Casting : Geetha Kailasam, Bharani, Saran Shakthi, Mullaiyarasi, Thendral Raghunathan
Directed By : Vipin Radhakrishnan
Music By : Mohammed Maqbool Mansoor
Produced By : Stone Bench Films, NJoy Films, Firo Movie Station - Kaarthekeyen.S, Firoz Rahim, Anjoy Samuel
இளம் வயதில் கணவரை இழந்த கீதா கைலாசம், தனது இரண்டு மகன்களை வளர்ப்பதற்காக கடுமையாக உழைக்கிறார். பால் வியாபாரம், விவசாயம் என்று கடுமையான உழைப்பாளியாக மட்டும் இன்றி, தைரியமான பெண்ணாகவும், ஜாக்கெட் அணியாத பழமைவாத பெண்மணியாகவும் வலம் வருகிறார்.
மூத்த மகனான விவாசாயி பரணி திருமணமாகி அம்மாவுடன் இருக்க, இளைய மகன் சரண் நன்றாக படித்து மருத்துவராகிறார். அவர் பணக்கார வீட்டு பெண்ணை காதலிக்க, அவரது காதலுக்கு பெண் வீட்டார் சம்மதம் தெரிவிக்கிறார்கள். பெண் வீட்டார் ஜாக்கெட் அணியாமல் இருக்கும் தனது அம்மாவை பார்த்து தவறாக நினைப்பார்கள் என்பதாலும், காலத்துக்கு ஏற்ப தனது அம்மாவும் மாற வேண்டும் என்பதாலும், அம்மா ஜாக்கெட் அணிய வேண்டும் என்று விரும்புகிறார். இதனால், தனது அண்ணியின் உதவியோடு தனது அம்மாவை ஜாக்கெட் அணிய வைக்கிறார்.
ஆனால், தன் மீது உள்ள அக்கறையை விட, மற்றவர்களுக்காகவே தன்னை மாற்ற முயற்சிக்கிறார்கள், என்பதை அறிந்து கொள்ளும் கீதா கைலாசம், எப்போதும் போல் சுதந்திரமாகவும், தனக்கு பிடித்தது போலவும் வாழ முடிவு செய்கிறார். ஆனால், அவரை எப்படியாவது மாற்ற வேண்டும் என்று குடும்பத்தார் முயற்சிக்க, அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் தான் மீதிக்கதை.
அங்கம்மாள் கதாபாத்திரத்தில் கதையின் நாயகியாக நடித்திருக்கும் கீதா கைலாசம், ஜாக்கெட் அணியாமல் நடித்தது, சுருட்டு பிடிப்பது என தான் ஏற்ற கதாபாத்திரத்திற்கு அதிகமாக உழைத்திருக்கிறார். அங்கம்மாள் மிக தைரியமான பெண்ணாக இருப்பதோடு கடுமையான உழைப்பாளி என்பதையும் தாண்டி, மனதில் நினைத்ததை சட்டென்று பேசுவதோடு, சுதந்திரமான பெண்ணாகவும் வலம் வரக்கூடியவர் என்பதை கீதா கைலாசம் தனது நடிப்பில் சரியான முறையில் வெளிப்படுத்தியிருந்தாலும், அங்கம்மாள் என்ற அந்த கம்பீரமான பெண்ணை தனது முதகத்திலும், உடல் மொழியிலும் வெளிக்காட்டுவதில் சற்று தடுமாறியிருப்பது தெரிகிறது.
அங்கம்மாளின் மூத்த மகனாக நடித்திருக்கும் பரணி, அவரது மனைவியாக நடித்திருக்கும் தென்றல், இளைய மகனாக நடித்திருக்கும் சரண், அவரது காதலியாக நடித்திருக்கும் முல்லையரசி, சரணின் நண்பராக நடித்திருக்கும் சுதாகர், சிறுமி யாஷ்மின் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் அங்கம்மாளுக்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் அன்ஜாய் சாமுவேல், படத்தில் இடம்பெறும் லொக்கேஷன்களையும் ஒரு கதாபாத்திரமாக ரசிக்க வைத்திருக்கிறார். படத்தின் ஆரம்பத்திலேயே பரந்த நிலப்பரப்பு ஒன்றை காட்டி பார்வையாளர்களின் கவனத்தை தன் கேமரா பக்கம் ஈர்ப்பவர், அங்கம்மாளின் வீடு, மலை, தென்னை மரங்கள் சூழ்ந்த வயல் வெளி என அனைத்து பகுதிகளையும் ஓவியங்களை பார்ப்பது போல் காட்சிப்படுத்தி கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறார்.
இசையமைப்பாளர் முகமது மக்பூல் மன்சூரின் பின்னணி இசை, காற்றும் பேசும் என்பதை நிரூபித்திருக்கிறது. பின்னணி இசை ஒலிப்பதே தெரியாதவாறு கதாபாத்திரங்களுடன் கதாபாத்திரமாக கலந்து பயணித்திருக்கும் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது.
படத்தொகுப்பாளர் பிரதீப் சங்கர், அங்கம்மாளின் மனதையும், அவரது எண்ணங்களையும் பார்வையாளர்களிடம் கடத்தும் பணியை சிறப்பாக செய்திருக்கிறார்.
பெருமாள் முருகனின் சிறுகதைக்கு, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் விபின் ராதாகிருஷ்ணன், அங்கம்மாள் என்ற பெண்மணியின் வாழ்வியலை எதார்த்தமாக சொல்ல முயற்சித்திருக்கிறார்.
தைரியம் மற்றும் சுதந்திரமான பெண்ணாக இருந்தாலும், பிள்ளைகள் மூலம் அவரது சுதந்திரம் பரிக்கப்படுவதும், அவர்களுக்காக அடிபனிவதும் என்று தனது அடாவடித்தனத்தை விட்டுக் கொடுக்கும் அங்கம்மாள் போல், பெண்கள் என்னதான் தைரியமாகவும், சுதந்திரமாகவும் வாழ்ந்தாலும், சில சூழ்நிலைகளால் அவர்களால் இறுதி வரை தங்களது விருப்பம் போல் வாழ முடிவதில்லை என்பதை இயக்குநர் விபின் ராதாகிருஷ்ணன் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
மொத்தத்தில், ‘அங்கம்மாள்’ சராசரி பெண்.
ரேட்டிங் 3/5