Casting : Kappes Poovaiyar, Ajay Arnold, Arjun, Soundararaja, Sai Dheena, Vela Ramamoorthy, Thalaivasal Vijay, Jawa Sundaresan, Kitcha Ravi, Vinodhini Vaidynathan, Haritha, Rama
Directed By : Jayavel
Music By : T.R.Krishna Chetan
Produced By : Annai vailankanni Studios - T.S.Clement Suresh
சிறு வயது முதல் நண்பர்களாக இருக்கும் ராம், அப்துல்லா, ஆண்டனி ஆகிய மூன்று பேரும், அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் நிலையில், மூவரும் இணைந்து தொழிலதிபர் வேல ராமமூர்த்தியின் பேரனான, 12 வயது சிறுவனை கடத்தி கொடூரமாக கொலை செய்கிறார்கள். அவர்களின் இத்தகைய கொடூர செயலின் பின்னணி என்ன ? என்பதை பரபரப்பும், விறுவிறுப்பும் நிறைந்த படமாக மட்டும் இன்றி, அதன் மூலம் சமூகத்திற்கு மிகப்பெரிய செய்தியை சொல்வது தான் ‘ராம் அப்துல்லா ஆண்டனி’.
ஆண்டனி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கப்பீஸ் பூவையார், ராம் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அஜய் அர்னால்டு, அப்துல்லா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அர்ஜூன் ஆகிய மூன்று பேரும், தங்களது ஆரம்பக்கட்ட செயல்கள் மூலம் அதிர வைக்கிறார்கள். படத்தின் ஆரம்பத்தில் அதிர வைக்கும்படி நடித்தாலும், அடுத்தடுத்த காட்சிகளில் இவர்களின் நட்பின் ஆழம் மற்றும் அதனை வெளிப்படுத்தும் இவர்களது நடிப்பு பார்வையாளர்களை கலங்கடித்து விடுகிறது.
பல படங்களில் நடித்திருக்கும் செளந்தரராஜன் இந்த படத்தில் தான் நடித்திருக்கிறார். கருடன் என்ற கதாபாத்திரத்தில் திரைக்கதையின் திருப்பமாக வலம் வரும் அவரது திரை இருப்பு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் சாய் தீனா, தொழிலதிபராக நடித்திருக்கும் வேல ராமமூர்த்தி, தலைவாசல் விஜய், ஜாவா சுந்தரேசன், கிச்சா ரவி, வினோதினி வைத்யநாதன், ஹரிதா, ரமா ஆகியோர் வழக்கம் போல் வந்து போனாலும், திரைக்கதை ஓட்டத்திற்கு உயிரூட்டியிருக்கிறார்கள்.
செவிலியர் வேடத்தில் நடித்திருக்கும் நடிகை, ஒத்த குத்து பாட்டு மூலம் கவனம் ஈர்த்து விடுகிறார்.
இசையமைப்பாளர் டி.ஆர்.கிருஷ்ண சேட்டன் இசையில் பாடல்கள் அனைத்தும் ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசை அளவு. ஒளிப்பதிவாளர் எல்.கே.விஜயின் பணி படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
எழுதி இயக்கியிருக்கும் ஜெயவேல், பள்ளி மாணவர்கள் 12 வயது சிறுவனை எதற்காக கொடூரமாக கொலை செய்கிறார்கள் ? என்ற கேள்வியை வைத்துக் கொண்டு, ஆரம்பம் முதல் முடிவு வரை, படத்தை விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் நகர்த்திச் செல்கிறார்.
சிறுவன் கொலைக்கு பின்னணியில் நிச்சயம் ஒரு காரணம் இருக்கும் என்றாலும், அது என்னவாக இருக்கும் என்பதை பார்வையாளர்கள் யூகிக்க முடியாதபடி பல்வேறு திருப்பங்களுடன் திரைக்கதையை மிக சுவாரஸ்யமாக நகர்த்திச் சென்றிருக்கும் இயக்குநர் ஜெயவேல், இரண்டு மணி நேரம் ஒட்டுமொத்த பார்வையாளர்களையும் இருக்கையின் நுணியில் உட்கார வைத்துவிடுகிறார்.
மொத்தத்தில், ‘ராம் அப்துல்லா ஆண்டனி’ முதல் மதிப்பெண் மாணவர்கள்.
ரேட்டிங் 4/5