Latest News :

’தக் லைஃப்’ திரைப்பட விமர்சனம்

2733da7e64dfe7df24b50f17b4687589.jpg

Casting : Kamal Haasan, Silambarasan, Trisha Krishnan, Abhirami, Joju George, Nazar, Ashok Selvan, Bagavathi Perumal, Aishwarya Lakshmi

Directed By : Mani Ratnam

Music By : AR Rahman

Produced By : Raaj Kamal Films International, Madras Talkies, Red Giant Movies - Kamal Haasan, R. Mahendran, Mani Ratnam, Siva Ananth, Udhayanidhi Stalin

 

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கமல்ஹாசன் மற்றும் அவரது குழுவினர் டெல்லியில் தாதாக்களாக வலம் வருகிறார்கள். அவர்களுக்கு ஒரு எதிரி. இரு தரப்புக்கும் இடையிலான மோதலில் அப்பாவி ஒருவர் கொல்லப்படுகிறார். அங்கிருக்கும் அவரது பிள்ளையை காப்பாற்றும் கமல் அந்த சம்பவத்தின் போது தொலைந்த சிறுவனின் தங்கையை கண்டுபிடித்து தருவதாக சத்தியம் செய்வதோடு, தன்னை போன்ற ஒரு தாதாவாகவும் சிறுவனை வளர்க்கிறார். அவர் தான் சிம்பு. 

 

இளம் வயதிலேயே தொழிலில் இவ்வளவு பெரிய ஆளாகிட்டானே..,என்று கமலே கொஞ்சம் பொறாமைப்படும் அளவுக்கு சிம்புவின் வளர்ச்சி இருக்கிறது. கமலை போல் மற்றவர்களுக்கும் சிம்பு மீது பொறாமை வருகிறது. இப்படி ஒருவர் மீது ஒருவருக்கு பொறாமையும், வன்மமும் ஏற்பட அதுவே கமலுக்கு எதிரான துரோகமாக வளர்ந்து நிற்கிறது. அந்த துரோகத்தினால் கமலின் சாம்ராஜ்யம் சரிந்ததா? அல்லது துரோகிகளை அவர் சாய்த்தாரா? என்பதை அழுத்தம் இல்லாத கதையோடும், அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகளோடும் சொல்வது தான் ‘தக் லைஃப்’.

 

இயக்குநர் மணிரத்னத்துடன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணைந்ததால் நாயகன் கமலை அல்லது அதை விட ஒரு மேலான கதாபாத்திரத்தில் கமல்ஹாசனை பார்க்கலாம் என்று எதிர்பார்த்த அவரது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்திருக்கிறது இந்த ராயர் சக்திவேல் கதாபாத்திரம். தனது வசன உச்சரிப்பு மற்றும் சிறு சிறு எக்ஸ்பிரஷன்கள் மூலம் ரசிகர்களை கமல்ஹாசன் திருப்திப்படுத்த முயற்சித்திருந்தாலும், இந்த படத்தில் அவருக்கான களம் சரியாக அமையவில்லை. 

 

கமல்ஹாசனால் வளர்க்கப்படும் சிலம்பரசனுக்கு போட்டி போட்டு நடக்க கூடிய வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. மாறாக ஆக்‌ஷன், திரிஷாவுடன் ஒன்சைடு ரொமான்ஸ் என்று தனது வேலையை சரியாக செய்திருக்கிறார்.

 

கதாநாயகர்களின் நாயகியாக நடித்திருக்கும் திரிஷா கொடுத்த வேலையை நிறைவாக செய்திருக்கிறார்.

 

கமல்ஹாசனின் மனைவியாக நடித்திருக்கும் அபிராமி, நாசர், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், பகவதி பெருமாள் உள்ளிட்ட படத்தில் நடித்திருக்கும் அனைவருக்கும் சிறிய வேலை என்றாலும் அதை நிறைவாக செய்திருக்கிறார்கள்.

 

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் “ஜிங்குஜா ஜிங்குஜா...” பாடல் மட்டுமே ஆட்டம் போட வைப்பதோடு முணுமுணுக்க வைக்கிறது. மற்ற பாடல்களை செவி கூட சேர்க்க மறுக்கிறது.

 

ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் மற்றும் அவரது குழுவினர் கடுமையாக உழைத்திருப்பது திரையில் தெரிகிறது. குறிப்பாக கார் சேசிங் காட்சிகள் மிரட்டலாக இருக்கிறது. ஸ்டண்ட் இயக்குநரும் பாராட்டுக்குரியவர்.

 

படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் என்னதான் காட்சிகளுக்கு கத்திரி போட்டாலும், சுவாரஸ்யம் இல்லாத திரைக்கதை மற்றும் பலம் இல்லாத கதாபாத்திர அமைப்புகளால் படம் பார்வையாளர்களிடம் ஒட்டாமல் பயணிக்கிறது.

 

மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் இணைந்து கதை எழுதியிருக்கிறார்கள். இப்படி ஒரு கதை எழுதவா இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்தார்கள்? என்ற கேள்வி எழுகிறது.

 

திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கும் மணிரத்னம், தாதாக்களின் வாழ்க்கையையும், அவர்கள் எதிர்கொள்ளும் துரோகங்களையும் மையமாக வைத்து திரைக்கதை அமைத்திருந்தாலும், அதை அழுத்தமாக சொல்ல தவறியிருக்கிறார். கமல்ஹாசன் மற்றும் சிலம்பரசன் இருவரை தவிர படத்தில் நடித்திருக்கும் எந்த நடிகர்களும், எத்தகைய பாதிப்பையும் ஏற்படுத்தாதது படத்தின் மிகப்பெரிய பலவீனம்.

 

படத்தில் ரசிக்கும்படியான அம்சங்கள் என்றால் ஒளிப்பதிவு மற்றும் ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைத்த விதத்தை சொல்லலாம். மற்றபடி, காணமல் போன தங்கை காவல்துறை அதிகாரியை திருமணம் செய்து கொள்வது, வளர்த்தவர் கட்டுப்பாட்டில் இருக்கும் பெண்ணை காதலிக்கும் இளைஞர் போன்றவை எல்லாம் மணிரத்னம் ஏற்கனவே அரைத்த மாவு மட்டுமே.

 

மொத்தத்தில், ‘தக் லைஃப்’ தறிகெட்ட பயணம்.

 

ரேட்டிங் 3/5

Recent Gallery