Latest News :

’கிறிஸ்டினா கதிர்வேலன்’ திரைப்பட விமர்சனம்

89a2ee564503d9155d2a905aa3e668d4.jpg

Casting : Kaushik, Pratibha, Aarul Shankar, Singam Puli, Silumisham Shiva, Kanja Karuppu, Alex pandian

Directed By : Alex Pandian

Music By : NR Raghunanthan

Produced By : Sri Lakshmi Dream Factory - Dr.R.Prabakar Sthapathy

 

நாயகன் கெளசிக், நாயகி பிரதீபாவை கண்டதும் காதல் கொள்கிறார். அவரது ஒருதலை காதலை வளர்ப்பதற்காக பிரதீபா படிக்கும் கல்லூரியில் சேர்கிறார். இருவரும் கண்களால் காதலை பரிமாறிக் கொண்டாலும், காதலை வெளிப்படுத்தாமல் வலம் வருகிறார்கள். இதற்கிடையே, கெளசிக் தனது நண்பரின் பதிவு திருமணத்திற்கு உதவி செய்யும் விதத்தில் தனது ஆதார் அட்டை உள்ளிட்ட விபரங்களை கொடுக்கிறார். பெண் சார்பாக பிரதீபாவும் தனது விபரங்களை கொடுக்க, தவறுதலாக கெளசிக் மற்றும் பிரதீபாவுக்கு திருமணம் நடைபெற்றதாக பதிவு சான்றிதழ் கொடுக்கப்பட்டு விடுகிறது. 

 

இந்த விசயம் பிரதீபா குடும்பத்திற்கு தெரிந்து பெரிய சிக்கலாகி விடுகிறது. இந்த சிக்கலில் இருந்து பிரதீபாவை காப்பாற்ற முயற்சியில் ஈடுபடும் கெளசிக்குக்கு பிரதீபா பற்றிய வேறு ஒரு தகவல் தெரிய வருகிறது. அந்த தகவலால் கெளசிக் மட்டும் அல்ல, படம் பார்ப்பவர்களும் பேரதிர்ச்சியடைகிறார்கள். அது என்ன ?, கெளசிக்கின் காதல் ஜெயித்ததா ? இல்லையா ? என்பதை கவிதை போல் சொல்வது தான் ‘கிறிஸ்டினா கதிர்வேலன்’.

 

நாயகனாக நடித்திருக்கும் கெளசிக், குழந்தைத்தனமான முகத்தோடு காதல் கதைக்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார். டெல்டா மாவட்ட இளைஞராக துடிதுடிப்பான நடிப்பு மூலம் கவனம் ஈர்ப்பவர், தன் காதலை வெளிக்காட்ட முடியாமல் தவிக்கும் காட்சிகளிலும், தனக்கே தெரியாமல் நடந்த தவறால் தண்டிக்கப்படும் போதும், அவரது பரிதாபமான நடிப்பு பார்வையாளர்களை கலங்க வைத்து விடுகிறது. குறிப்பாக இறுதிக் காட்சியில் தன் காதலிக்காக கதறும் காட்சியில் கைதட்டல் பெற்றுவிடுகிறார்.

 

நாயகியாக நடித்திருக்கும் பிரதீபா குடும்ப பாங்கான முகம், அளவான அழகு மற்றும் நடிப்பு. கிறிஸ்டினா என்ற கதாபாத்திரமாகவே வாழ்ந்திருப்பவர் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்.

 

அருள் டி.சங்கர், சிங்கம் புலி, கஞ்சா கருப்பு ஆகியோரது அனுபவம் வாய்ந்த நடிப்பு மற்றும் அவர்களது திரை இருப்பு படத்திற்கு பெரும் அடையாளமாக பயணப்பட்டிருக்கிறது.

 

நாயகனின் நண்பராக நடித்திருக்கும் சில்மிஷம் சிவா, வழக்கறிஞராக நடித்திருக்கும் படத்தின் இயக்குநர் அலெக்ஸ் பாண்டியன் ஆகியோரது கதாபாத்திரங்களும், நடிப்பும் பார்வையாளர்களின் இறுக்கத்தை போக்கி இலகுவான மன நிலைக்கு அழைத்துச் செல்கிறது. 

 

இசையமைப்பாளர் என்.ஆர்.ரகுநந்தனின் இசையில் பாடல்கள் காதலை கொண்டா வைத்திருக்கிறது. பின்னணி இசையும் நேர்த்தி.

 

ஒளிப்பதிவாளர் பிரகத் முனியசாமியின் கேமரா, கதாபாத்திரமாக பயணித்திருக்கிறது. கதாபாத்திரங்களின் உணர்வுகளை பார்வையாளர்களிடம் கடத்துவதோடு, இரவு நேரக் காட்சிகளையும், அதில் நடக்கும் சம்பவங்களையும் மிக நேர்த்தியாக படமாக்கி பாராட்டு பெறுகிறது.

 

எழுதி இயக்கியிருக்கும் அலெக்ஸ் பாண்டியன், காதல் கதையை உணர்வுப்பூர்வமாகவும், கொண்டாடும் விதமாகவும் சொல்லியிருக்கிறார். 

 

சிறந்த காதல் கவிதையை வாசித்த அனுபவம் ஏற்படுவது போல் காதல் காட்சிகளை படமாக்கியிருக்கும் இயக்குநர் அலெக்ஸ் பாண்டியன், காதல் கதையை கண்ணியத்துடன் சொல்லி அனைத்து தரப்பு மக்களையும் கொண்டாட வைத்திருக்கிறார்.

 

மொத்தத்தில், ‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ காதலுக்கு ஜே சொல்ல வைக்கும்.

 

ரேட்டிங் 3.2/5

Recent Gallery