Casting : Samuthirakani, Bharath, Rithesh, Prem Kumar, Ramesh Pisharody, Surabhi Lakshmi, P.K. Medini, Adarsh, Sidhangana, Aaiswika
Directed By : Anil V. Nagendran
Music By : M K Arjunan, Perumbavoor G. Raveendranath, James Vasanthan, C.J. Kuttappan and Anchal Udayakumar
Produced By : Visarad Creations
கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவிய முதல் செயலாளரும், புரட்சி வீரருமான பி.கிருஷ்ண பிள்ளையின் வீர வாழ்க்கை வரலாறு மற்றும் கேரளாவுக்கும், தமிழகத்துக்கும் அரசியல் ரீதியாகவும், பெண்கள் முன்னேற்றம் மற்றும் சமூக நீதி போராட்டங்கள் ரீதியாகவும் இருக்கும் ஒற்றுமையை எடுத்துரைப்பது தான் இப்படத்தின் கதை.
தமிழக கிராமம் ஒன்றின் செல்வந்தரான பரத், கம்யூசனிவாதியாக இருக்கிறார். ஊர் மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்வதோடு, சாதி, ஏழை பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வுகள் பார்க்காமல் அனைவருடனும் சகஜகமாக பழகுகிறார். அதே சமயம், அவரது பக்கத்து ஊரில் சாதி வன்கொடுமை பிரச்சனைகளில் பாதிக்கப்படும் மக்களுக்கு துணையாக நிற்பதோடு, அம்மக்களைபிரச்சனைகளை எதிர்த்து போராட வைப்பதற்காக அவர்களை கேரளாவுக்கு அழைத்துச் சென்று கம்யூனிச போராளிகளை சந்திக்க வைக்கிறார். அப்போது 96 வயதுள்ள பெண் கம்யூனிச போராளி பி.கே.மேதினி, புரட்சி வீரர் பி.கிருஷ்ண பிள்ளையின் வாழ்க்கை வரலாறு மற்றும் கேரளாவில் கம்யூனிய புரட்சி உருவாகி, விஸ்வரூபம் எடுத்தது என்பதை விவரிப்பது தான் ‘வீரவணக்கம்’.
1940 தொடங்கும் கதை 1946 வரை பயணிக்கிறது. இந்த காலக்கட்டங்களில் வெள்ளையனை வெளியேற்ற ஒரு தரப்பு போராடிக் கொண்டிருந்தாலும், இந்திய கிராமங்களில் தனி அரசாங்கத்தை நடத்திக் கொண்டிருந்த ஜமீன்கள் மற்றும் நில சுவாந்தர்கள் மூலம் கொத்தடிமைகளாக நடத்தப்பட்ட விவசாய தொழிலாளர்களை மீட்டு, புதிய மக்கள் புரட்சியை கம்யூனிசம் எப்படி உருவாக்கியது, என்பதை எதார்த்தாம் மீறாமல், அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் அனில் வி.நாகேந்திரன்.
பி.கிருஷ்ண பிள்ளை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சமுத்திரக்கனி, புரட்சிகரமான வசனங்களை உணர்வுப்பூர்வமாக பேசி நடித்திருப்பது, அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறது. மக்களுக்காக போராடிய தலைவர்களின் தியாகங்களை நினைவுப்படுத்தும் விதமாக ஆக்ரோஷமாகவும், உணர்வுப்பூர்வமாகவும் நடித்திருக்கும் சமுத்திரக்கனி, படத்திற்கும் பி.கிருஷ்ண பிள்ளை கதாபாத்திரத்திற்கும் மிகப்பெரிய அடையாளமாக பயணித்திருக்கிறார்.
பெரிய மீசையுடன் கம்பீரமான தோற்றத்தில், பணக்கார கம்யூனிசவாதி கதாபாத்திரத்தில் எண்ட்ரி கொடுக்கும் பரத், தனது வயதுக்கு மீறிய வேடம் என்றாலும் அதை சிறப்பாகவே செய்திருக்கிறார். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் மகளின் காதல் பற்றி அவர் பேசும் வசனங்கள், ஆணவக்கொலைகளுக்கும், நாடக காதல் என்ற பொய் பிரச்சாரம் செய்பவர்களுக்கும் சம்மட்டி அடியாக அமைந்திருக்கிறது.
கம்யூனிச போராளியாக நடித்திருக்கும் ரித்தேஷ், போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்திருக்கும் பிரேம் குமார், ரமேஷ் பிஷரோடி, சுரபி லட்சுமி, புரட்சி பாடகி பி.கே.மேதினி, அதர்ஷ், ஆய்ஷ்விகா என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.
கவியரசுவின் ஒளிப்பதிவில் பிரமாண்டம் இல்லை என்றாலும், கதாபாத்திரங்களின் உணர்வுகளை பார்வையாளர்களிடம் கடத்தும் வகையில் காட்சிகளை படமாக்கியிருக்கிறார்.
இசையமைப்பாளர்கள் எம்.கே.அர்ஜுனன், பெரும்பாவூர் ஜி.ரவீந்திரன், ஜேம்ஸ் வசந்தன், சி.ஜே.குட்டப்பன், அஞ்சல் உதயகுமார் ஆகியோரது இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை காட்சிகளுக்கு உயிரோட்டமாக பயணித்திருக்கிறது.
எழுதி இயக்கியிருக்கும் அனில் வி.நாகேந்திரன், பி.கிருஷ்ண பிள்ளையின் வீர வாழ்க்கையை உணர்வுப்பூர்வமான படைப்பாக கொடுத்திருக்கிறார்.
மிகப்பெரிய பொருட்செலவு, பிரமாண்டமான காட்சியமைப்புகள், பிரமிக்க வைக்கும் மேக்கிங் போன்ற மாயாஜாலங்கள் இல்லை என்றாலும், ஒரு புரட்சிகரமான தலைவரைப் பற்றிய புத்தகம் படித்த அனுபவத்தை கொடுக்கும் விதமாக படத்தை உண்மையாகவும், உணர்வுப்பூர்வமாகவும் இயக்கியிருக்கும் இயக்குநர் அனில் வி.நாகேந்திரன், போராட்டமே அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு என்பதை மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
மொத்தத்தில், ‘வீரவணக்கம்’ வெற்றி முழக்கம்.
ரேட்டிங் 3.2/5