Casting : Sriram Karthick, Manisha Shree, Fathima Nahum, Vaishali Ravichandran, Jiiva Ravi, Livingston
Directed By : Ramesh Elangamani
Music By : Abubakkar M
Produced By : PVK Film Factory - P. Vijayan
காதல் தோல்வியால் நாயகன் ஸ்ரீராம் கார்த்திக் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார். அப்போது அவரது ஃபேஸ்புக் மெஸன்ஜருக்கு தொடர்ந்து மெசஜ் வந்துக் கொண்டிருக்கிறது. அதை திறந்து பார்க்கிறார். அதில், “தற்கொலை செய்து கொள்ள வேண்டாம், உங்களை நேசிக்கும் பலர் இந்த பூமியில் இருப்பார்கள்” என்ற செய்தி இருக்கிறது. அதை விட அதிர்ச்சி என்னவென்றால், அந்த செய்தியை அனுப்பிய பெண் இரண்டு மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார், என்பது தான்.
இறந்தவர் எப்படி மெசஜ் அனுப்பு முடியும், அவர் உண்மையில் இறந்து விட்டாரா ? என்பதை விசாரிக்கும் ஸ்ரீராம் கார்த்திக்குக்கு மேலும் பல அதிர்ச்சிகரமான உண்மைகள் தெரிய வருகிறது. அது என்ன ? அதன் பிறகு என்ன நடந்தது ? என்பதை, ”மனிதர் உணர்ந்துக் கொள்ள இது மனிதர் காதல் அல்ல”, என்ற ரீதியில் வித்தியாசமாக சொல்வது தான் ‘மெஸன்ஜர்’.
வித்தியாசமான சிந்தனை மற்றும் விபரீதமான காட்சியமைப்புகள் இருந்தாலும், தனது நடிப்பு மூலம் அனைத்தையும் மிக சாமர்த்தியமாக சமாளித்து, நாயகனாக தனது கதாபாத்திரத்திற்கு முழுமையான நியாயம் சேர்த்திருக்கிறார் ஸ்ரீராம் கார்த்திக். தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்கு பஞ்சம் என்று சொல்பவர்கள், ஸ்ரீராம் கார்த்திக் போன்ற நடிகர்களை பயன்படுத்தி, அந்த பஞ்சத்தை போக்கலாம்.
நாயகியாக நடித்திருக்கும் மனிஷா ஸ்ரீ, வழக்கம் போல் கவர்ச்சியில் தாராளம் காட்டவில்லை என்றாலும், அந்த குறையை போக்க லிப் லாக் காட்சி ஒன்றில் நடித்திருக்கிறார். நாயகனின் முன்னாள் காதலியாக நடித்திருக்கும் மனிஷா தன் வேலையை நிறைவாக செய்திருக்கிறார்.
மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் பாத்திமா, கிராமத்து பெண்ணுக்கு ஏற்ற முகத்தோடும், எதிர்பார்ப்புகளோடும் தன் கதாபாத்திரத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்.
பாத்திமாவின் தோழியாக நடித்திருக்கும் வைசாலி ரவிச்சந்திரன், அழகு மற்றும் கவர்ச்சியில் கவனம் ஈர்க்கிறார். திரைக்கதையில் பெரிய திருப்பமாக இருப்பார், என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டு, பாதியிலேயே படத்தில் இருந்து விலகி ஏமாற்றம் அளிக்கிறார்.
ஜீவா ரவி, லிவிங்ஸ்டன், பிரியதர்ஷினி என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வு.
இசையமைப்பாளர் அபுபக்கர்.எம் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் திரைக்கதை ஓட்டத்திற்கு உயிரளித்திருக்கிறது. பாடல்களும், பின்னணி இசையும் தனி கவனம் பெறவில்லை என்றாலும் மெதுவாக செல்லும் திரைக்கதை மற்றும் காட்சிகளை ரசிக்க வைக்கும் விதத்தில் பயணித்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் பால கணேசன்.ஆர், எளிமையான கிராமத்து லொக்கேஷன்களை பல்வேறு கோணங்களில் காட்சியாக்கி ரசிக்க வைத்திருப்பதோடு, நாயகன் மற்றும் நாயகிகளையும் பளிச்சென்று படம்பிடித்து அழகாக காண்பித்திருக்கிறார்.
திகில் கதையை இதுவரை சொல்லாத கோணத்தில் சொல்லும் இயக்குநரின் முயற்சியை சிறப்பாக உள்வாங்கி பணியாற்றியிருக்கும் படத்தொகுப்பாளர் பிரசாந்த்.ஆர்-ன் பணியும் பாராட்டும்படி உள்ளது.
பார்க்காத காதல், ஒருவர் பார்த்து மற்றொருவர் பார்க்காத காதல் என்று தமிழ் சினிமாவில் பல காதல் கதைகள் வந்திருக்கிறது. ஆனால், இயக்குநர் ரமேஷ் இளங்கமணி சொல்லியிருக்கும் இந்த காதல், இதுவரை யாரும் சிந்திக்காத ஒன்று. திகில் படமாக தொடங்கும் கதை, பிறகு காதல் கதையாக விரிவடையும் போது, பார்வையாளர்களை ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியடைய செய்கிறது.
நடைமுறையில் சாத்தியம் இல்லாத ஒன்றாக இருந்தாலும், அதை திரை மொழியில் கொஞ்சம் சுவாரஸ்யமாக சொல்லியிருக்கும் இயக்குநர் ரமேஷ் இளங்கமணி, கதை சொல்லல், திரைக்கதையை கையாண்டது மற்றும் காட்சிகளை படமாக்கியது ஆகியவற்றின் மூலம் ஒரு தரமான படத்தை வித்தியாசமான கதைக்கருவோடு கொடுத்திருக்கிறார்.
மொத்தத்தில், ’மெஸன்ஜர்’ காதலுக்கு கண் இல்லை என்பதை தாண்டி உருவமே இல்லை, என்பதை உணர்த்தும் முயற்சி.
ரேட்டிங் 2.9/5