Latest News :

‘தணல்’ திரைப்பட விமர்சனம்

6e70aed23387ffce05dbfd2b65a1139a.jpg

Casting : Atharvaa, Ashwin Kakumanu, Lavanya Tripathi

Directed By : Ravindra Madhava

Music By : Justin Prabhakaran

Produced By : Annai Film Production -

 

காவல்துறையில் புதிதாக கடைநிலைக் காவலர்களாக சேரும் நாயகன் அதர்வா உள்ளிட்ட 6 பேர் ரோந்து பணிக்கு அனுப்பபடுகிறார்கள். அப்போது சாலையில் உள்ள கழிவுநீர் சுரங்கத்தில் இருந்து ஒருவர் வெளியேறுவதை பார்த்து அவரிடம் விசாரிக்க முயற்சிக்கும் போது, அவர் தப்பித்து ஓடுகிறார். அவரை பின் தொடர்ந்து ஓடும் ஆறு பேரும், ஆள் நடமாட்டம் இல்லாத குடிசைப்பகுதிக்குள் சிக்கிக் கொள்கிறார்கள். அங்கு அஷ்வின் கக்குமனு, தலைமையிலான ஒரு குழுவினர் மிகப்பெரிய சதிதிட்டத்தை செயல்படுத்தும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

 

அவர்களை பார்த்ததும், காவலர்கள் 6 பேரும் அவர்களை விசாரிக்க முயற்சிக்க, சற்றும் எதிர்பாராத நேரத்தில் அஷ்வின் கக்கமனு, காவலர்களை கொலை செய்கிறார். அவர்களிடம் இருந்து நாயகன் அதர்வா உள்ளிட்ட மற்ற காவலர்கள் தப்பிக்க முயற்சிக்க, அவர்களால் அந்த பகுதியில் இருந்து வெளியேறுவதற்கான வழியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கிடையே, 6 காவலர்களின் இணைப்பு கடிதம் அந்த இடத்தில் கிடக்கிறது. காவல் நிலையத்தில் இருக்க வேண்டிய தங்களது இணைப்பு கடிதத்தை அந்த இடத்தில் பார்த்து மேலும் அதிர்ச்சியடையும் காவலர்கள் அங்கிருந்து தப்பித்தார்களா?, அஸ்வின் கக்கமனு யார்? , அவரது சதி திட்டம் என்ன ?, இதில் சம்மந்தமே இல்லாத அதர்வா எப்படி சிக்கினார் ? ஆகிய கேள்விகளுக்கான பதிலை பரபரப்பாக சொல்வதே ‘தணல்’.

 

நாயகனாக அல்லாமல் கதையின் நாயகனாக படத்திற்கு பெரும் பலம் சேர்க்கும் வகையில் அளவாக நடித்திருக்கும் அத்ர்வா, ஆக்‌ஷன் காட்சிகளில் மிரட்டியிருக்கிறார். பெற்றோர் பற்றி எந்த கவலையும் இல்லாமல் இருப்பவர், எதார்த்தை புரிந்துக் கொண்டு பொறுப்பான இளைஞராக உணர்வுப்பூர்வமாக நடித்திருப்பவர், உயிர் பிழைப்பதற்காக வில்லன்களிடம் இருந்து தப்பிக்க முயற்சிக்கும் காட்சிகளில் உயிர் பயத்தையும், நண்பர்களை காப்பாற்ற வேண்டும் என்ற பதற்றத்தை தன் நடிப்பில் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். 

 

வில்லனாக இருந்தாலும், கதையின் நாயகனுக்கு சமமான இடத்தை பிடித்திருக்கும் அஷ்வின் கக்கமனுவின் கதாபாத்திரமும், அதில் அவர் வெளிப்படுத்திய நடிப்பு மற்றும் அவரது தோற்றம் படத்திற்கு மிகப்பெரிய பலம். குறிப்பிட்ட ஒரு இடத்தில் கதை பயணித்தாலும், அத்தகைய உணர்வே ஏற்படாத வகையில் படம் பயணிக்க, அஷ்வின் கக்கமனுவின் கதாபாத்திர வடிவமைப்பு மற்றும் அவரது நடிப்பு கைகொடுத்திருக்கிறது. 

 

நாயகியாக நடித்திருக்கும் லாவண்யா திரிபாதிக்கு பெரிய வேலை இல்லை என்றாலும், ஆரம்பக்கட்ட படத்தை நகர்த்தவும், சில பொழுதுபோக்கு அம்சங்களுக்காகவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்.

 

ஷாரா, செல்வா, அழகம் பெருமாள், போஸ் வெங்கட், லக்‌ஷ்மி பிரியா சந்திரமெளலி, பாரத், ஷர்வா, தாஃபிக், பிரதீப் கே.விஜயன் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்களும் திரைக்கதை ஓட்டத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர் சக்தி சரவணனின் பணி படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது. இரவு நேரம், அடர்ந்த குடிசைப்பகுதி இவை இரண்டையும் படம் பார்ப்பவர்களே பதற்றம் அடையும் வகையில் காட்சிப்படுத்தியிருக்கிறார். 

 

ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் பாட்டு ஹிட் ரகம் என்றால், பின்னணி இசை மிரட்டல் ரகம். ஒரே இடத்தில் நகரும் கதைக்கு தன் பின்னணி இசை மூலம் வித்தியாசத்தை வெளிப்படுத்தி திரைக்கதையை எந்த இடத்திலும் தொய்வடையாமல் நகர்த்திச் சென்றிருக்கிறார்.

 

படத்தொகுப்பாளர் கலைவண்ணன், வேகம் மற்றும் விறுவிறுப்பு மிக்க திரைக்கதை என்றாலும், அதில் சில உணர்வுப்பூர்வமான காட்சிகளை பார்வையாளர்களிடம் தொடர்பு ஏற்படும் வகையில் காட்சிகளை தொகுத்திருக்கிறார்.

 

எழுதி இயக்கியிருக்கும் ரவீந்திர மாதவா, உண்மை என்கவுண்டர் சம்பவம் ஒன்றை அடிப்படையாக வைத்துக்கொண்டு, விறுவிறுப்பான ஆக்‌ஷன் திரில்லர் படத்தை கொடுத்திருக்கிறார்.

 

படம் தொடங்கி சுமார் 20 நிமிடங்களில் கதைக்குள் அழைத்துச் செல்பவர், அதில் இருந்து இறுதிக் காட்சி வரை, பார்வையாளர்களின் முழு கவனமும் திரையில் மட்டுமே இருக்கும்படியான திருப்பங்கங்களோடு, படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்கிறார்.

 

மொத்தத்தில், ‘தணல்’ பற்றிக்கொள்ளும்.

 

ரேட்டிங் 3/5

Recent Gallery