Casting : Tharshan, Lal, Sujith, Munish Kanth, Padine Kumar, Aroul D Shankar, Sundareswaran, Kaushik
Directed By : Gowthaman Ganapathy
Music By : Vikas Badisa
Produced By : Upbeat Pictures - VRV Kumar
காவல் நிலையத்தில் இருந்து துப்பாக்கி ஒன்று காணாமல் போகிறது. அந்த துப்பாக்கியை கண்டுபிடிக்கும் முயற்சியில் பயிற்சி துணை ஆய்வாளரான நாயகன் தர்ஷன் தலைமையிலான குழு ஈடுபடுகிறது. நான்கு நாட்களுக்குள் காணாமல் போன துப்பாக்கியை கண்டுபிடித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் தர்ஷனுக்கு, ரவுடி சுஜித் மூலம் ஒரு பிரச்சனை வருகிறது. அந்த பிரச்சனையில் இருந்து தப்பிக்க வேண்டும், காணாமல் போன துப்பாக்கியையும் கண்டுபிடித்தாக வேண்டும், என்ற இக்கட்டான சூழ்நிலைகளை அவர் எப்படி சமாளித்து பிரச்சனைகளுக்கு தீர்வு காண்கிறார், என்பதை பரபரப்பாக சொல்வதே ‘சரண்டர்’.
நாயகனாக நடித்திருக்கும் தர்ஷனுக்கு காவல்துறை சீறுடை கச்சிதமாக பொருந்துவதோடு, கம்பீரமாகவும் காட்சியளிக்கிறார். நடிப்பிலும் நல்ல முன்னேற்றம் கண்டிருக்கும் தர்ஷன், ஆக்ஷன் காட்சிகளிலும், உணர்வுப்பூர்வமான காட்சிகளிலும் ஸ்கோர் செய்திருக்கிறார்.
நல்லவனாக இருப்பதனால் இந்த உலகத்தில் வாழ முடியாது, என்பதை பிரதிபலிக்கும் கதாபாத்திரத்தில் தலைமை காவலராக நடித்திருக்கும் லால், தனது அனுபவம் வாய்ந்த நடிப்பு மூலம் கதாபாத்திரத்திற்கும், படத்திற்கும் பலம் சேர்த்திருக்கிறார்.
வில்லனாக நடித்திருக்கும் சுஜித், ரவுடி கதாபாத்திரத்தில் மிரட்டுகிறார். எதிரிகளை வேட்டையாடுவதும், போலீஸ்காரர்களையே மிரட்டுவது, போட்டுத்தள்ளுவது என்று அவரது நடவடிக்கை சற்று ஓவராக இருந்தாலும், அளவான நடிப்பு மூலம் கனகுவாக மக்கள் மனதில் சுஜித் இடம் பிடித்து விடுகிறார்.
முனிஷ்காந்த் வரும் காட்சிகள் சிரிக்க வைக்கிறது. பாடினி குமார், அருள் டி.சங்கர், நடிகராகவே நடித்திருக்கும் மன்சூர் அலிகான், கெளசிக், சுந்தரேஸ்வரன் என அனைத்து நட்சத்திரங்களும் தங்களது பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் மெய்யேந்திரன் இரவு நேர காட்சிகளையும், சண்டைக்காட்சிகளையும் மிகச்சிறப்பாக படமாக்கியிருக்கிறார்.
இசையமைப்பாளர் விகாஷ் படிஷாவின் பின்னணி இசை படத்தின் பரபரப்பையும், விறுவிறுப்பையும் அதிகரிக்கச் செய்கிறது.
சாதாரண விசயத்தை கூட மிக சுவாரஸ்யமாக சொல்ல முடியும் என்பதை படத்தொகுப்பாளர் ரேணு கோபால் தனது நேர்த்தியான படத்தொகுப்பு மூலம் நிரூபித்திருக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கும் கவுதமன் கணபதி, மிக சாதாரணமான ஒரு சம்பவத்தை வைத்துக் கொண்டு, பரபரப்பான திரைக்கதை மற்றும் காட்சிகள் மூலம், முழுமையான ஆக்ஷன் திரில்லர் படத்தை கொடுத்திருக்கிறார்.
காவல்துறை இயங்கும் விதம், காவல் நிலையத்தில் இருக்கும் ஈகோ மற்றும் அதன் மூலம் ஏற்படும் பிரச்சனைகள் ஆகியவற்றை இயல்பாகவும், நம்பகத்தன்மையோடும் சொல்லியிருப்பது படத்திற்கு கூடுதல் சுவாரஸ்யம் கொடுத்திருக்கிறது.
அடுத்தடுத்த காட்சிகளில் என்ன நடக்கும் ? என்ற எதிர்பார்ப்போடு படத்தை நகர்த்தி செல்லும் இயக்குநர் கவுதமன் கணபதி, இரண்டரை மணி நேரம் போனதே தெரியாத அளவுக்கு படத்துடன் பார்வையாளர்களையும் பதற்றத்துடன் பயணிக்க வைத்து விடுகிறார்.
மொத்தத்தில், ‘சரண்டர்’ ரசிகர்களை சரண்டராக்கிவிடும்.
ரேட்டிங் 4/5