Casting : Suriya, Samantha Ruth Prabhu, Vidyut Jammwal, Manoj Bajpayee, Dalip Tahil
Directed By : N. Linguswamy
Music By : Yuvan Shankar Raja
Produced By : Thirrupathi Brothers - Siddharth Roy Kapur, N. Subash Chandrabose
மும்பையில் வளர்ந்து வரும் டானான சூர்யா தனது நண்பர் வித்யுத் ஜம்வாலுக்காக எதையும் செய்யக் கூடியவர். அதன்படி, அவருக்காக செய்யும் ஒரு சம்பவத்தின் மூலம் அவருக்கும் சமந்தாவுக்கும் ஏற்படும் நட்பு காதலாக மாறுகிறது. இதற்கிடையே, சூர்யா மற்றும் வித்யுத் ஜம்வால் வளர்ச்சியை கண்டு கோபமடையும் மும்பையின் மிகப்பெரிய நிழல் உலக தாதாவான மனோஜ் பாஜ்பயி, அவர்களை அழைத்து கொலை மிரட்டல் விடுத்து அசிங்கப்படுத்தி விடுகிறார். பதிலடியாக சூர்யா, மனோஜ் பாஜ்பயிக்கு மரண பயத்தை காட்டுகிறார்.
இதனால், சூர்யா மற்றும் வித்யுத் ஜம்வால் இருவரையும் மனோஜ் பாஜ்பயி கொலை செய்து விட, பல வருடங்களுக்குப் பிறகு தமிழ்நாட்டில் இருந்து அண்ணனை தேடி மும்பைக்கு வருகிறார் தம்பி சூர்யா. அண்ணன் பற்றி விசாரிக்கும் தம்பி சூர்யாவின் வருகையை அறிந்த எதிரிகள் அவரையும் கொலை செய்ய முயற்சிக்கிறார்கள். அப்போது தம்பி என்று சொன்னவர், திடீரென்று மும்பை டான் சூர்யாவாக உருவெடுக்கிறார். இறந்தவர் எப்படி உயிர்பிழைத்தார் ? என்ற கேள்வியோடு, அவர் செய்யும் அடுத்தடுத்த நடவடிக்கைகளை ஆச்சரியம் கலந்த மாஸ் சம்பவங்களாக விவரிப்பது தான் ‘அஞ்சான்’.
2014 ஆம் ஆண்டு வெளியாகி கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்ட ‘அஞ்சான்’ படத்தை விரும்பும் கூட்டமும் இருக்கிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஒன்றாக அமர்ந்து பார்க்க கூடிய படமாக மட்டும் இன்றி, சூப்பர் ஹிட் பாடல்களை கொண்ட கலர்புல் கமர்ஷியல் ஆக்ஷன் படமாக இருந்ததால், இப்படத்திற்கான ரசிகர் வட்டமும் பெரியதாகவே இருக்கிறது.
அப்படி இருந்தும், சிலர் செய்த திட்டமிட்ட சில செயல்களால் வீழ்த்தப்பட்ட ‘அஞ்சான்’ தற்போது சில மாற்றங்களுடன் மீண்டும் தனது ரசிகர்களை கவரும் விதத்தில் வெளியாகியுள்ளது.
படத்தின் கதை என்னவென்று ஏற்கனவே படம் பார்த்தவர்கள் அறிந்திருந்தாலும், எதிர்பார்ப்பு மற்றும் சுவாரஸ்யத்தை தர்க்கூடிய விதத்தில் மறு படத்தொகுப்பு அமைந்திருக்கிறது. அதே சமயம், படம் பார்க்காதவர்களுக்கு நிச்சயம் முழுமையான பொழுதுபோக்கு அனுபவத்தை கொடுக்கும்.
சூர்யாவின் உடை மற்றும் சிகை அலங்காரம், அவர் வாயில் குச்சியை வைத்துக் கொண்டு வலம் வருவது சிறுவர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு, அவரது ரசிகர்களை கொண்டாடவும் வைத்தது. இப்போது பார்த்தாலும் அதே கொண்டாட்ட மனநிலை தான் அவரது ரசிகர்களுக்கு ஏற்படும்.
நாயகியாக நடித்த சமந்தா, படம் பார்ப்பவர்களை ஏங்க வைக்கும் அழகியாக வலம் வருகிறார். அதிலும், பாடல் காட்சிகளில் ஆடை குறைப்பில் தாராளம் காட்டியபடி அவர் ஆடும் நடன அசைவுகள் ஆபாசம் இல்லாத அழகாக இருப்பதால், சமந்தாவை பார்த்துக் கொண்டே இருக்கலாம், என்ற என்னத்தை உண்டாக்குகிறது.
வித்யுத் ஜம்வால், வில்லனாக நடித்த மனோஜ் பாஜ்பயி ஆகியோரது நடிப்பு ஸ்டைலிஷாகவும், மிரட்டலாகவும் இருக்கிறது. மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வு.
யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் மெய்மறக்கச் செய்கிறது. மாஸ் மற்றும் கிளாஷோடு பயணிக்கும் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.
படத்தொகுப்பாளர் ஆண்டனி, தற்போது மறு படத்தொகுப்பு பிரதியில் சுமார் 36 நிமிடங்களை குறைத்திருக்கிறார். குறிப்பாக, காமெடி நடிகர் சூரியின் அட்டகாசங்கள் முழுமையாக அகற்றப்பட்டிருப்பது பெரும் ஆறுதல்.
எழுதி இயக்கியிருக்கும் லிங்குசாமி, அனைத்து தரப்பினரும் தியேட்டருக்கு சென்று பார்க்க கூடிய ஒரு முழுமையான கமர்ஷியல் படமாகவும், சூர்யாவின் ரசிகர்களுக்கான மாஸ் படமாகவும் கொடுத்திருக்கிறார்.
உச்ச நடிகரான சூர்யாவை எப்படி கையாள வேண்டும், அவரது ரசிகர்கள் மட்டும் இன்றி, சினிமா ரசிகர்களையும் எப்படி திருப்திப்படுத்த வேண்டும், என்பதில் அதிகம் கவனம் செலுத்திருப்பவர், முந்தைய பிரதியில் இருந்த சிறு சிறு தவறுகளை இதில் சரி செய்து, அஞ்சானுக்கு மீண்டும் புத்துயிர் அளித்துள்ளார்.
மொத்தத்தில், ‘அஞ்சான்’ அசராதவன்.
ரேட்டிங் 3.2/5