Latest News :

’ரிவால்வர் ரீட்டா’ திரைப்பட விமர்சனம்

233a5e7f2b53381c67db023ad5ded9c4.jpg

Casting : Keerthy Suresh, Radhika Sarathkumar, Super Subbarayan, Sunil, Ajay Ghosh, Redin Kingsley, John vijay, Kalyan Master, Suresh Chakravarthy, Kathiravan, Sendrayan, Augustin, Blade Shankar, Ramachandran, Akshatha Ajith, Kuhasini, Gayatri Shan

Directed By : JK.Chandru

Music By : Sean Roldan

Produced By : Passion Studios & The Route - Sudhan Sundaram & Jagadish Palanisamy

 

பாண்டிச்சேரியின் பெரிய ரவுடியான சூப்பர் சுப்பராயன், தவறுதலாக கீர்த்தி சுரேஷின் வீட்டுக்குள் புகுந்து விட, அவரை வெளியேற்றும் முயற்சியில் கீழே விழுந்து உயிரிழந்து விடுகிறார். அவரது மகனான சுனில், காணாமல் போன தனது தந்தையை அடியாட்களுடன் தேட, மறுபக்கம் உயிரிழந்த ரவுடியின் உடலகை கைப்பற்றி அதன் மூலம்  ரூ.5 கோடி பெறுவதற்காக சிலர் முயற்சிக்கிறார்கள். 

 

இதற்கிடையே, உடலை அப்புறப்படுத்தும் முயற்சியில் கீர்த்தி சுரேஷின் குடும்பம் ஈடுபடும் போது, அவரால் பாதிக்கப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான் விஜய், கீர்த்தி சுரேஷை பழிவாங்க துடிக்கிறார். 

 

இப்படி பிணத்தின் பின்னாடி ஒரு கூட்டமும், கீர்த்தி சுரேஷ் பின்னாடி போலீஸும், காணாமல் போன ரவுடியை தேடி அவரது ரவுடி குடும்பம்பமும் மேற்கொள்ளும் இந்த பயணம் இறுதியில் ஒரே புள்ளியில் இணைய, இது கீர்த்தி சுரேஷின் குடும்பத்திற்கு சாதகமாக அமைந்ததா அல்லது பாதகமாக அமைந்ததா? என்பதை பிளாக் காமெடி ஜானரில் சொல்ல முயற்சித்திருப்பது தான் ‘ரிவால்வர் ரீட்டா’.

 

கதையின் நாயகியாக நடித்து தேசிய விருது பெற்ற கீர்த்தி சுரேஷ், இந்த முறை காமெடியில் அசத்த முயற்சித்திருக்கிறார். அவரது முயற்சி பல இடங்களில் கைகொடுத்தாலும் சில இடங்களில் அவரை கைவிட்டுள்ளது. இளமையாகவும், அழகாகவும் இருக்கும் கீர்த்தி சுரேஷ், அளவான நடிப்பு மூலம் ரீட்டாவாக பார்வையாளர்கள் மனதில் நின்றுவிடுகிறார்.

 

கீர்த்தி சுரேஷின் அம்மாவாக நடித்திருக்கும் ராதிகா, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தன்னுடன் நிற்பவர்களை தனது நடிப்பு திறமையால் ஓரம் கட்டிவிடுகிறார். சில இடங்களில் கீர்த்தி சுரேஷுக்கும் இதே நிலை தான்.

 

தெலுங்கு நடிகர் சுனில் தோற்றத்தில் மட்டும் இன்றி நடிப்பிலும் புதியவராக தெரிகிறார். அவரது தம்பியாக நடித்திருக்கும் ரெடின் கிங்ஸ்லியின் மேனரிசத்தையும், வசன உச்சரிப்பையும் ஆரம்பத்தில் பொறுத்துக் கொண்டாலும், அதையே படம் முழுவதும் தொடர்வது சற்று கோபத்தை உண்டாக்குகிறது.

 

அஜய் கோஸ் வில்லனாக மிரட்டாமல் நகைச்சுவை நடிகராக சிரிக்க வைக்கிறார். வில்லத்தனமும் இன்றி, நகைச்சுவையும் இன்றி, ஜான் விஜய் எதை எதையோ செய்து காட்சிகளை கடத்தியிருக்கிறார்.

 

கல்யாண் மாஸ்டர், சுரேஷ் சக்கரவர்த்தி, கதிரவன், செண்ட்ராயன், அகஸ்டின், அக்‌ஷதா அஜித், காயத்ரி ஷான், குஹாசினி, பிளேட் சேகர், ராமச்சந்திரன் என மற்ற வேடங்களில் நடித்திருக்கும் ஒன்று, இரண்டு பேரை தவிர மற்றவர்கள் அனைவரும் பார்வையாளர்களை சிரிக்க வைக்க பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

 

ஷான் ரோல்டன் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கமர்ஷியல் அம்சங்களோடு பயணித்திருக்கிறது.

 

ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணா.பி, காட்சிகளை கலர்புல்லாகவும், படத்தை பிரமாண்டமாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார். 

 

படத்தொகுப்பாளர் பிரவீன்.கே.எல் பணியில் குறையில்லை.

 

எழுதி இயக்கியிருக்கும் ஜெ.கே.சந்துரு, நாம் பழக்கப்பட்ட ஒரு கதைக்கருவாக இருந்தாலும், அதை வேறு விதமான கோணத்தில் சொல்லி பார்வையாளர்களை சிரிக்க வைக்க முயற்சித்திருக்கிறார். முதல் பாதி முழுவதும் சிரிக்க முடியவில்லை என்றாலும், இரண்டாம் பாதியில் சில காட்சிகளால் சிரிக்க முடிகிறது. குறிப்பாக ராதிகாவின் காட்சிகளுக்கு நிச்சயம் சிரிப்பு வரும்.

 

பிளாக் காமெடி ஜானர் என்று பெரிய எதிரபார்ப்புடன் போனால், கீர்த்தி சுரேஷ் பிளாக் ஆடையுடன் வலம் வருகிறாரே தவிர, காமெடியை தேட வேண்டிய நிலையிலேயே காட்சிகள் பயணிக்கிறது.

 

மொத்தத்தில், ‘ரிவால்வர் ரீட்டா’ சத்தம் பத்தல.

 

ரேட்டிங் 3/5

Recent Gallery