Casting : Harish Ori, Abirami Bose
Directed By : Saranraj Senthilkumar
Music By : Bharath Asigavan
Produced By : Harish Ori
நாயகன் ஹரிஷ் ஓரி தனது குடும்பத்துடன் தலைமறைவு வாழ்க்கை வாழ்வதற்காக, சாலை வசதியே இல்லாத தனது மலை கிராமத்திற்கு செல்கிறார். அங்கிருக்கும் அவரது உறவினர் வீட்டில் தங்கிக் கொண்டு சுமை தூக்கும் வேலையை செய்துக் கொண்டிருப்பவர், விஷேசங்களுக்காக மட்டுமே தயாரிக்கப்படும், அங்கு மட்டுமே கிடைக்கும் ஒருவித போதை பொருளை வியாபாரமாக்கி பணம் சம்பாதிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்.
இதற்கிடையே, அந்த மலை கிராம மக்களை ஏமாற்றி, அவர்களது நிலத்தை அபகரித்து, அந்த மக்களை அங்கிருந்து வெளியேற்றி, அப்பகுதியை சுற்றுலாத் தளமாக மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கும் முன்னாள் ஊர் தலைவரின் திட்டத்தை அறிந்து அதை முறியடிக்க முயற்சிக்கிறார் ஹரிஷ் ஓரியின் மனைவி அபிராமி போஸ்.
கணவன் - மனைவி இருவரது முயற்சியால் என்ன என்ன பாதிப்புகள் ஏற்பட்டது, இதனால் அந்த மலை கிராம மக்களின் வாழ்க்கையில் எத்தகைய மாற்றங்கள் ஏற்பட்டது, நாயகனின் தலைமறைவு வாழ்க்கையின் பின்னணி என்ன ? என்பதை கமர்ஷியல் பாணியில் சொல்லியிருப்பது தான் ‘வெள்ளகுதிர’.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் ஹரிஷ் ஓரி, கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார். கதிர் கதாபாத்திரத்தில் தனது உள்ளத்தில் மறைந்திருக்கும் தீய சிந்தனைகளை அவ்வபோது வெளிப்படுத்தி, அதன் மூலம் பிரச்சனையில் சிக்கிக்கொண்டு, தனது குடும்பத்தையும் பிரச்சனைகளில் சிக்க வைக்கும் நபராக நேர்த்தியாக நடித்திருக்கிறார்.
ஹரிஷ் ஓரியின் மனைவியாக நடித்திருக்கும் அபிராமி போஸ், கிராமத்து பெண்ணாகவும், அளவான நடிப்பாலும் கதைக்களத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.
முன்னாள் ஊர் தலைவர், மலை கிராம மக்கள் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் நடிகர்கள் சிலர் பரிட்சயம் உள்ள முகமாகவும், பலர் பரிட்சயம் இல்லாதவர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால், அனைவரும் அந்த மலை கிராம மக்களாக பார்வையாளர்கள் மனதில் இடம் பிடிக்கும் விதத்தில் இயல்பாக நடித்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் பரத் ஆசிகவன், பாடல்கள் இல்லை என்றாலும் தனது எளிமையான பின்னணி இசை மூலம் வியக்க வைக்கிறார்.
ஒளிப்பதிவாளர் ராம் தேவ், எந்தவித விளக்குகளையும் பயன்படுத்தாமல் ஒளிப்பதிவு செய்திருந்தாலும், காட்சிகளை தரமாக படமாக்கியிருக்கிறார்.
குறிப்பிட்ட சில கதாபாத்திரங்கள், ஒரே ஒரு லொக்கேஷன் என படம் நகர்ந்தாலும், கதாபாத்திரங்கள் மனநிலை, அவர்களது நடிப்பு ஆகியவற்றின் மூலமாக படத்தை ரசிக்க கூடிய விதத்தில் படத்தொகுப்பாளர்கள் பிரதீப் மற்றும் சரண்ராஜ் செந்தில்குமார் காட்சிகளை தொகுத்திருக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கும் சரண்ராஜ் செந்தில்குமார், சாலை வசதிகள் மற்றும் சில அடிப்படை தேவைகள் இல்லாத மலை கிராம மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை பற்றி மட்டுமே பேசாமல், அந்த நிலப்பரப்பில் தஞ்சம் அடையும் ஒரு குடும்பத்தை மையமாக கொண்டு, ஒரு சஸ்பென்ஸ் கமர்ஷியல் படமாகவும் கொடுத்திருக்கிறார்.
மலை கிராம மக்களின் வலிகளை சொல்லும் படங்கள் பல வடிவங்களில் பல வந்திருந்தாலும், அவற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இருக்கும் வகையில், மூலிகை ரசம் உள்ளிட்ட புதிய விசயங்களை சேர்த்து, படத்தை சுவாரஸ்யமாக நகர்த்திச் செல்லும் இயக்குநர் சரண்ராஜ் செந்தில்குமார், ஒரு சாதாரண கதையை திறம்பட சொல்லி பார்வையாளர்களின் கவ்னாம் ஈர்ப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார்.
மொத்தத்தில் ‘வெள்ளகுதிர’ கவனம் ஈர்க்கும்.
ரேட்டிங் 3.2/5