Latest News :

’தண்டகாரண்யம்’ திரைப்பட விமர்சனம்

0abdc0787036adc22b4abb0407a00a91.jpg

Casting : Dinesh, Kalaiyarasan, Dancing Rose Shabeer, Balasaravanan, Rythvika, Vinsu Sam, Arul Doss, Muthukumar Yuvan Mayilsamy

Directed By : Athiyan Aathirai

Music By : Justin Prabhakaran

Produced By : Neelam Productions & Learn and Teach - Pa. Ranjith, Sai Devanand.S, Sai Venkateswaran

 

இராமாயணத்தில்  தண்டைக்குரியவர்கள் வசிக்கும் வனப்பகுதியை தண்டகாரண்யம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது சத்தீஸ்கர் மாநிலத்தில் அமைந்துள்ள சுமார் 90,000 சதுர கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட அடர்ந்த காட்டுப்பகுதி மற்றும் சத்தீஸ்கர், மகாராஷ்டிரம், ஒடிசா, ஆந்திரா மாநிலங்களின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள காட்டுப்பகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளை தண்டகாரன்யம் என்று அழைக்கின்றனர்.  இப்பகுதிகள் நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளாகும்.

 

தண்டனைக்குரிவர்கள் என்று குறிப்பிடப்படும் நக்சலைட்டுகள் தீவிரவாதிகள், போராளிகள் என்று சமூகத்தால் அறியப்பட்டாலும், உண்மையில் அவர்கள் வலியோரால் வஞ்சிக்கப்பட்ட சாதாரண பழங்குடியின மக்கள் என்பதையும், அவர்கள் பெயரில் ஆட்சியாளர்களும், அதிகார வர்க்கத்தினரும் நிகழ்த்திய மிகப்பெரிய மோசடியால் அவர்கள் எப்படி பலி கொடுக்கப்பட்டார்கள், என்ற உண்மையையும் உரக்கச் சொல்வது தான் ‘தண்டகாரண்யம்’.

 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதி கிராமத்தைச் சேர்ந்த தினேஷ், மனைவி ரித்விகா, தம்பி கலையரசன், அப்பா, அம்மா என்று குடும்பமாக வசித்து வருகிறார். கலையரசன் வனத்துறையில் தற்காலிக காவலராக பணியாற்றி வருகிறார். எப்படியாவது அரசு ஊழியராகி விட வேண்டும் என்று கடுமையாக உழைக்கிறார். ஆனால், உயர் அதிகாரிக்கும், தினேஷுக்கும் இடையே ஏற்பட்ட மோதலினால் கலையரசனின் தற்காலிக பணியும் பறிபோகிறது. இதனால் உறவினர்கள் உதாசினப்படுத்த, குடும்பமே அவமானத்தில் தலை குணிகிறது.

 

தம்பியை எப்படியாவது அரசு பணியில் சேர்த்து அழகு பார்க்க நினைக்கும் அண்ணன் தினேஷ், ஒருவரது தகவலின் பேரில், நக்சலைட்டுகளை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு உருவாக்கிய சிறப்பு பாதுகாப்பு படையில் பணிக்கு சேர்த்து விட முடிவு செய்கிறார். அதற்காக விவசாய நிலத்தை விற்று பணம் கொடுத்து அனுப்புகிறார்.  அதன்படி ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருக்கும் படைப்பிரிவில் இணைந்து பயிற்சி பெற்று வரும் கலையரசன், பலவித கஷ்ட்டங்களை அனுபவித்தாலும், வேலையோடு தான் ஊர் திரும்ப வேண்டும் என்ற மனநிலையில் இருக்க, அந்த இடத்திற்கு வருபவர்கள் உயிரோடு எங்கும் செல்ல முடியாது, என்ற உண்மையை தெரிந்துக் கொள்கிறார். அங்கு அப்படி என்ன நடக்கிறது ?, அவர் அங்கிருந்து தப்பித்தாரா ? இல்லையா ? என்பதை காலப் பின்னணியில் நிகழ்த்தப்பட்ட ஒரு கொடூர நிகழ்வை நம் கண் முன் நிறுத்தும் வகையில் சொல்வதே ‘தண்டகாரண்யம்’.

 

கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் தினேஷ் மற்றும் கலையரசன் பழங்குடியின மக்களை பிரதிபலிக்கும் கதாபாத்திரங்களாக மக்கள் மனதில் நிற்கும் வகையில் நடித்திருக்கிறார்கள். 

 

பழங்குடியினத்தைச் சேர்ந்த இளைஞராக அமைதியான முறையில் அநியாயங்களை எதிர்த்து குரல் கொடுக்கும் தினேஷ், பொங்கி எழுந்து தனது விஸ்வரூபத்தை வெளிக்காட்டும் இடங்கள் மெய்சிலிர்க்க வைக்கிறது. வட இந்தியாவில் பரவலாக அறியப்படும் நக்சலைட்டுகள் மக்களுக்கு எதிரானவர்கள் என்ற முத்திரையை அழித்தொழிக்கும் கதாபாத்திரத்தில் அளவாக நடித்து, பார்வையாளர்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறார்.

