Casting : Kalyani Priyadarshan, Naslen, Chandu Salimkumar, Arun Kurian, Sandy
Directed By : Dominic Arun
Music By : Jakes Bejoy
Produced By : Wayfarer Films -
அதீத சக்திகள் கொண்ட நாயகி கல்யாணி பிரியதர்ஷன் பெங்களூர் நகரத்திற்கு வருகிறார். பேக்கரி ஒன்றில் பணியாற்றும் அவர் தங்கியிருக்கும அடிக்குமாடி குடியிருப்புக்கு எதிரே இருக்கும் வீட்டில் வசிக்கும் நஸ்லன், சந்து சலீம்குமார் மற்றும் அருண் குரியன் ஆகியோர் அவரால் ஈர்க்கப்படுகிறார்கள். அதே சமயம், மனிதர்களை கடத்தி அவர்களது உடல் உறுப்புகளை திருடும் கும்பலால் பெங்களூரில் பரபரப்பு ஏற்படுகிறது. அந்த கும்பலுடன் தொடர்புடைய போலீஸ் இன்ஸ்பெக்டரான சாண்டியுடன், கல்யாணி பிரியர்தர்ஷன் மோத வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதனால், கல்யாணி பிரியர்தஷன் அதீத சக்திகள் கொண்ட பெண் மட்டும் அல்ல, அதற்கும் மேல...என்ற உண்மை தெரிய வருகிறது. அவர் யார் ? அவரைப் பற்றிய உண்மை தெரிந்த பிறகு என்ன நடந்தது ? என்பதை நம் புராணக் கதைக கதாபாத்திரத்தை சூப்பர் ஹீரோவாக சித்தரிக்கும் வகையில் சொல்வதே ’லோகா - அத்தியாயம் 1 : சந்திரா’.
சந்திரா என்ற கதாபாத்திரத்தில் அதீத சக்திகள் படைத்த பெண்ணாக கல்யாணி பிரியதர்ஷன் மிரட்டியிருக்கிறார். குறிப்பாக சண்டைக்காட்சிகளில் அசத்துகிறார். அதிகம் பேசவில்லை என்றாலும், தனது அளவான உடல் அசைவுகள் மூலம் சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்திற்கு மிக கச்சிதமாக பொருந்தியிருப்பவர், தனது கதாபாத்திரத்தை பார்வையாளர்கள் கொண்டாடும் விதத்தில் நடித்திருக்கிறார்.
சந்திராவால் கவர்ந்திழுக்கப்படும் இளைஞர்களாக நடித்திருக்கும் நஸ்லன், சந்து சலீம்குமார் மற்றும் அருண் குரியன் ஆகியோர் மூலம் கதை நகர்த்தப்படுவதோடு, அவர்களது உரையாடல் மற்றும் உடல் மொழி ஆகியவை பல இடங்களில் சிரிக்கவும் வைக்கிறது. குறிப்பாக, சந்திராவை பின் தொடர்ந்து, அவர் யார் ? என்பதை நேரில் பார்க்கும் நஸ்லனின் நடிப்பு சிரிப்பு சரவெடி.
போலீஸ் இன்ஸ்பெக்டர் நாச்சியப்பா கவுடா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடன இயக்குநர் சாண்டியின் வில்லத்தனம் மிரள வைக்கிறது.
சிறப்பு தோற்றத்தில் வரும் டோவினோ தாமஸ், துல்கர் சல்மான் மற்றும் திரையில் தோன்றாத பெரியவர் கதாபாத்திரங்கள் எதிர்பார்ப்பை தூண்டும் விதத்தில் திரைக்கதையில் கையாளப்பட்டுள்ளது.
இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை, ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவியின் கோணங்கள் மற்றும் வண்ணங்கள் படத்தை பிரமாண்டமானதாக மட்டும் இன்றி தரமானதாகவும் கொடுத்திருக்கிறது.
