Casting : Harish Kalyan, Athulyaa Ravi, Vinay Rai, Sai Kumar, Ananya, Karunaas, Bose Venkat, Ramesh Thilak, Kaali Venkat, Vivek Prasanna, Sachin Khedekar, Zakir Hussain, Thangadurai, Maaran, KPY Dheena, Apoorva Singh
Directed By : Shanmugam Muthusamy
Music By : Shanmugam Muthusamy
Produced By : Third Eye Entertainment, SP Cinemas - Devarajulu Markandeyan
2014-க்கு முந்தைய காலக்கட்டத்தில் கதை நடக்கிறது. அந்த காலக்கட்டத்தில், சென்னை துறைமுகத்தில் இருந்து, வட சென்னையில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு கச்சா எண்ணெய் எடுத்துச் செல்ல அமைக்கப்பட்ட ராட்சத குழாய் மூலம் மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழக்கிறார்கள். அந்த திட்டத்திற்கு எதிராக போராடியும் பலன் இல்லாததால் அந்த கிராமத்தை விட்டே வெளியேறும் மீனவர்களில் சிலர், அதே கச்சா எண்ணெயை திருடுவதை தொழிலாக செய்து வருகிறார்கள். அப்படிப்பட்ட கச்சா எண்ணெய் மாஃபியாவை வளர்த்துவிடும் சில பெரும் முதலாளிகளின் சதிதிட்டத்தால், வட சென்னை முழுவதும் உள்ள மீனவ கிராமங்களுக்கு பேராபத்து ஏற்படும் சூழல் உருவாகிறது. இதனை அறிந்துக் கொள்ளும் நாயகன் ஹரிஷ் கல்யாண், சதிதிட்டத்தை முறியடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். அதில் அவர் வெற்றி பெற்றாரா ?, சதிதிட்டத்தின் பின்னணி என்ன ?, அதனால் ஏற்படப்போகும் பேராபத்து என்ன ? என்பதை உண்மைகளுக்கு நெருக்கமாக சொல்வதே ‘டீசல்’.
ஹரிஷ் கல்யாண் ஆக்ஷன் ஹீரோவாக அமர்க்களப்படுத்தியிருக்கிறார். மீனவராக நடித்திருக்கும் ஹரிஷ் கல்யாண் அதற்கான உடல் மொழி உள்ளிட்ட அனைத்தையும் நேர்த்தியாக வெளிப்படுத்தி படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறார். வளர்ப்பு தந்தைக்காக துடிப்பது, இறந்த அம்மாவுடன் பேசுவது என்று செண்டிமெண்ட் காட்சிகள், காதல் காட்சிகள் என அனைத்து ஏரியாவிலும் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பவர், முழு ஆக்ஷன் ஹீரோ என்ற உயரத்தையும் தொட்டு அசத்தியிருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் அதுல்யா ரவி, படம் முழுவதும் பயணித்து திரைக்கதையில் முக்கிய பங்காற்றுகிறார். அதிகம் நடிக்க கூடிய வாய்ப்பு இல்லை என்றாலும், கொடுத்த வேலையை நிறைவாகவே செய்திருக்கிறார்.
வினய், சாய் குமார், போஸ் வெங்கட், அனன்யா, ரமேஷ் திலக், கருணாஸ், சச்சின் கடேகர், ஷாகீர் உசேன் என்று படம் முழுவதும் நிறைந்திருக்கும் முக்கிய நட்சத்திரங்களின் திரை இருப்பு, திரைக்கதைக்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.
மாறன், தங்கதுரை ஆகியோரது டைமிங் காமெடி சிரிக்க வைக்கிறது. கேபிஒய் தீனா நாயகனின் நண்பராக கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்.
திபு நினன் தாமஸின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஹிட் ரகம். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மிகப்பெரிய ஹிட்டான கானா பாடலை படமாக்கிய விதம் சற்று ஏமாற்றம். பின்னணி இசை அளவு.
ஒளிப்பதிவாளர்கள் ரிச்சர்ட் எம்.நாதன் மற்றும் எம்.எஸ்.பிரபு ஆகியோரது ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது. வட சென்னை மீனவ கிராமங்கள் மற்றும் அதைச் சார்ந்த பகுதிகளை காட்சிப்படுத்திய விதம் மற்றும் கடல் சார்ந்த காட்சிகளை படமாக்கிய விதம் காட்சி விருந்தாக அமைந்திருக்கிறது.
எண்ணெய் மாஃபியா என்ற புதிய உலகத்தையும், அதைச் சார்ந்த களத்தையும் மையமாக கொண்ட திரைக்கதையை விறுவிறுப்பாக நகர்த்தி செல்லும் வகையில் படத்தொகுப்பாளர் சான் லோகேஷ் காட்சிகளை தொகுத்திருக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கும் சண்முகம் முத்துசாமி, தனித்துவமான கதைக்களத்துடன், முக்கியமான சமூக பிரச்சனையை பற்றி பேசியிருக்கிறார்.
வட சென்னையில் உள்ள மீனவ கிராமங்களும், மீனவர்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனை பற்றி அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இயக்குநர் சண்முகம் முத்துசாமி, அது வெறும் மீனவர்களுக்கான பிரச்சனை மட்டும் அல்ல, தமிழக மக்களுக்கான பிரச்சனை என்பதை விவரித்த விதம், அதன் பின்னணியில் இருக்கும் உண்மைகளை திரை மொழியில் சொன்ன விதம் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.
முதல் பாதியில் கச்சா எண்ணெய் மாஃபியாவின் அறிமுகம் படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தினாலும், காதல் காட்சிகள் திரைக்கதையை தொய்வடைய செய்கிறது. இரண்டாம் பாதியில் மீனவ கிராமங்கள் எதிர்கொள்ள இருக்கும் பிரச்சனைப் பற்றி பேசி, திரைக்கதையை தொய்வில் இருந்து மீட்கும் இயக்குநர் சண்முகம் முத்துசாமி, அதற்கான தீர்வு உள்ளிட்ட விசயங்களை கமர்ஷியல் பாணியில் சொல்லி படத்தை விறுவிறுப்பாக நகர்த்தி செல்கிறார்.
தனித்துவமான கதைக்களம், இதுவரை சொல்லாத சமூக பிரச்சனை, அதை கையாண்ட விதம், ஆகியவை பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தாலும், தொழில் போட்டி, பழிக்கு பழி என வழக்கமான காட்சி அமைப்புகளால் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டிய மெசஜ் இருந்தும், வழக்கமான ஆக்ஷன் திரில்லர் கமர்ஷியல் படமாகிவிடுகிறது.
மொத்தத்தில், ‘டீசல்’ மக்கள் நிச்சயம் பார்க்க வேண்டிய படம்.
ரேட்டிங் 3.5/5