 

தவறு செய்யாமல் தண்டனை அனுபவிக்கும் எலியோர்களை பிரதிபலிக்கும் கதாபாத்திரத்தில் உணர்வுப்பூர்வமாக நடித்திருக்கும் கலையரசன், தன் உயிர் போகப்போகிறது என்பதை தெரிந்து பதற்றம் அடையும் போதும், அங்கிருந்து தப்பிக்க முயற்சிக்கும் போதும், நடிப்பின் மூலம் படம் பார்ப்பவர்களை பதற்றமடைய செய்துவிடுகிறார். 

 

சபீர் கல்லரக்கல், பாலசரவணன், ரித்விகா, வின்சு சாம், அருள்தாஸ், முத்துகுமார், யுவன் மயில்சாமி என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருப்பதோடு, கதாபாத்திர வடிவமைப்புக்கு ஏற்ற உடல் மொழி மற்றும் நடிப்பின் மூலம், அந்த கதாபாத்திரங்களாகவே பார்வையாளர்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறார்கள்.

 

ஜஸ்டின் பிரபாகரனின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது. டைடில் கார்டு போடும் போதே, பீஜியம் மூலம் கவனம் ஈர்க்கும் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன், “காவக்காடே...” பாடல் மூலம் கதைக்களம் மற்றும் கதை மாந்தர்களின் உணர்வுகளை பார்வையாளர்களிடம் கடத்தி விடுகிறார். 

 

இளையராஜாவின் ”ஓ...ப்ரியா...ப்ரியா...” மற்றும் “மனிதா...மனித...” பாடல்களையும் மிக சரியாக பயன்படுத்தியிருக்கும் ஜஸ்டின் பிரபாகரன், பின்னணி இசை மூலம், “இத்தனை நாளா எங்க பிரதர் இருந்தீங்க...” என்று கேட்க வைத்திருக்கிறார்.  நிச்சயம் அவருக்கு பல விருதுகள் காத்திருக்கிறது.

 

ஒளிப்பதிவாளர் பிரதீப் கலைராஜா, அடர்ந்த வனப்பகுதிகளையும், அப்பகுதிகளை ஒட்டி வாழும் பழங்குடி மக்களின் வாழ்வியலையும் அழகியலோடு மட்டும் இன்றி, அவர்கள் அனுபவிக்கும் வலியையும் பார்வையாளர்களிடம் நேர்த்தியாக கடத்தியிருக்கிறார். 

 

இரண்டு பாகங்களாக சொல்லும் அளவுக்கு விசயங்கள் இருந்தாலும், அதை 2 மணி நேரம், 10 நிமிடங்களில் சொல்லும் அளவுக்கு காட்சிகளை தொகுத்திருக்கும் படத்தொகுப்பாளர் செல்வா.ஆர்.கே, இயக்குநர் சொல்ல நினைத்த மெசஜையும், மக்களிடம் கடத்த முயன்ற உணர்வுகளையும் மிக சரியாக கையாண்டு பாராட்டுப் பெறுகிறார்.

 

எழுதி இயக்கியிருக்கும் அதியன் ஆதிரை, இதுவரை திரையுலகில் சொல்லப்படாத ஒரு கதையை அழுத்தமாகவும், உணர்வுப்பூர்வமாகவும் சொல்லியிருக்கிறார். 

 

வலியோரால் வஞ்சிக்கப்படுகிறவர்கள் தட்டிக் கேட்டாலும், திருப்பி அடித்தாலும் அவர்களுக்கு தீவிரவாதி என்ற முத்திரைக் குத்தும் ஆட்சியாளர்கள் மற்றும் அதிகார வர்க்கத்தினரின் போலியான முகத்திரையை கிழிக்கும் வகையில் மிகப்பெரிய உண்மையை உலகிற்கு உரக்கச் சொல்லியிருக்கிறார்.

 

கலையரசனின் பயணம் வலி மிகுந்ததாகவும், எளிய மக்களின் ஏமாற்றம் நிறைந்த பயணமாக இருப்பது இதயத்தை கனக்கச் செய்யும் வகையில் இருந்தாலும், தினேஷின் பயணம், திடீர் விஸ்வரூபம் பார்வையாளர்களிடம் இருந்து சற்று விலகியிருப்பது போல் தெரிகிறது. இருப்பினும், வஞ்சிக்கப்படும் எளியவர்கள் தான் போராளிகளாக உருவெடுக்கிறார்கள், என்பதை தினேஷ் கதாபாத்திரம் மூலம் மிக எளிமையாக சொல்லி, அந்த கதாபாத்திரத்தையும் மக்களிடம் கொண்டு சேர்த்ததில் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர் அதியன் ஆதிரை.

 

உண்மை சம்பவத்தை மையமாக கொண்ட கதைக்கரு என்றாலும், நாட்டில் நடந்த ஒரு மிகப்பெரிய மோசடியை மிக துணிச்சலோடு சொல்வதோடு, அனைத்து தரப்பினரையும் தொடர்புபடுத்திக் கொள்ளும் ஒரு வலிமையான படைப்பாக கொடுத்திருக்கும் இயக்குநர் அதியன் ஆதிரைக்கு தமிழ் திரையுலகம் மட்டும் அல்ல இந்திய திரையுலகமே சிவப்பு கம்பளம் விரிப்பது உறுதி.

 

மொத்தத்தில், ‘தண்டகாரண்யம்’ சொல்லாத கதை, அனைவரும் பார்க்க வேண்டிய படம்.

 

ரேட்டிங் 4.2/5

Recent Gallery