Casting : Tharun Vijay, Seshvitha Kanimozhi, Madhusudan Rao, Nizhalgal Ravi, Ramachandran Durairaj, Boys Rajan
Directed By : Noah Armstrong
Music By : Karan B Krupa
Produced By : GKR Cine Arts - Tharun Vijay
காவல்துறை உதவி ஆணையர் மதுசூதனன் ராவின் மகளான நாயகி சேஷ்விதா கனிமொழி, பணி முடித்துவிட்டு இரவு நேரத்தில் வீடு திரும்பும் போது திடீரென்று மாயமாகி விடுகிறார். ஆட்டோவில் வருவதாக தகவல் தெரிவித்த மகள் வீடு திரும்பாததால் கவலை கொள்ளும் மதுசூதனன் ராவுக்கு, மறுநாள் காலையில் இளம் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக தகவல் வருகிறது. இதற்கிடையே, தான் ஒரு பெண்ணை கொலை செய்துவிட்டதாக கூறி நாயகன் தருண் விஜய் போலீஸில் சரணடைகிறார்.
தருண் விஜய் கொலை செய்ததாக சொல்லும் பெண் சேஷ்விதா கனிமொழியா ? என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கும் காவல்துறைக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக, இந்த கொலை மட்டும் அல்ல, மேலும் இரண்டு கொலைகள் செய்திருப்பதாக சொல்கிறார் தருண் விஜய், தான் கொலை செய்தவர்களில் சேஷ்விதா கனிமொழியும் ஒருவரா? என்பது தெரியாது, என்று சொல்லி, அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியளிக்கிறார். அவர் கூறிய தகவல்களின் அடிப்படையில் விசாரணையை மேற்கொள்ளும் காவல்துறை, அவர் கொலை செய்ததாக சொல்லப்படும் இரண்டு பேரும் உயிருடன் இருப்பதை கண்டுபிடிக்கிறது. அப்படியானால், அவர் சொல்லும் மூன்றாவது கொலைக்கும், சேஷ்விதா கனிமொழிக்கும் என்ன தொடர்பு?, உயிருடன் இருப்பவர்களை கொன்று விட்டதாக சொல்லும் தருண் விஜய் யார் ?, எதற்காக இப்படி சொல்கிறார் ? ஆகிய கேள்விகளுக்கான பதிலை புது வடிவிலான கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரில் சொல்வதே ‘குற்றம் புதிது’.
அறிமுக நாயகன் தருண் விஜய், முதல் படத்திலேயே பலம் வாய்ந்த கதாபாத்திரத்தை மிக சிறப்பாக கையாண்டுள்ளார். ஆறடி உயரம், கட்டுமஸ்தான உடம்பு என ஆக்ஷன் ஹீரோவுக்கான அனைத்து தகுதிகளோடு இருந்தாலும், முகத்தில் வெகுளித்தனத்தை வெளிப்படுத்தி நடிப்பில் அசத்தியிருக்கிறார். காவல்துறை அதிகாரியையும், நீதிபதியையும் அங்கிள் என்று அழைப்பவர், கொலை செய்ததையே ஒரு குழந்தையை போல் ஒப்புக்கொள்ளும் காட்சியில் கைதேர்ந்த நடிகராக பளிச்சிடுகிறார். நடனம், ஆக்ஷன், நடிப்பு, செண்டிமெண்ட் என அனைத்து ஏரியாவிலும், அறிமுகப்படத்திலேயே சிக்சர் அடித்திருக்கும் தருண் விஜய், நிச்சயம் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகனாக வலம் வருவார் என்ற நம்பிக்கையை மக்கள் மனதில் விதைத்திருக்கிறார்.
பாலுமகேந்திராவின் கதாநாயகிகளை நினைவுப்படுத்தும் சேஷ்விதா கனிமொழி, கண்கள் மூலமாகவே பலவித உணர்வுகளை ரசிகர்களிடத்தில் எளிதில் கடத்தி விடுகிறார். அவர் நடிக்கும் அத்தனை படங்களிலும் எதிர்பார்க்காத கதாபாத்திரங்கள் மூலம் பார்வையாளர்களை மிரள வைத்தவர், இந்த படத்திலும் யூகிக்க முடியாத வேடத்தில் நடித்து அசத்தியிருக்கிறார்.
மதுசூதனன் ராவ், ராம்ஸ், நிழல்கள் ரவி, பாய்ஸ் ராஜன் ஆகியோர் தங்களது அனுபவமான நடிப்பு மூலம் திரைக்கதை ஓட்டத்திற்கு உயிரளித்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் கரண் பி.க்ருபா இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானருக்கு ஏற்ற வகையில் பயணித்திருப்பதோடு, கமர்ஷியல் அம்சங்களோடு பயணித்து படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் ஜேசன் வில்லியம்ஸின் கேமரா, சிறிய அறையில் நிகழும் கொடூரமான காட்சிகள் மூலம் பார்வையாளர்களை பீதியடைய செய்தாலும், கதைக்களத்தோடு பார்வையாளர்களையும் பயணிக்க வைக்கும் விதத்தில் காட்சிகளை படமாக்கியிருக்கிறது.
கிரைம் திரில்லர் ஜானராக இருந்தாலும், திரைக்கதையில் குற்றத்தை புதுவிதமாக சொல்ல முயற்சித்திருக்கும் இயக்குநருக்கு பெரும் பலமாக பயணித்திருக்கும் படத்தொகுப்பாளர் எஸ்.கமலக்கண்ணன், யூகிக்க முடியாதபடி காட்சிகளை தொகுத்து படத்தை சுவாரஸ்யமாக மட்டும் இன்றி விறுவிறுப்பாகவும் நகர்த்தி செல்கிறார்.
எழுதி இயக்கியிருக்கும் நோஹா ஆம்ஸ்ட்ராங், ஒரு பெண் காணாமல் போகும் சம்பவத்தை மையக்கருவாக வைத்துக்கொண்டு, யூகிக்க முடியாத திருப்பங்கள், விறுவிறுப்பான திரைக்கதை, வேகமான காட்சியமைப்பு என்று புதுவிதமான கிரைம் திரில்லர் ஜானர் படத்தை கொடுத்திருக்கிறார்.
காணாமல் போகும் இளம் பெண், போலீஸாரின் சந்தேக வலையில் சிக்கும் ஆட்டோ ஓட்டுநர், சம்மந்தமே இல்லாமல் சரணடையும் உணவு டெலிவரி வேலை பார்க்கும் இளைஞர், என்று திரைக்கதை நகர்த்தலில் யூகிக்க முடியாத திருப்பங்களை வைத்து படம் முழுவதையும் விறுவிறுப்பாக நகர்த்திச் சென்றிருக்கும் இயக்குநர் நோஹா ஆம்ஸ்ட்ராங், காவல்துறை விசாரணை, காவல்துறை அதிகாரியின் கண்டுபிடிப்பு ஆகியவற்றை தெளிவாக சொல்வதில் சற்று தடுமாறியிருந்தாலும், முழுமையான திரைப்படமாக பார்க்கும் போது, தலைப்பை போலவே கிரைம் திரில்லரை புதுவிதமாக கொடுத்திருக்கிறார்.
மொத்தத்தில், ‘குற்றம் புதிது’ கிரைம் திரில்லர் ஜானர் பட விரும்பிகளுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும்.
ரேட்டிங் 3/5