Casting : Anandraj, Samyuktha, Deepa, Sasilaya, Munishkanth, Raams, Aradhya
Directed By : A.S. Mukundan
Music By : Srikanth Deva
Produced By : Anna Productions - V.Suganthi Annadurai
சென்னையின் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு ரவுடியை ஏஜெண்டாக வைத்து அதன் மூலம் பல குற்ற செயல்களில் ஈடுபட்டு வரும் தாதா ஆனந்தராஜ், மீது எநத ஒரு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்றாலும், அவருக்கு எதிரான ஆதாரங்களை திரட்டி, அவரை கைது செய்யும் முயற்சியில் காவல்துறை அதிகாரி சம்யுக்தா ஈடுபடுகிறார். அதே சமயம், தொழில் போட்டி காரணமாக உடன் இருக்கும் சிலர் ஆனந்தராஜை கொலை செய்ய திட்டம் போடுகிறார்கள். இந்த இரண்டு தரப்பினரிடம் இருந்து ஆனந்தராஜ் தப்பித்து, தனத மாஃபியா தொழிலை தொடர்ந்தாரா ? இல்லையா ? என்பதை கலகலப்பாக சொல்வதே ’மெட்ராஸ் மாஃபியா கம்பேனி’.
வில்லனாக மிரட்டிவிட்டு தற்போது நகைச்சுவை நடிகராக சிரிக்க வைத்துக் கொண்டிருக்கும் ஆனந்தராஜ், இந்த படத்தில் வில்லத்தனமான நடிப்பு மூலம் மிரட்டவும் செய்கிறார், நக்கலான பேச்சின் மூலம் சிரிக்க வைக்கும் பணியையும் செய்திருக்கிறார்.
காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் சக்யுக்தா, காக்கி சீறுடையில் கம்பீரமாக இருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளிலும் அமர்க்களப்படுத்தியிருப்பவர், தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்.
ஆனந்தராஜின் மனைவியாக நடித்திருக்கும் தீபா, கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்து சில இடங்களில் சிரிக்க வைக்கிறார்.
கொண்டித்தோப்பு வரதன் என்ற ரவுடி கதாபாத்திரத்தில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களோடு வலம் வந்தாலும், படம் முழுவதும் பார்வையாளர்களை சிரிக்க வைத்துக் கொண்டிருக்கிறார் முனீஷ்காந்த்.
ஆனந்தராஜின் மகளாக நடித்திருக்கும் ஆராத்யா, அளவான அழகு மற்றும் நடிப்பு மூலம் கவர்கிறார்.
ராம்ஸ், சசிலயா உள்ளிட்ட மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் தாளம் போட வைக்கும் குத்துப்பாட்டும், மெய்மறந்து ரசிக்க வைக்கும் மெலொடி பாட்டும் படத்திற்கு பலமாக பயணித்திருக்கிறது. பின்னணி இசையிலும் குறையில்லை.
ஒளிப்பதிவாளர் அசோக்ராஜின் கேமரா காட்சிகளை கலர்புல்லாக படமாக்கி படத்தின் தரத்தை உயர்த்தியிருக்கிறது.
கதை எழுதியிருக்கும் வி.சுகந்தி அண்ணாதுரை, ”ஆட்டம் போடுபவர்கள் ஒருநாள் நிச்சயம் அடங்கிப் போவார்கள், அப்போது அவர்களுக்கு சொந்தம் என்று நினைத்த எதுவும் அவர்களுடையது அல்ல, என்ற உண்மை தெரிய வரும்” என்ற கருத்தை உணர்த்த முயற்சித்திருக்கிறார்.
திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் ஏ.எஸ்.முகுந்தன், கதையாசிரியரின் கருத்து சீரியஸானதாக இருந்தாலும், அதை கமர்ஷியல் காமெடி ஜானர் மூலம் சொல்ல முயற்சித்திருக்கிறார்.
ஆனந்தராஜ் என்ற நடிகரை கதையின் நாயகனாக வைத்துக் கொண்டு காமெடி படமாக மட்டும் இன்றி மக்களுக்கு கருத்து சொல்லும் விதமாகவும் திரைக்கதையை கையாண்டிருக்கும் இயக்குநர் ஏ.எஸ்.முகுந்தன், அனைத்து விதமான கமர்ஷியல் அம்சங்களையும் சேர்த்து பார்வையாளர்களுக்கு பொழுதுபோக்கு விருந்து படைத்திருக்கிறார்.
மொத்தத்தில், ‘மெட்ராஸ் மாஃபியா கம்பெனி’ லாபம் அடையும்.
ரேட்டிங் 3/5