Latest News :

’ஆரியன்’ திரைப்பட விமர்சனம்

4c27805584a8e601a5bcb73bb585efdb.jpg

Casting : Vishnu Vishal, Selvaraghavan, Shraddha Srinath, Maanasa Choudhary, Karunakaran, Avinash Y

Directed By : Praveen. K

Music By : Ghibran

Produced By : Vishnu Vishal Studioz - Shubhra, Aryan Ramesh and Vishnu Vishal

 

நிருபர் ஷரத்தா ஸ்ரீநாத் தொகுத்து வழங்கும் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், பார்வையாளர்கள் பக்கத்தில் அமர்ந்திருக்கும் செல்வராகவன், திடீரென்று எழுந்து துப்பாக்கி முனையில் அனைவரையும் பிணைக் கைதிகளாக்கி அதிர்ச்சியளிக்கிறார். என்ன வேண்டும் ? என்று அவரிடம் கேட்டால், அடுத்த ஐந்து நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒருவர் என்று ஐந்து பேரை கொலை செய்யப் போகிறேன், முடிந்தால் தடுத்துக் கொள்ளுங்கள், என்று சொல்கிறார். 

 

பிணைக் கைதிகளை காப்பாற்றி விட்டு, செல்வராகவன் மிரட்டல் குறித்து விசாரிக்கும் காவல்துறை, தொடர் கொலைகளை தடுக்க விஷ்ணு விஷால் தலைமையில் குழு ஒன்றை அமைக்கிறது. கொலையாளி செல்வராகவனை பிடிப்பதை விட்டுவிட்டு, அவர் செய்ய இருக்கும் கொலைகளை தடுக்க விஷ்ணு விஷால் முயற்சிக்கிறார். அது ஏன் ? என்பதை இதுவரை சொல்லப்படாத கோணத்தில் சொல்லி, திரில்லர் பட விரும்பிகளை வியக்க வைப்பது தான் ‘ஆரியன்’.

 

காவல்துறை சீருடையில் மிடுக்கான தோற்றத்துடன் கம்பீரமாக வலம் வரும் விஷ்ணு விஷால், கொலை வழக்கை விசாரிக்கும் தோணியில் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி திரைக்கதைக்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறார். மானாசா உடனான காதல், திருமணம், விவாகரத்து என்று அவரது தனிப்பட்ட வாழ்க்கையின் பாதிப்புகளை ஒரு பாடலின் மூலம் வெளிக்காட்டினாலும், அதை தனது அழுத்தமான நடிப்பு மூலமாகவும், உடல் மொழி மூலமாகவும் அனாசியமாக ரசிகர்களிடத்தில் கடத்தி அசத்தியிருக்கிறார். கொலைகளை தடுப்பதற்கான முயற்சியில், அவர் சேகரிக்கும் தகவல்கள், அதனை வைத்து நடத்தும் விசாரணை என்று படத்தின் விறுவிறுப்புக்கு பாதிப்பில்லாத வகையில் இறுக்கமான நடிப்பை வெளிப்படுத்தி தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார்.

 

வில்லனாக நடித்திருக்கும் செல்வராகவன், சைக்கோ கொலையாளியாக பயமுறுத்தவில்லை என்றாலும், அடுத்து யாரை கொலை செய்யப் போகிறார் ? என்ற கேள்வியை படம் முழுவதும் ஏற்படுத்தி பார்வையாளர்களை பதற்றத்துடனே வைத்திருக்கிறார். அலட்டல் இல்லாத அவரது நடிப்பு, இயல்பான உடல் மொழி ஆகியவை, அவர் செய்யும் அனைத்து விசயங்களையும் நம்ப வைத்துவிடுகிறது.

 

தொலைக்காட்சி நிருபராக நடித்திருக்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், விஷ்ணு விஷாலின் மனைவியாக நடித்திருக்கும் மானசா செளத்ரி, கருணாகரன், அவினாஷ் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் திரைக்கதை ஓட்டத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்கள்.

