Casting : Vemal, Jana, Poojitha Ponnada, Harshitha Bandlamuri, Joohi, RV.Udhayakuamar, Ravimariya, Singampuli, Pugazh, Lollusaba Saminathan, Madhumitha, Vaiyapuri, Mottai Rajendran, Kothandan
Directed By : S.Ezhil
Music By : Vidyasagar
Produced By : Trinity Creations - P.Ravichandran
போலீஸ் இன்ஸ்பெக்டரான விமல், குற்றவாளிகளுக்கு துணை நிற்பது, லஞ்சம் வாங்குவது, காவல் நிலையம் இருக்கும் இடத்திற்கு வாடகை கொடுக்காமல் ஏமாற்றுவது என்று காவல்துறையின் கலங்கமாக இருக்கிறார். அவரது நண்பரான ரவுடி ஜனா, அமைச்சர் மகனை கொலை செய்வதாக சவால் விடுகிறார். விமலின் கல்லூரி தோழியான பூஜிதா பொன்னடா போலீஸ் உதவி கமிஷ்னராக வருகிறார். அமைச்சர் மகனை பாதுகாக்கும் பொறுப்பு பூஜிதாவிடம் ஒப்படைக்கப்படுகிறது. அவர் விமல் தலைமையில் அமைச்சர் மகனுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்கிறார். ஆனால், அந்த பாதுகாப்பையும் மீறி சொன்னது போல் ஜனா அவரை கொலை செய்கிறார். அமைச்சர் மகனை ஜனா கொலை செய்ய காரணம் என்ன?, பாதுகாப்பு அளிக்கும் விமலுக்கு இதில் தொடர்பு இருக்கிறதா? என்பது தான் படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் விமல், தனக்கு இருக்கும் கடனை அடைப்பதற்காக கதை கேட்காமல் வாய்ப்பு வந்தால் போதும் என்று நடித்து வருவது, இந்த படத்தை பார்த்தாலே தெரிகிறது.
மற்றொரு நாயகனாக நடித்திருக்கும் ஜனா, நடனம், ஆக்ஷன் என அனைத்தும் தனக்கு தெரியும் என்பதை நிரூபித்திருக்கிறார்.
பூஜிதா பொன்னடா, ஹர்ஷிதா பண்ட்லமூரி, ஜூகி என மூன்று பேர் நாயகிகளாக நடித்திருக்கிறார்கள். மூவருக்கும் தலா ஒரு பாடல், சில காட்சிகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. மூவரும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.
பெண் வேடம் போட்டு நடித்திருக்கும் புகழின் காட்சிகள் அனைத்தும் பார்வையாளர்களுக்கு சிரிப்புக்கு பதிலாக ஆத்திரம் வர வைக்கிறது.
அமைச்சராக நடித்திருக்கும் ரவி மரியா, முதலமைச்சராக நடித்திருக்கும் ஆர்.வி.உதயகுமார், சிங்கம்புலி, லொள்ளு சபா சுவாமிநாதன், கேபிஒய் வினோத், மதுரை முத்து என படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இருந்தாலும், ஜொலிக்கவில்லை.
இசையமைப்பாளர் விதயாசாகரின் இசை, ஒளிப்பதிவாளர் செல்வா.ஆர்-ன் ஒளிப்பதிவு, படத்தொகுப்பாளர் ஆனந்த் லிங்க குமாரின் படத்தொகுப்பு என தொழில்நுட்ப கலைஞர்களின் பணி படத்தை அதர பழசாகவே காட்டியிருக்கிறது.
எழுதி இயக்கியிருக்கும் எழில், நகைச்சுவை படம் என்ற பெயரில் பார்வையாளர்களின் ரசனையை குறைத்து மதிப்பிடும் அளவுக்கு ஒரு படத்தை கொடுத்திருக்கிறார்.
நகைச்சுவை படங்களில் லாஜிக் பார்க்க கூடாது, என்று சொல்வார்கள். ஆனால், இந்த படத்தில் நகைச்சுவைக் காட்சிகளையே எதிர்பார்க்க கூடாது. படம் முழுவதும் யார் யாரோ, எதை எதையோ பேசிக் கொண்டிருக்க, திடீரென்று ஒரு திருப்பம், என்று கதை எப்படியோ பயணித்து முடிகிறது.
மொத்தத்தில், ‘தேசிங்குராஜா 2’ முதலாவது ராஜா போல் கூட இல்லை.
ரேட்டிங் 2/5