கலை இயக்குநர் பங்கலானின் பணி, சண்டைப்பயிற்சி இயக்குநர் யானிக் பென்னின் சண்டைக்காட்சிகள், வி.எஃப்.எக்ஸ் காட்சிகள் என அனைத்துமே மிக தரமாக இருக்கிறது.
படத்தின் துவக்கத்தில் என்ன நடக்கிறது, என்பது சற்று புரியாதபடி இருந்தாலும், சந்திரா யார் ? என்பதை மிக தெளிவாக சொல்லி, சூப்பர் மேன் உலகம், அதில் இருக்கும் அதீத சக்தி படைத்தவர்கள், என்று படத்தில் ஏகப்பட்ட விசயங்கள் இருந்தாலும், அனைத்தையும் சுருக்கமாக சொல்லி படத்தின் சுவாரஸ்யத்தை அதிகரிக்கச் செய்திருக்கிறார் படத்தொகுப்பாளர் சாமன் சாக்கோ.
தென்னிந்திய சினிமாவில் சூப்பர் மேன் ஜானர் திரைப்படங்கள் என்பது அரிதானது என்றாலும், அப்படிப்பட்ட படங்களை மக்கள் மனதில் பதிய வைப்பது என்பது மிகப்பெரிய சவால். அந்த சவாலை இயக்குநர் டொமினிக் அருண் மிக சிறப்பாகவே கையாண்டுள்ளார்.
நம் புராணக் கதைகளில் உள்ள கதாபாத்திரத்தை அதீத சக்தி படைத்த சூப்பர் மேனாக சித்தரித்து, அதன் மூலம் ஒரு மிகப்பெரிய சூப்பர் மேன் உலகத்தை உருவாக்கியிருக்கும் இயக்குநர் டொமினிக் அருண், சந்திரா என்ற முதல் அத்தியாயத்தை மிக சிறப்பாக கையாண்டுள்ளார். குறிப்பாக சந்திராவின் சிறுவயது பாதிப்பு, அங்கிருந்து அவர் அதீத சக்தி படைத்த பெண்ணாக உருவெடுப்பது, அவரது அடுத்தடுத்த பயணங்கள் ஆகியவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ரசிக்க வைக்கும் விதத்தில் இருக்கிறது.
சந்திரா கதாபாத்திரத்தின் அறிமுகம் மற்றும் அவரது நிஜ முகத்தை வெளிப்படுத்தும் காட்சிகள் அனைத்தும், சூப்பர் மேன் கதாபாத்திரத்தை கொண்டாடும் விதமாக மட்டும் இன்றி, பார்வையாளர்களை படத்துடன் ஒன்றிவிட செய்கிறது. ஆனால், இவை அனைத்தும் முதல்பாதியில் மட்டும் தான். இரண்டாம் பாதியில் சூப்பர் மேன் உலகத்தின் விரிவாக்கம், மற்றும் அடுத்தடுத்த அத்தியாயங்களுக்கான சூப்பர் ஹீரோக்கள் எப்படி இருப்பார்கள், என்பதற்கான அறிமுகமாக இருந்தாலும், கதை வேறு வழியில் பயணிப்பது போல் இருக்கிறது.
சந்திரா எதற்காக பெங்களூருக்கு வருகிறார் ? அவருக்கு கொடுக்கப்பட்ட பணி என்ன ?, அவர்கள் யாருக்கு எதிராக போராடுகிறார்கள் ? ஆகிய கேள்விகளுக்கான பதில்களை சொல்லவில்லை என்றாலும் பரவாயில்லை, அதற்கான லீட் எதுவும் கொடுக்காமல், வேறு சூப்பர் ஹீரோக்களின் அறிமுகத்தோடு படத்தை முடித்திருப்பது திரைக்கதையை சற்று தொய்வடைய செய்கிறது.
மொத்தத்தில், ’லோகா - அத்தியாயம் 1 : சந்திரா’ சூப்பர்...என்று ரசிகர்களை சொல்ல வைக்கும்.
ரேட்டிங் 3.8/5