 

வேகமான திரைக்கதை, விறுவிறுப்பான காட்சிகள் என்று படம் பயணித்தாலும், கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் பார்வையாளர்களிடம் தனது பின்னணி இசை மூலம் கடத்துகிறார் இசையமைப்பாளர் ஜிப்ரான். 

 

பயப்படுவதையும் தாண்டிய ஒரு உணர்வை பார்வையாளர்களிடம் ஏற்படுத்த வேண்டும், என்ற சவாலை மிக சாமர்த்தியமாக கையாண்டிருக்கும் ஒளிப்பதிவாளர் ஹரிஷ் கண்ணன், தன் கேமரா கோணங்கள் மற்றும் வண்ணங்கள் மூலம், பார்வையாளர்களை படத்துடன் ஒன்றிவிட செய்கிறார்.

 

படத்தொகுப்பாளர் ஷான் லோகேஷின் படத்தொகுப்பு மற்றும் சண்டைப் பயிற்சி இயக்குநர்கள் ஸ்டண்ட் ஷில்வா, பி.சி ஸ்டண்ட் பிரபு ஆகியோரது சண்டைக்காட்சிகளும் படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது.

 

எழுதி இயக்கியிருக்கும் பிரவீன்.கே, இதுவரை சொல்லப்படாத ஒரு கோணத்தில் சைக்கோ திரில்லர் கதையை கையாண்டிருப்பதோடு, அதை நம்பும்படி லாஜிக்கோடு திரைக்கதை மற்றும் காட்சிகளை வடிவமைத்திருப்பது படத்திற்கும் பெரும் பலம் சேர்த்திருக்கிறது.

 

கொலையாளி யார்? என்பது தெரிந்து விட்டாலும், அவரைப் பற்றி சிந்திக்க விடாமல், அவர் செய்யப் போகும் கொலைகள் மற்றும் அதனை தடுக்க முயற்சிக்கும் ஹீரோவின் பயணத்தை படு சுவாரஸ்யமாக சொல்லியிருக்கும் இயக்குநர் அவ்வபோது செல்வராகவனின் செயல்களை புத்திசாலித்தனமாக சித்தரித்து காட்சிக்கு காட்சி வியக்க வைக்கிறார்.

 

பொதுவாக சைக்கோ திரில்லர் படம் என்றாலே, கொலைகளை இரத்தமும், சதையுமாக காட்சிப்படுத்தி பார்வையாளர்களை கதிலங்க வைக்க முயற்சிப்பார்கள். ஆனால், அத்தகைய எந்தவித முயற்சியும் மேற்கொள்ளாமல், ஒவ்வொரு கொலைகளையும் அறிவியல் பூர்வமாக நிகத்துவதோடு, காட்சிகளில் எந்தவித வன்மத்தையும் வெளிப்படுத்தாமல், அதன் பின்னணியில் மிகப்பெரிய சமூகப் பிரச்சனையை சொல்லியிருக்கும் இயக்குநர் பிரவீன்.கே, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, என அனைவரும் பார்க்க கூடிய ஒரு சைக்கோ திரில்லர் படமாகவும் கொடுத்திருக்கிறார். 

 

கொலைகளை வைத்து குற்றவாளியை பிடிக்கும் ஒரு பயணமும், கொலைகளுக்கான பின்னணியும் தான், தொடர் கொலைகளை மையமாக கொண்ட சைக்கோ திரில்லர் படங்களின் பாணி. இத்தகைய பாணியில் தான் இதுவரை வெளியாகி வெற்றி பெற்ற சைக்கோ திரில்லர் படங்களும் பயணித்துள்ளது. ஆனால், இப்படிப்பட்ட பாணி துளியும் இல்லாமல், முழுக்க முழுக்க புதிய முயற்சியில் ஒரு சைக்கோ திரில்லர் படமாக கொடுத்து வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர் பிரவீன்.கே.

 

மொத்தத்தில், ‘ஆரியன்’ ஆச்சரியப்பட வைக்கிறான்.

 

ரேட்டிங் 4/5

Recent Gallery