Casting : Teejay, Janani, Mandhra, Grane Manohar, Pawal Navageethan, Senthi Kumari, Adithya Kathir, Thangadurai, Melvin Jayaprakash
Directed By : Naveen D.Gopal
Music By : Kiran Josh
Produced By : Sri Krishna Productions - Mouli M.Radhakrishna
தன் வீட்டுக்கு எதிர் வீட்டில் குடி வரும் நாயகி ஜனனியை டீஜே காதலிக்கிறார். முதலில் அவரது காதலை ஏற்க மறுக்கும் ஜனனி பிறகு அவரது காதலின் தீவிரத்தைப் பார்த்து அவரும் டீஜேவை காதலிக்கிறார். இவர்களது காதலுக்கு ஜனனியின் அம்மா மந்த்ரா முட்டுக்கட்டை போடுவதோடு, டீஜேவிடம் இருந்து ஜனனியை பிரிப்பதற்காக திட்டம் போடுகிறார். மந்த்ராவின் திட்டத்தை மீறி ஜனனியும், டீஜேவும் ஒன்று சேர்ந்தார்களா ? இல்லையா ? என்பதை எதிர்பார்க்காத திருப்பம் மற்றும் அதிர்ச்சிகரமான கிளைமாக்ஸ் மூலம் சொல்வதே ‘உசுரே’.
’அசுரன்’ படத்தில் அதிரடி இளைஞராக கவனம் ஈர்த்த டீஜே, இதில் இளம் ஹீரோவாக காதல் காட்சிகள் மூலம் கவனம் ஈர்க்கிறார். அதிகம் பேசவில்லை என்றாலும், உருகி உருகி காதலிக்கும் காட்சிகளில் பார்வையாளர்களின் உள்ளமும் உருகிவிடும் அளவுக்கு நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார்.
பிக் பாஸ் பிரபலம் ஜனனி, இளமையாகவும், அழகாகவும், காதல் கதைக்கு பொருத்தமான நடிகையாக இருக்கிறார். அதிகம் நடிக்க கூடிய வாய்ப்புகள் இல்லை என்றாலும், அவர் திரையில் தோன்றி சிரித்தாலும், அழுதாலும் அந்த காட்சிகளை ரசிக்க முடிகிறது. அந்த அளவுக்கு அவரது திரை இருப்பு படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.
ஒரு காலத்தில் தனது கவர்ச்சியால் கிரங்கடித்த மந்த்ரா இவரா..!, என்று அதிர்ச்சியடையும் அளவுக்கு அம்மணி முகம் மாறியிருந்தாலும், உருவத்திலும், நடிப்பிலும் அம்மா கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்.
காமெடி நடிகராக அறியப்பட்ட கிரேன் மனோகர், அழுத்தமான அப்பா கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். தனது வழக்கமான உடல் மொழியை தவிர்த்துவிட்டு அளவாக நடித்து தனக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வாய்ப்பை சரியாக பயன்படுத்தி பாராட்டு பெற்றிருக்கிறார்.
நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் செந்தி குமாரி, நாயகனின் நண்பர்களாக நடித்திருக்கும் தங்கதுரை, ஆதித்யா கதிர், பாவல் நவகீதன், மெல்வின் ஜெயப்பிரகாஷ் என அனைத்து நடிகர்களின் நடிப்பும் படத்திற்கு சிறப்பு சேர்த்திருக்கிறது.
இசையமைப்பாளர் கிரண் ஜோஷ் இசையில் பாடல்கள் அனைத்தும் காதல் காட்சிகளுக்கு உயிர் கொடுத்து, காதல் ஜோடியை பார்வையாளர்கள் மனதில் பதிய வைத்துவிடுகிறது. பின்னணி இசை எளிமையான கதை மற்றும் காட்சிகளுக்கு பெரும் வலிமை சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் மார்க்கி சாய், கிராமத்தின் அழகை எளிமையாகவும், இயல்பாகவும் காட்சிப்படுத்தியிருப்பதோடு, கதாநாயகன் மற்றும் கதாநாயகியையும், அவர்களது காதல் உணர்வுகளையும் ரசிக்கும்படி காட்சிப்படுத்தியிருக்கிறார்.
காதல் ஜோடியை சுற்றி பயணிக்கும் கதையாக இருந்தாலும், அதை வழக்கமாக சொல்லாமல், அவ்வபோது பார்வையாளர்களிடம் எதிர்பார்ப்பு ஏற்படும் வகையில் சொல்லி, தனது படத்தொகுப்பு மூலம் படத்தை சுவாரஸ்யமாக நகர்த்திச் சென்றிருக்கிறார் படத்தொகுப்பாளர் மணிமாறன்.
உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு எழுதி இயக்கியிருக்கும் நவீன் டி.கோபால், காதல் கதையாக இருந்தாலும், அதை குடும்ப பின்னணி திரைக்கதையோடு, நாகரீகமாகவும் சுவாரஸ்யமாகவும் சொல்லியிருக்கிறார்.
காதலர்களுக்கு ஏதோ பிரச்சனை இருக்கிறது, என்று பார்வையாளர்களை யூகிக்க வைக்கும் இயக்குநர், கிளைமாக்ஸில் பார்வையாளர்களின் யூகங்களை கடந்து, எதிர்பார்க்காத ஒன்றை சொல்லி அதிர்ச்சியளிப்பதோடு, இதயத்தை கனக்கச் செய்து விடுகிறார்.
மொத்தத்தில், ‘உசுரே’ காதலுக்கு மரியாதை.
ரேட்டிங் 3/5