Latest News :

’கேப்டன் பிரபாகரன்’ திரைப்பட விமர்சனம்

90cf9274ac46f427e88636176df93f76.jpg

Casting : Vijayakanth, Mansoor Alikhan, Sarathkumar, Rupini, Ramya Krishnan

Directed By : RK Selvamani

Music By : Ilayaraja

Produced By : Ibrahim Rowther & A. Mohammed Abubucker

 

34 வருடங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘கேப்டன் பிரபாகரன்’ டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மீண்டும் வெளியாகியிருக்கிறது. விஜயகாந்தின் 100 வது திரைப்படமான இப்படம் தமிழ் சினிமாவின் மிக பிரமாண்டமான ஆக்‌ஷன் திரைப்படங்களில் ஒன்றாக இன்று வரை திகழ்கிறது. 

 

தற்போதைய காலக்கட்டத்தில் இருக்கும் பல அதிநவீன தொழில்நுட்பங்கள் இல்லாத காலக்கட்டத்தில் ரசிகர்களை வியக்க வைக்கும் அளவுக்கு பிரமாண்டமான ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் அனல் பறக்கும் அரசியல் வசனங்களோடு உருவான இப்படம், தற்போதைய காலக்கட்டத்திலும் ரசிகர்களை கொண்டாட வைக்கிறதா?, விமர்சனத்தை பார்ப்போம்.

 

வீரப்பனின் முகம் வெளியுலகிற்கு தெரியாத காலக்கட்டத்தில், வீரப்பன் யார் ?, அவன் இப்படி ஒரு குற்றவாளியாக உருவெடுக்க காரணமானவர்கள் யார் ?, என்பதை மையக்கருவாக கொண்டு, அதற்கு அக்‌ஷன் மற்றும் கமர்ஷியல் பாணியில் திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கும் ஆர்.கே.செல்வமணி, தமிழ் சினிமா என்பது காட்சி மொழி என்பதை அப்போதே ஆணித்தரமாக நிரூபித்திருக்கிறார்.

 

ஸ்டைல் மற்றும் ஆக்‌ஷன் காட்சிகளுடன் அனல் தெறிக்கும் வசன உச்சரிப்பு என படம் முழுவதும் தனது ஆளுமையை நிலைநாட்டியிருக்கும் விஜயகாந்த், அளவாக நடித்திருந்தாலும், படத்திற்காக கடுமையாக உழைத்திருப்பது அனைத்து காட்சிகளிலும் தெரிகிறது.

 

வில்லன் மன்சூர் அலிகானின் காட்சிகள், முந்தைய கேப்டன் பிரபாகரனில் அதிகம் இருப்பது போல் இருக்கும், ஆனால் இதில் அவரது காட்சிகள் சில நீக்கப்பட்டிருப்பது போல் தெரிகிறது.

 

சரத்குமார், ரம்யா கிருஷ்ணன், ரூபினி உள்ளிட்ட மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் திரைக்கதை ஓட்டத்திற்கு உயிரளித்திருக்கிறார்கள். 

 

ஒளிப்பதிவாளர் ராஜராஜனின் கேமரா, ஸ்டண்ட் நடிகர்களை விட அதிகம் அடி வாங்கியிருக்கும் போலிருக்கிறது, அத்தகைய ரிஸ்க்கான காட்சிகள் நிறைந்த ஆக்‌ஷன் காட்சிகளை அசத்தலாக படமாக்கியிருக்கிறது.  எத்தனை கேமராக்கள் பயன்படுத்தியிருப்பார்கள் என்று யூகிக்க முடியாதபடி ஆக்‌ஷன் காட்சிகள் அனைத்தையும் பிரமாண்டமாக படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ராஜராஜன்.

 

இளையராஜா இசையில், இரண்டு பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலம். அடர்ந்த வனப்பகுதிகளையும், அதில் உலாவும் ஆபத்து மிக்க வில்லன் கதாபாத்திரத்தையும் காட்டுவதற்கு முன்பாகவே இளையராஜாவின் பின்னணி இசை பார்வையாளர்களை பீதியடைய செய்துவிடுகிறது.

 

லியாகத் அலிகானின் பேனா, யாருக்கும் பயப்படமால் வசனத்தை கூர்மையாக எழுதியிருக்கிறது. வீரப்பனை குற்றவாளியாக சித்தரித்தாலும், அவர் தரப்பில் இருக்கும் நியாயத்தை சொல்லியிருப்பதோடு, ஒரு வீரப்பன் போனால் ஓராயிரம் வீரப்பன்களை உருவாக்குபவர்களை தான் அழிக்க வேண்டும், என்ற வசனத்தின் மூலம் குற்றவாளிகளை உருவாக்குபவர்களை முதலில் களை எடுக்க வேண்டும் என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

 

எழுதி இயக்கியிருக்கும் ஆர்.கே.செல்வமணி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு பிரமாண்டமான படமாக மட்டும் இன்றி, காலம் கடந்தும் சினிமா பார்வையாளர்கள் கொண்டாடும் ஒரு படமாகவும் கொடுத்திருக்கிறார். 

 

34 வருடங்களுக்கு முன்பு ரசிகர்களுக்கு சிறப்பான திரையரங்க அனுபவத்தை கொடுத்த ‘கேப்டன் பிரபாகரன்’ தற்போதைய டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் சில குறைபாடுகளுடன் வெளியாகியிருந்தாலும், கதையாக்கம் மற்றும் உருவாக்கம் மூலம் ரசிகர்களுக்கு இப்போதும் சிறந்த திரையரங்க அனுபவத்தை கொடுக்கிறது.

 

மொத்தத்தில், ‘கேப்டன் பிரபாகரன்’ திரை விருந்து.

 

ரேட்டிங் 3.8/5

Recent Gallery