Casting : Siddarth, Sarath Kumar, Devayani, Yogi Babu, Meetha Raghunath, Chaithra
Directed By : Sri Ganesh
Music By : Amrit Ramnath
Produced By : Shanthi Talkies - Arun Viswa
மனைவி, ஒரு மகன், ஒரு மகள் என்று அளவான குடும்பம், குறைவான வருமானத்தோடு வாழும் சரத்குமார், சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அதே சமயம், தன்னைப் போல் தனது மகனின் வாழ்க்கை இருக்க கூடாது என்பதற்காக தனது சக்திக்கு மீறி மகனின் படிப்புக்கு செலவு செய்கிறார். வீடு வாங்கும் அவரது முயற்சி பல இடையூறுகளால் தொடர்ந்து தோல்வியில் முடிந்தாலும், தனது மகன் வெற்றி பெறுவார், என்ற நம்பிக்கையில் இருக்கிறார். ஆனால், அவரது மகன் சித்தார்த், படிப்பு மற்றும் பணி இரண்டிலும் சாதிக்க கூடிய அளவுக்கு அல்லாமல் சராசரி மனிதராக இருப்பதால், தந்தையின் நம்பிக்கையை காப்பாற்ற முடியாமல் திணறுகிறார்.
அப்பாவின் கனவு சொந்த வீடு கனவு, மகனின் கனவாக மாறினாலும், ஒட்டு மொத்த குடும்பத்தின் நிறைவேறாத கனவாகவே பயணிக்க, இறுதியில் என்னவானது? என்பதை நடுத்தர குடும்பத்தினர் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சவால்களோடு சொல்லியிருப்பது தான் ’3 பி.ஹெச்.கே’.
வாசுதேவன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சரத்குமார், அழுத்தமான வேடம் என்பதால் அளவாக நடித்திருப்பது பாராட்டுக்குரியதாக இருந்தாலும், படம் முழுவதுமே ஒருவித இறுக்கத்துடன் நடித்திருப்பது செயற்கைத்தனமாக இருக்கிறது. சொந்த வீடு, பொருளாதார முன்னேற்றம் போன்றவை குறித்து யோசிக்கும் அனைவரும் இப்படி தான் சோகமாகவும், அமைதியாகவும் இருப்பார்கள், என்ற மாயையை உருவாக்கியிருக்கும் சரத்குமாரின் நடிப்பு சில இடங்களில் சலிப்படைய வைக்கிறது.
சரத்குமாரின் மகனாக நடித்திருக்கும் சித்தார்த், குடும்பத்தின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியவில்லை என்ற ஏக்கத்தையும், தொடர் தோல்வியால் துவண்டு போவதையும் தனது நடிப்பில் நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார். பள்ளி மற்றும் கல்லூரி மாணவராக ஏற்றுக்கொள்ளும்படி அமைந்திருக்கும் அவரது திரை இருப்பு மற்றும் நடிப்பு படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.
சரத்குமாரின் மனைவியாக நடித்திருக்கும் தேவயானி, அதிகம் பேசவில்லை என்றாலும், தனது முக பாவனைகள் மற்றும் உடல் அசைவுகள் மூலமாகவே நடுத்தர குடும்ப தலைவிகளின் எதிர்பார்புகளை வெளிப்படுத்தியிருக்கிறார்.
சரத்குமாரின் மகளாக நடித்திருக்கும் மீதா ரகுநாத், சித்தார்த்தின் தோழியாக நடித்திருக்கும் சைத்ரா இருவரும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.
யோகி பாபு ஒரு சில காட்சிகளில் வந்தாலும் சிரிக்க வைக்கிறார்.
அம்ரித் ராம்நாத் இசையில் பாடல்கள் அனைத்தும் முனுமுனுக்க வைப்பதோடு, கதைக்களத்தை பிரதிபலிக்கும் வகையில் இருக்கிறது. பின்னணி இசை கதாபாத்திரங்களின் உள்ளுணர்வுகளை பார்வையாளர்களிடம் கடத்தும் வகையில் பயணித்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர்கள் தினேஷ் கிருஷ்ணன்.பி மற்றும் ஜித்தின் ஸ்டானிஸ்லாஸ் நடுத்தர குடும்பத்தினரின் வாழ்வியல், கதைக்களம் மற்றும் கதை மாந்தர்கள் என அனைத்தையும் மனதுக்கு நெருக்கமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
எளிமையான கதை என்றாலும், திரைக்கதையில் இருக்கும் உணர்வுகளையும், கதாபாத்திரங்களின் மன போராட்டங்களையும் பார்வையாளர்களிடம் கடத்தும் விதத்தில் காட்சிகளை சுவாரஸ்யமாக தொகுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் கணேஷ் சிவா.
எழுதி இயக்கியிருக்கும் ஸ்ரீ கணேஷ், சொந்த வீடு என்ற கருவை வைத்துக்கொண்டு, நடுத்தர குடும்பத்தினர் தங்களை தொடர்புபடுத்திக் கொள்ளும் திரைக்கதையை உணர்வுப்பூர்வமாக சொல்லியிருக்கிறார்.
சொந்த வீடு உள்ளிட்ட பொருளாதார ரீதியிலான முன்னேற்றத்தின் பயணத்திற்காக எதிர்கால வாழ்க்கையை நினைத்து, நிகழ்கால வாழ்க்கையை வாழாமல் இருப்பது தங்களை தாங்களே ஏமாற்றிக் கொள்ளும் செயல், என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இயக்குநர் ஸ்ரீ கணேஷ், ஒவ்வொரு மனிதர்களும் கடந்து போகும் கதையை, அவர்களுக்கான படமாக கொடுத்து யோசிக்க வைத்திருக்கிறார்.
மொத்தத்தில், ’3 பி.ஹெச்.கே’ கனவு மெய்ப்பட வைக்கும்.
ரேட்டிங் 3/5