம், அவை எதனால் செய்யப்படுகிறது, அவரது திருக்கல்யாணம் போன்ற அனைத்துக்கும் அர்த்தம் சொல்லும் இந்த ஆன்மீகப்படத்தில் நாகர்ஜுனா போன்ற மாஸ் ஹீரோ நடித்திருப்பது தமிழ் சினிமாவுக்கு ஆச்சரியமான விஷயம் தான் என்றாலும், தெலுங்குக்கு இது புதிதல்ல.

 

தான் ஏற்ற கதாபாத்திரத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் ஏழுமலையானின் பக்தராக வலம் வந்திருக்கும் நாகர்ஜுனா, அனுஷ்கா போன்றோர் தங்களது மீதிருந்த நட்சத்திர இமேஜை ஓரம் கட்டிவிட்டு கதாபாத்திரங்களாக மாறியிருப்பது படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

 

நண்பரை போல தனது பக்தரான நாகர்ஜுனாவை பார்க்க வரும் ஏழுமலையான், அவரிடம் பகடை விளையாடி தனது ஆபரணங்களை தோற்றுவிடுவது, பிறகு அதே ஆபரணங்களால் நாகர்ஜுனா திருடன் என்ற முத்திரையோடு நிற்கும்போது அவரை கைவிடுவது. அதனால் தனது பக்தருக்கு ஏற்படும் சோதனை, அதில் இருந்து அவரை மீட்டு எடுத்து தனது பக்தரின் புகழை மக்களிடம் கொண்டு சேர்ப்பது, என்று ’கடவுள் - பக்தர்’ கான்சப்ட் படங்களின் ரெகுலர் பார்மட் படம் தான் இது, என்றாலும், ஏழுமலையானின் பேக் ரவுண்டை ரொம்ப டீட்டய்லாக விவரித்திருக்கிறார்கள்.

 

தனது இசையால் பக்தியை பரவவிட்டிருக்கும் இசையமைப்பாளர் மரகதமணி, சில பாடல் காட்சிகளில் காதலையும் பரவிடுகிறார். அவரது பாணியை பின் தொடரும் ஒளிப்பதிவாளர் எஸ்.கோபால் ரெட்டியும், அனுஷ்காவை பக்திமானாக காட்டுவதிலும், அதே அனுஷ்காவை அம்சமாக காட்டுவதிலும், தனது வேலையை காட்டியிருக்கிறார். 

 

ஒரு காட்சியில் ஆன்மீகம் வந்தாலே அதை கிண்டல் கேளி செய்யும் தற்போதைய தமிழ் சினிமா டிரெண்டில், இப்படி ஒரு படத்தை கே.ராகவேந்திர ராவ் இயக்கியிருக்கிறார் என்றால் அது தமிழ் சினிமா ரசிகர்கள் மீது வைத்த நம்பிக்கை அல்ல, பாலாஜி ரசிகர்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை என்பது படத்தின் அனைத்துக் காட்சிகளிலும் தெரிகிறது.

 

கடவுள் வராரு, பகடை விளையாட்ராரு, என்று பகுத்தறிவுக்கு எதிராக பல காட்சிகள் அல்ல படமே இருந்தாலும், இறுதியில் கண்ணுக்கு தெரியாத கடவுளை விட, கண்ணுக்கு தெரியும் பக்தர்கள் தான் கடவுளை விட மேலானவர்கள் என்ற விஷயத்தை இயக்குநர் ரொம்ப நாசுக்காக சொல்லியிருக்கிறார்.

 

மொத்தத்தில், ஜருகண்டி...கருகண்டி...என்ற சத்தத்தை கேட்பதற்காகவே திருப்பதிக்கு வந்தோமா!, என்று அப்செட்டாகும் ஏழுமலையான் பக்தர்களுக்கு இந்த படம் திருப்பதி லட்டு போல இனிப்புக்கு இனிப்பாகவும், பிரஷாதத்திற்கு பிரசாதமாகவும் இருக்கும்.

 

ஜெ.சுகுமார்